இதானா உங்க ஃபீலிங்?





ஜேம்ஸ்பாண்ட் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது நடிகர் ஷாமின் அந்த பிச்சைக்கார கெட்டப். இதுநாள்வரை பார்த்த ஷாமுக்கும், ‘6’ படத்துக்காக மெனக்கெடும் ஷாமுக்கும் சம்பந்தமே இல்லை. ‘இவருக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்!’
- வி.சரஸ்வதி ஏழுமலை, புதுச்சேரி.

அழகான பெண்ணைக் கண்டால் இன்று வரை மயிலே என்றுதான் வர்ணிக்கிறோம்... அந்த மயிலையே விஷம் வைத்துக் கொல்ல நம்மவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

‘திருமணம் வரை என்ஜாய்... அதுக்கப்புறம் குட்பாய்’ என்ற ரீதியில் பிரேம்ஜி அமரனின் கலகலப்பு பேட்டி ரசிக்கும்படி இருந்தது. இந்த தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு எந்தப் புண்ணியவதி கழுத்தை நீட்டப் போறாரோ?!
- ‘அன்னபூரணா’ மூர்த்தி, மஞ்சக்குப்பம்.

பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, அட்டையில் கமலோடு ஆண்ட்ரியாவும், பூஜாவும் ஜொலித்திருக்கிறார்கள். கமலிடம் பூஜா சொல்லாத ‘ஃபீலிங்’ டூயட் இல்லாததுதானா? நான் என்னென்னவோ கற்பனை பண்ணிட்டேன் போங்க!
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

‘எகிறுகிறது அரிசி விலை’ அதிர்ச்சி அளிக்கும் அபாய அறிவிப்புதான். தமிழகத்தில் சாகுபடியின் பரப்பளவு குறைந்து கொண்டே வரும் நேரத்தில் கர்நாடகத்தில் சாகுபடி பரப்பளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதே நிலை நீடித்தால் மக்கள் பொறுமையின் எல்லைக்கே போய்விடுவார்கள் என்பதை மத்திய, மாநில
அரசுகள் உணர்ந்து செயல்படுவது நலம்!
- எம்.எஸ்.இப்ராகிம்,
மடிப்பாக்கம்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் கங்கா-யமுனா கதை, மனதை கலங்கடித்துவிட்டது. இந்தப் பரிதாப நிலையை வைத்து ‘மாற்றான்’ போன்ற படம் எடுப்பவர்கள், இப்படி ஒட்டிப் பிறந்து வாழ்பவர்களுக்கு உதவி செய்தால் மேலும் புண்ணியமுண்டு!
- அ.சுகுமார்,
காட்டுக்கானூர்.

செயின் திருட்டைத் தடுக்க கழுத்து வரை மூடிய உடையா? நம்ம சென்னைக்கும் அது வரட்டுமே என்று சொல்ல உதடு துடிக்கிறது. ஆனால், சென்னையின் வெயிலை நினைத்து வேண்டவே வேண்டாமென மனசு தடுக்கிறது. நம் ஊரில் எல்லோரும் ஃபேஷன் ஜுவல்லரிக்கு மாறுவதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு!
- கண்ணதாசன், சென்னை-21.