நல்ல படம், வெற்றிப் படம், சந்தோஷமான படம்... கூடவே சரியான மாஸ் படம்!
விவேகம் அமர்க்களம்
-நா. கதிர்வேலன்
‘ஹாட்ரிக்’குக்கு காத்திருக்கிறார் டைரக்டர் சிவா. கடைசிகட்ட பரபரப்பில் இன்னும் ‘விவேகத்’திற்கு மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். ‘‘படம் நல்லா வந்திருக்கு. எனக்கு நல்ல திருப்தி. நல்ல படம், வெற்றிப் படம், சந்தோஷமான படம். கூடவே சரியான மாஸ் படம். உடன் இன்டர்நேஷனல் ஸ்பை த்ரில்லர், பிரமாண்டம், ஆக்ஷன்னு அப்படியே மக்களுக்கு ஏத்த படம்னா இதுதான்...’’ புன்னகைக்கும் சிவாவோடு கொஞ்சம் காபி... நிறைய பேச்சு.
 ‘‘எனக்குத் தெரியும். ‘விவேகம்’ படத்திற்கு கிடைத்திருக்கிற எதிர்பார்ப்பை புரிஞ்சிக்க முடியுது. ஆரம்பிக்கும்போதே படத்தின் வித்யாசத்தை உணர்ந்தோம். அனாயாசமான உழைப்பு தேவைப்படுகிற படம். இன்டர்நேஷனல் உளவாளியை சித்தரிக்கிற புதுவகை. இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு படம் வந்ததேயில்லை. ஏன் இப்படி ஒரு வகைக்கு முயற்சிக்கக் கூடாது என்றபோது கிடைத்த விடைதான் ‘விவேகம்’ படம்’’ சிவாவின் வார்த்தைகளில் மகிழ்ச்சியின் உற்சாகம்.
எப்படியிருக்கும் ‘விவேகம்’? நிறைய உழைப்பிற்கு அஜித் தயாராக இருந்தார். நீண்ட பயணத்திற்கு சுவாரஸ்யத்தோடு காத்துக் கொண்டு இருந்தது டீம். மனிதர்களின் கால் படாத இடங்கள், கேமரா தன் கண்களால் பார்க்காத இடம்னு தேர்ந்தெடுத்திருந்தோம். சர்வதேச உளவாளி என்கிறபோது அதற்கான முனைப்பு, பயணம், ஆக்ஷன், அசராத வேகம்னு அஜித்திற்கு செமயா வேலை வைக்கிற படம்.
கிட்டத்தட்ட மொத்தப்படமும் வெளிநாட்டில்தான். இந்த டீமில் இருக்கிற அஜித் - விவேக் ஓபராய் இரண்டு பேரும் நண்பர்கள். ஆக்ஷன் படம்தான். ஆனால், எமோஷனுக்கான இடம் அப்படியே பரவியிருக்கும். உணர்வுகள் இல்லாம தமிழ்ப்படம் தயாரிக்க முடியாது. ஆனால், அதனோடு ஆக்ஷன் இணையும்போது அந்தப் படத்திற்கு கிடைக்கிற அமைப்பே தனி. ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பிற்காக சுற்றித் திரிந்தோம். பல்கேரியா, குரோஷியா, ஆஸ்திரியா, செர்பியான்னு இன்னும் சொல்லி முடியாத இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கு.
அஜித்திற்கு அவ்வளவு நெருங்கியவரா ஆகிட்டிங்க... எல்லோரும் ‘வீரம்’ வெற்றி பெற்றபிறகு ‘வேதாளம்’ கொடுத்தார்னு நினைச்சாங்க. அப்படியெல்லாம் இ்ல்லை. ‘வீரம்’ ஷூட்டிங் ஆரம்பிச்ச நாலாவது நாளிலேயே ‘நாம் இரண்டு பேரும் சேர்ந்து அடுத்த படமும் பண்றோம்’னு சொன்னார். ஆச்சரியம் தாங்கமுடியல. அவருக்கு என் கேரக்டர், சின்சியாரிட்டி, மேக்கிங் எல்லாம் பிடிச்சிருக்கு.
அந்த நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்றி வருவதால் எனக்கு இந்த வாய்ப்புகள் வருதுன்னு நம்புறேன். அதுக்கும் மேலே ஆண்டவன்னு சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கு. அஜித் தொழிலுக்கும், டீமுக்கும் அவ்வளவு உண்மையாக இருப்பார். அந்த அளவு உண்மை நம்மகிட்டேயும் இருந்ததுன்னா எந்தப் பிரச்னையும் இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த ஒரு இடத்திலும் பிரச்னை வராது. ஒவ்வொரு நாளும் அவர் என்னை இம்ப்ரஸ் பண்ணிக்கிட்டே இருப்பார்.
 இவ்வளவு ஸ்டைலாக ஆகியிருக்கார்.. ஸ்டைல் அவர் கூடப் பிறந்தது. ஆனால், ஆக்ஷன், வெளியூர் மைனஸ் 15 டிகிரிக்கு ஏத்த மாதிரி அவர் உடம்பை தயார்படுத்திய விதம் எல்லாம் சூப்பர். எலும்புக்குள் போய் உட்கார்கிற குளிர்ல அவர் அதிரடி செய்தது எல்லாம் வரலாறு. இந்த ஸ்கேல், பாடி லாங்வேஜ் அப்படியே பக்கா! இந்த நடிப்பு, ஸ்டைலில் வேறு எந்த படமும் அவர் செய்ததில்லை. எல்லாமே புதுசா இருக்கு.
இத்தனைக்கும் அவருக்கு நடந்திருக்கிற ஆபரேஷன்... அதனோட சின்னச் சின்ன பிரச்னைகள் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு செய்திருக்கார். சர்வதேச உளவாளின்னா அதுக்கு ஒரு கெத்து வேணுமில்லையா..? அது இருக்கு. அவரோட ஒரிஜினல் கேரக்டரோட என்ரிச் இந்த படத்துல ஒர்க்அவுட் ஆகியிருக்கு. அதனால் அவ்வளவு நேர்த்தி, அசல்தன்மை இருக்கு. இன்டர்நேஷனல் ஸ்பைன்னா அப்படியே நம்பலாம்.
விவேக் ஓபராயை கொண்டு வந்திருக்கீங்க... இதில் அஜித்திற்கு நண்பன். அவருக்கு தமிழ்ப்படத்தில் நடிக்க ரொம்ப ஆசை. ‘அஜித்தோடு நடிக்க ரெடியா இருக்கேன். நீங்க கதை சொல்லிட்டா போதும்’னு சொன்னதும் நான் சொன்னேன். உடனே ஓகே. சொன்னார். அவரை சகோதரர் மாதிரி அஜித் நடத்தினதும், அவர் குளிர்ந்து போனதும் யூனிட்டில் பார்க்கவே சந்தோஷமா இருந்தது. தமிழில் அவருக்கான நல்ல அறிமுகம் காத்திருக்கு.
அக்ஷரா ஹாசனை தமிழில் அறிமுகம் பண்ணிட்டீங்க... வெளிநாட்டில் படித்து வளர்ந்த கேரக்டர். அவ்வளவு கச்சிதமாக இருந்தார். படத்தில் திருப்புமுனை கொடுக்கிற கேரக்டர். தமிழில், அதுவும் அஜித் படத்தில் அறிமுகமாவதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
அஜித் - காஜல் காம்பினேஷன்... இரண்டு பேரும் ரொமான்ஸ் ஆங்கிளில் நல்லா இருந்தாங்க. காஜல்கிட்ட பிடிச்சது, வேலை நிமித்தமான கட்டுக்கோப்பு. ஒரு குறை சொல்ல முடியாது. தான் ஒரு ஸ்டார்ங்கிற நினைப்பு அவருக்கு ஷூட்டிங்கின்போது வரவே வராது. காட்சி நல்லா வரணும் என்பதில் அஜித்திற்கு இருக்கிற அக்கறை இவரிடமும் உண்டு.
இப்பவும் அனிருத்... எங்களுக்குள்ளே நல்லா செட்டாகிவிட்டது. இப்ப பார்த்தால் படத்தோட இன்னொரு ப்ளஸ் அனிருத். ‘ஆலுமா டோலுமா’ மாதிரி பட்டையைக் கிளப்புகிற பாட்டு அவரால்தான் முடியுது. இதில் இருக்கிற பாட்டு எல்லாமே அவ்வளவு பொருத்தம். ‘உலகமே உன்னை எதிர்த்து நின்னாலும்...’ ஆரம்பிச்சு வருகிற வசனத்திற்கு இன்னிக்கு அஜித் ரசிகர்கள் கட்டுப்பட்டுப் போய் இருக்காங்க. இந்த மாதிரி மாஸ் ஹீரோவுக்கான மாஸ் அம்சங்கள் ‘விவேக’த்தில் இருக்கு.
ஆக்ஷனில் டூப் இல்லாம அஜித் பண்ணியதைப் பார்த்தாலே நமக்கு மூச்சிரைக்கும். மலை ஏறணுமா? பைக்கில் ஸ்பீட் பயணமா? எல்லாத்துக்கும் சரின்னு முதலில் வந்து நிற்பார். அந்த வேகத்திற்கு கேமராமேன் வெற்றி பரபரப்பாக நின்னு செயல்படுவார். ‘அடுத்த படமும் நீங்கதானா’ன்னு எல்லோரும் கேட்கிறாங்க. ஆண்டவனும், அஜித்தும் கட்டளையிட்டால் நான் ரெடி!
|