பெண்ணுடல் போற்றுவோம்



காமிக்ஸ் வழியே விழிப்புணர்வு!

-ச.அன்பரசு

காமிக்ஸ் யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தகப் பிரியர்கள் பெரும்பாலும் காமிக்ஸ் வழியாகவே வாசிப்புப் பழக்கத்துக்குள் நுழைந்திருப்பார்கள். காலம் மாற மாற மக்களின் ரசனையும், தொழில்நுட்பமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதற்கு ஏற்ப இரும்புக்கை மாயாவி முதல் ஜேம்ஸ் பாண்ட் வரை எல்லா சாகச நாயகர்களும் காமிக்ஸில் இருந்து சினிமாவுக்கு வந்துவிட்டார்கள்.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் காமிக்ஸ்கள் நம் சமகாலப் பிரச்சனைகளைப் பேசும் தளமாகவும் இயங்கத் தொடங்கியுள்ளன. இதோ காமிக்ஸ் மூலமாக பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் அமெரிக்காவின் போஸ்டன் நகரைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளரான அரீனா அபாடியன் ஹெய்ஃபெட்ஸ்.

உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புற பெண்களுக்கான ராஜீவ்காந்தி மகிளா விகாஸ் பரியோஜனா எனும் திட்டத்தில் 2014ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருபவர் அரீனா. இவரது காமிக்ஸின் பெயர் ‘Spreading Your Wings’ ‘‘முதன் முதலில் இந்தியாவில் உத்தரப் பிரதேசத்துக்கு வந்து கிராமப்புறப் பெண்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியபின்தான் மாதவிடாயின் சவால்களை அனுபவபூர்வமாக உணரத் தொடங்கினேன்.

அமெரிக்காவில் பள்ளியின் வகுப்பில் எனது முதல் மாதவிடாய் வந்தபோது, என் பெற்றோர் பூக்களோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் என்னை அரவணைத்துக் கொண்டனர். ஆனால், இது இந்தியாவிலோ பதற்றமும் வலியும் கொண்டதாக இருப்பது எனக்கு விசித்திரமாக இருந்தது...’’ என்று தன் அனுபவங்களைப் பேசத்தொடங்குகிறார் அரீனா.

‘‘பொதுவாக நம் பாடப்புத்தகங்களில் உடலைப் பற்றிய அடிப்படையான விஷயங்கள் சொல்லப்பட்டாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, உடலில் நுட்பமான செயல்பாடுகள் எவ்வாறு நடக்கின்றன என்பதைப் பற்றி எல்லாம் இன்னமும் ஆழமாக அறியாதவர்களாகவே உள்ளோம்.

கிராமப்புறப் பெண்களிடம் சுகாதாரம்  தொடர்பாக ஆராய்ச்சி செய்தோம். அதைத் தொடர்ந்து, பல்வேறு உள்ளூர் என்ஜிஓக்களை ஒருங்கிணைத்து இளம்பெண்களுக்கு பாலுறுப்பு சுத்தம் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தினோம். இந்தியச் சமூகத்தில் பெண்களின் பாலுறுப்பு பற்றி பேசுவது அவமானத்துக்குரியதாகவே கருதப்படுகிறது. இந்த அறியாமைதான் பிரச்னைகளுக்கான மூல காரணம். தங்கள் உடல் குறித்தும், அதன் இயல்பு குறித்தும் படித்த டீன் ஏஜ் பெண்களுக்குப் புரிந்தாலும் அவர்களால் அவர்களது வீட்டாரிடமோ மற்றவர்
களிடமோ அதைப் பேச முடிவதில்லை.

இதெல்லாம் பேசக் கூடாத விஷயங்கள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளதுதான் காரணம்...’’ என்று சொல்லும் அரீனாவுக்கு, சித்திரக்கதை ஐடியா கிடைத்தது ஒரு துயரமான சம்பவத்தின் மூலம்தான். ‘‘எங்களின் பயிற்சி வகுப்புக்கு வந்த ஒரு பெண்ணின் தோழி, மாதவிடாய் ரத்தப்போக்குக்கு நாப்கினாக சைக்கிளைத் துடைக்கும் கந்தல் துணியைப் பயன்படுத்தியிருக்கிறார். இதன் விளைவாக பாலுறுப்பில் நோய்த் தொற்று ஏற்பட்டது.

ஆனால், அதைப் பற்றி வெளிப்படையாக எப்படிச் சொல்வது என்று கூச்சப்பட்டுத் தயங்கியதால் அவரது கருப்பை பாதிக்கப்பட்டு உயிரையே குடித்துவிட்டது... இந்தச் சம்பவம்தான் நான் போகவேண்டிய தூரம் அதிகம் என்பதை எனக்கு உணர்த்தியது. அந்த எளிய பெண்ணின் மரணம் பல நாட்கள் என்னைத் தூங்க விடவில்லை. அடுத்த தலைமுறையை உருவாக்கும் பெண்ணின் பாலுறுப்பை பற்றிய அறியாமையை மாற்ற நினைத்தேன். நாம் செய்யும் விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் பிடித்த மீடியமாக இருக்க வேண்டும்.

காமிக்ஸ் ஐடியா அப்படித்தான் கிடைத்தது. தகவல்களை எழுத்துக்களாக அச்சிடாமல் படங்களாக அச்சிட்டால் குழந்தைகளுக்கும் அது எளிதாகப் புரியும் என்று நினைத்தேன். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவரும் எந்தப் புத்தகங்களும் குழந்தைகளுக்குத் தங்களுடைய உடலைப் பற்றிய அறிவை வெளிப்படையாகக் கூறவில்லை என்பதால், குழந்தைகளும் படிக்க சுவாரஸ்யமாக உள்ள படக்கதைகள் கொண்ட காமிக்ஸை உருவாக்கினோம் நூறு பக்கங்கள் கொண்டதாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாகிவரும் ‘Spreading Your Wings’ காமிக்ஸ் மக்களது நிதிஉதவியுடன் 2,000 பிரதிகள் தயாரிக்கப்பட உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், என்ஜிஓக்களுக்கு குறைந்த விலையில் தர முடிவெடுத்துள்ளோம்...’’ என்கிறார் அரீனா.                     

உலக சுகாதாரச்சந்தை!

உலக அளவில் பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களின் சந்தை மதிப்பு  - 42.7 பில்லியன், ஆசிய பசிபிக் பகுதி 48.9%

2016 - 2022ல் வளரும் சந்தை வளர்ச்சி - 6.1%

இந்தியாவில் சுகாதாரம்!

இந்தியாவில் நாப்கின் பயன்படுத்தும் பெண்களின் அளவு - 12%

இந்தியாவின் சுகாதாரச் சந்தை மதிப்பு - 3,950 மில்லியன் டாலர்கள் (2004 - 2005)

(Global Nutrition Report 2016, Euromonitor International 2016, National Family Health Survey 4 data for 2015-16 , technavio.com)