விஜய்யின் அடுத்த படம் கருத்தன்?





‘‘கதை  எனக்குப் பிடித் திருந்து, நல்ல இயக்குனர் அமைந்தால், நேரடியாக ஒரு மலையாளப் படத்தில் நான் நடிக்கத் தயார்!’’
- தனது ‘வேட்டைக்காரன்’ படம் கேரளாவில் ஓஹோவென்று ஓடியபோது இப்படிச் சொல்லியிருந்தார் விஜய். கேரளாவில் விஜய்யின் ஆக்ஷன் படங்களுக்கு செம மவுசு உண்டு. இப்போது கொச்சி, திருவனந்தபுரம் என கேரள நகரங்களிலும், இணையதளங்களிலும் பளிச்சிடுகிறது ‘கருத்தன்’ பட போஸ்டர்! ‘விஜய் நடிக்கும் முதல் மலையாளப் படம்’ என்ற அறிவிப்போடு!

‘கருத்தன்’ என்றால் நிகரற்ற வீரன் என அர்த்தப்படுத்தலாம். மஸ்தான் முஜீப் கான் என்பவர்தான் படத்தின் இயக்குனர். ஸ்கிரிப்ட் எழுதுபவராக எஸ்.என்.சுவாமி பெயர் இருக்கிறது. சி.பி.ஐ. சீரிஸில் அமைந்த பரபரப்பான ஆக்ஷன் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய சுவாமி, மலையாளத் திரையுலகில் பெரிதும் மதிக்கப்படுகிறவர். 

விஜய் முதன்முதலில் மலையாளத்தில் நடிக்கிறார் என்றால் அதை இவ்வளவு சாதாரணமாகவா அறிவிப்பார்கள்? சந்தேகத்தோடு பலரும் சுவாமியிடம் கேட்டபோது, ‘‘என்கிட்ட இதுபத்தி பேச்சுவார்த்தை நடத்தினாங்க’’ என்று அவர் சொல்லி வைக்க, பரபரப்பு பற்றிக் கொண்டது. யாரென்றே தெரியாத ஒரு இயக்குனரின் படத்தில், வெளியில் தெரியாத ஒரு தயாரிப்பாளரின் பேனரில் விஜய் மலையாளத்தில் நடிக்கிறார் என்றால் இருக்காதா பின்னே!

சந்தடிசாக்கில், இன்னொரு மலையாளப் படத்திலும் விஜய் நடிக்கப் போவதாக செய்தி வந்தது. ‘சாம்ராஜ்யம், சன் ஆஃப் அலெக்ஸாண்டர்’ என்ற மலையாளப் படத்தை பேரரசு இயக்குகிறார். இதில்தான் விஜய் நடிப்பதாக செய்தி.


‘கருத்தன்’ படத்தின் கதை ரொம்பவே பிடித்துவிட்டதால் விஜய் இதில் நடிக்கிறார் என எல்லா பத்திரிகைகளும் விலாவாரியாக எழுதித் தீர்த்த பிறகுதான் பட போஸ்டர்களை உற்றுப் பார்த்தனர். ‘அழகிய தமிழ்மகன்’ மற்றும் ‘சுறா’ பட ஸ்டில்களை வைத்து கிராஃபிக்ஸ் செய்து போஸ்டர்களை உருவாக்கி இருப்பது அப்போதுதான் புரிந்தது.

‘‘விஜய் இப்போது ‘துப்பாக்கி’ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு தமிழில் அவருக்கு கமிட்மென்ட்கள் இருக்கின்றன. இப்போதைக்கு அவர் மலையாளத்தில் நடிப்பது சாத்தியமில்லை. ‘கருத்தன்’ என்ற படம் பற்றி அவரிடம் யாரும் பேசவும் இல்லை. கதை சொல்லவும் இல்லை. இது வெறும் வதந்தி’’ என்கிறார் விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார்.

ஹீரோ கால்ஷீட் இல்லாமல் போஸ்டர் ரெடி பண்ணிடலாம்; படத்தை எப்படி எடுப்பாங்க?
- ரெமோ