ரஜினி ஸ்மைல்தான் பெரிய விருது!



பிரமிக்கிறார் விக்ரம் வேதா வசனகர்த்தா

- திலீபன் புகழ்

‘‘காந்தியோட அப்பா காந்தியா? காந்தியை சுட்டுக் கொன்ன கோட்சே பையன் கோட்சேயா?’’ ‘‘வாலு இருக்குங்கிறதுக்காக, எலியும் பூனையும் ஒண்ணாயிடுமா?’’ ‘விக்ரம் வேதா’வில் வருகின்ற ஒவ்வொரு வசனமும் அப்ளாஸை அள்ளுகிறது. ‘‘என்ன மாதிரியான ஆட்களுக்கு பெருசா என்ன சார் ஃபிளாஷ்பேக் இருக்கப் போகுது?’’

தான் எழுதிய வசன பாணியிலேயே பேசத் தொடங்கினார் மணிகண்டன். படத்தின் வசனகர்த்தா. சுகுர் கட்டிங் போலீஸாக அதே ‘விக்ரம் வேதா’வில் நடிப்பிலும் கலக்கியிருப்பவர். ‘‘சென்னை போரூர்தான் பூர்விகம். சின்ன வயசுல இருந்தே நடிகனாகணும்னு ஆசை. இஞ்சினியரிங் படிக்கிறப்ப கல்ச்சுரல்ஸ்ல மிமிக்ரி செய்வேன். அதைப் பார்த்துட்டு ஃப்ரெண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சில கலந்துக்க சொன்னான்.

கிட்டத்தட்ட ஐநூறு பேர் கூட முட்டி மோதி ‘ரன்னர் அப்’ பாக வந்தேன். அப்படியே எஃப்.எம்.ல ஆர்.ஜே வேலை. இப்படியே வாழ்க்கை போய்டுமோனு கவலைப்பட்டேன். நம்ம குரல் திறமையை வைச்சு சாதிக்கணும்னு வாய்ப்பு தேடினேன். அப்பத்தான் தமிழ் டிஸ்கவரில ஆங்கில ஆவணப்படம் ஒண்ணுல கமல் சாருக்கு தமிழ் டப்பிங் பேச வாய்ப்பு கிடைச்சது. சேனல் எடிட்டர் ரெண்டு ட்ராக்ல எது உண்மையான கமல் வாய்ஸ்னு குழம்பிப் போயிட்டார். டெல்லில இருந்து டிஸ்கவரி டீமே நேர்ல வந்து பாராட்டினாங்க...’’ என்று சொல்லும் மணிகண்டன், வசனகர்த்தாவானது தனிக்கதை.

“‘நரை எழுதும் சுயசரிதம்’னு ஒரு குறும்படத்தை எழுதி, இயக்கி, நடிச்சேன். ஏகப்பட்ட பாராட்டு. வசனங்கள் கவனிக்கப்பட்டது. அப்பதான் நம்மாலும் வசனம் எழுத முடியும்னு நம்பினேன். ஒரு வருஷ இடைவெளிக்கு அப்புறம் ‘பீட்சா 2’க்கு வசனம் எழுதினேன். அடுத்து ‘காஸி அட்டாக்’. ஒரே நைட்ல இந்த தெலுங்கு டப்பிங் படத்துக்கு எழுதிக் கொடுத்தேன். நல்ல பேரு கிடைச்சது...’’ என்றபடி ‘விக்ரம் வேதா’ வாய்ப்பு கிடைத்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

‘‘ஒருநாள் விஜய் சேதுபதி அண்ணன் ஃபோன் பண்ணி ‘புஷ்கர் காயத்ரி’ உன் நம்பர் கேட்டாங்க. கொடுத்திருக்கேன். போய்ப் பாரு’னு சொன்னார். நடிக்கத்தான் கூப்பிட்டிருக்காங்க போலனு போனேன். ஆனா, ஸ்க்ரிப்ட் கொடுத்து படிக்கச் சொன்னாங்க. படிச்சுட்டு ப்ளஸ், மைனஸ்னு எல்லாத்தையும் எழுதிட்டுப் போனேன். வெறுமனே மைனஸ் மட்டும் எழுதாம அத ப்ளஸ்ஸா மாத்துறதுக்கான ஐடியாஸும் கொண்டு போனேன். இந்த அணுகுமுறை அவங்களுக்கு பிடிச்சிருந்தது. ‘படத்துக்கு வசனம் எழுதுங்க’னு சொன்னாங்க.

மிகப்பெரிய சான்ஸ். மனசார உழைச்சேன். விசாரணை காட்சிகளுக்கு வசனம் எழுதத்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன். அடிச்சு அடிச்சு எழுதிப் பார்த்தப்ப எலி-பூனை கான்செப்ட் சிக்கிச்சு. நான் எழுதினதை, இயக்குநர்கள் மெருகேத்தினதை எல்லாம் மாதவன் - விஜய் சேதுபதி அண்ணா தங்களோட டயலாக் டெலிவரியால வேற லெவலுக்கு கொண்டு போயிட்டாங்க...’’ நெகிழ்ந்தபடி விஜய் சேதுபதிக்கு நன்றி சொல்லும் மணிகண்டன், அவரை முதன் முதலில் ‘காதலும் கடந்து போகும்’ ஷூட்டிங்கில்தான் சந்தித்திருக்கிறார்.

‘‘அப்பவே நாங்க அண்ணன் தம்பியா ஆகிட்டோம். நான் வியந்து பார்க்கிற நடிகர். எங்களுக்குள்ள ஒரு அன்கண்டிஷனல் லவ் இருக்கு. எல்லா நிலமைலயும் எனக்கு உதவியா இருந்திருக்கார்...’’ கசியும் மணிகண்டன், இப்போது ரஜினியுடன் ‘காலா’வில் நடித்து வருகிறார். ‘‘யூடியூப்ல ‘டீ கடை தாட்ஸ்’னு ஒரு சேனல் நடத்தறேன். அதைப் பார்த்துட்டு இயக்குநர் பா.ரஞ்சித் சார் போன் பண்ணி பாராட்டினார். திடீர்னு ஒரு நாள் அவர் ஆபீஸ்ல இருந்து ஆடிஷனுக்கு வரச் சொன்னாங்க.

பலகட்ட வடிகட்டலுக்குப் பிறகு என்னை செலக்ட் செய்தாங்க. அப்புறம்தான் ரஜினி சாரோட நடிக்கப் போறேன் என்கிற விஷயமே தெரிஞ்சது. ஆடிப்போயிட்டேன். தலைவர் மாதிரி காலேஜ்ல மிமிக்ரி செஞ்சு பரிசு வாங்கியிருக்கேன். அப்படிப்பட்டவன், இப்ப தலைவர் கூடவே ராப்பகலா நடிச்சிட்டிருக்கேன்!

‘விக்ரம் வேதா’ பார்த்துட்டு ரஜினி சார் ரொம்பவே பாராட்டினார். ‘இவ்வளவு சின்னப் பையனா இருக்கீங்க... ஆச்சரியமா இருக்கு’னு தட்டிக் கொடுத்தார். ஸ்பாட்ல என்னை எப்ப பார்த்தாலும் சின்னதா ஸ்மைல் பண்ணுவார். இதைவிட வேறென்ன விருது வேணும் சொல்லுங்க..?’’ புருவத்தை உயர்த்தியபடி கேட்கிறார் மணிகண்டன்.