விஜயனின் வில்
கே.என்.சிவராமன் - 38
‘‘எப்படி அவ்வளவு துல்லியமா நீ சொல்றனு தெரியலை ஆதி... இரு நான் முடிச்சுடறேன். ஒருவேளை இதுக்கான வலுவான ஆதாரங்கள் உன்கிட்ட இருக்கலாம். ஆனா, சரஸ்வதி நதி தொடர்பா சில கேள்விகள் இருக்கு...’’ ‘‘கோ அஹெட் க்ருஷ்...’’‘‘ரிக் வேதத்தை நானும் படிச்சிருக்கேன். சிந்து மிகப்பெரிய நதியா இருந்தாலும் சரஸ்வதிக்கு கொடுக்கப்படற முக்கியத்துவத்தை அந்த ஆறுக்கு ரிக் வேதம் தரலை.
‘அனைத்து நதிகளின் அன்னை...’; ‘மேன்மையானவற்றுள் மேன்மையானது, கட்டுக்கடங்காத நதிகளில் தலைமையானது...’னு அதைப் போற்றியிருக்காங்க. ஏன், ‘சுலோகங்களை ஊக்குவிக்கும் நதி’னு கூட பதிவு செய்திருக்காங்க. இதையெல்லாம் வைச்சுப் பார்க்கும்போது அந்த நதிக்கரைலதான் ரிக் வேதம் எழுதப்பட்டிருக்கணும்... ஐ மீன் பாடப்பட்டிருக்கணும். ஆனா...’’ ‘‘ரிக் வேதம் வர்ணிக்கிற மாதிரி ஒரு நதி இந்தியாவுல இல்லை...
 அது கவிஞர்களோட கற்பனைல தோன்றிய நதினு வரலாற்றாசிரியர்கள் சொல்றாங்களே... சிலபேர் ஆப்கானிஸ்தான்ல இருக்கிற ‘ஹெல்மந்த்’ ஆற்றைத்தான் சரஸ்வதியா ரிக் வேதம் பதிவு செய்திருக்குனு எழுதியிருக்காங்களே... இதுல எது உண்மை? இந்தக் கேள்வியைத்தானே க்ருஷ் கேட்க வர்ற..?’’ ‘‘எஸ் ஆதி...’’ ‘‘என்ன ஐஸ்... உன் கண்ணுல தொத்தி நிக்கிற வினாவும் இதுதானே..?’’ ‘‘யா...’’ ஐஸ்வர்யா தோளைக் குலுக்கினாள்.
‘‘எனக்கு தெரிஞ்சதை சொல்றேன். ‘நதிஸ்துதி சூக்தம்’னு ஒரு சுலோகம் இருக்கு. இதுல கிழக்கில் தொடங்கி மேற்கு வரையுள்ள முக்கியமான நதிகள் குறிப்பிடப்பட்டிருக்கு. இந்த சுலோகத்தோட ஆரம்பத்துல கங்கை வருது. அதே மாதிரி யமுனைக்கும் சட்லஜுக்கும் இடைல சரஸ்வதி இருக்கிறதா தெளிவா பதிவு செய்திருக்கு...’’ ‘‘...’’ ‘‘இந்த வர்ணனைக்கு பொருத்தமா வருவது ‘காகர்’ நதிதான். இதனோட தரைப்பகுதி இப்ப வறண்டிருக்கு. ஆனா, செயற்கைக்கோள் புகைப்படங்களும், நில சுற்றாழ்வுகளும் ஒரு காலத்துல இது மிகப்பெரிய நதியா இருந்திருக்குனு காட்டுது...’’ ‘‘ஐ அக்ரி...’’ கிருஷ்ணன் ஆமோதித்தான்.
‘‘அப்புறமென்ன? இந்த ‘காகர்’ ஏன் சரஸ்வதியா இருக்கக் கூடாது..?’’ ‘‘ஆர்க்யூமென்ட் நல்லா இருக்கு. பட், காய்ந்து வறண்டு போன சரஸ்வதியை ரிக் வேதம் வர்ணிக்கலையே..?’’ ஐஸ்வர்யா இடைமறித்தாள். ‘‘ஆதி சொல்ற பாயிண்ட் புதுசில்லை ஐஸ். சரஸ்வதி நதியை காகர் நதியோட இணைத்துப் பார்க்கிற பார்வை 19ம் நூற்றாண்டுலயே இருந்திருக்கு. பிரிட்டிஷ் ஆய்வாளர்களும், வரைபடத் தயாரிப்பாளர்களும் வறண்டு போன அந்த வழித்தடத்தை பழைய நூல்களும், புராணங்களும் சுட்டிக் காட்டற நதியோட ஒப்பிட்டிருக்காங்க...’’ எங்கோ பார்த்தபடி கிருஷ்ணன் முணுமுணுத்தான்.
‘‘எக்ஸாக்ட்லி. இப்ப கிடைக்கிற ஆதாரங்களும் ஒருமாதிரி இதுக்கு வலு சேர்க்குது...’’ என்ற ஆதி, தொடர்ந்தான். ‘‘பின்னாடி வந்த வேதங்களும் சரஸ்வதி நதி தொடர்பா ரிக் வேதம் சொன்னதைத்தான் ஆமோதிக்குது. ஆனா, அடுத்த தலைமுறைல வந்த நூல்கள் இந்த நதி வறண்டுபோனதைப் பத்தி திரும்பத் திரும்ப கூறுது.
உதாரணமா ‘பஞ்சவம்ச பிராமணா’ பாலைவனத்துல சரஸ்வதி மறைஞ்சு போயிட்டதா சொல்லுது. இந்த நதி எப்படி மறைஞ்சது அல்லது வறண்டது..? இந்தக் கேள்வி நமக்கு முக்கியமில்லை... அவசியமில்ல. அதை புவியியல் வல்லுனர்கள் ஆராயட்டும். நமக்குத் தேவை அர்ஜுனனின் வில்!’’ ‘‘...’’ ‘‘இப்ப உன் கேள்விக்கு வர்றேன் க்ருஷ்... ‘அவ்வளவு துல்லியமா விஜயனின் வில் சரஸ்வதி நதிக்குதான் சொந்தம்னு எப்படி நீ சொல்ற’னுதானே கேட்ட..?’’ ‘‘...’’
‘‘நல்ல கேள்வி. இதுக்கான பதில் ரிக் வேதத்துலயே இருக்கு. தன் காலத்துக்கு முன்னால் இருந்த கவிகளைப் பத்தியும் அவங்க இயற்றின நூல்கள் பத்தி யும் ரிக் வேதம் பேசுது. ஆனா, அந்தக் கவிகள் யாருன்னோ அவங்க இயற்றின நூல்கள் என்னன்னோ அது சொல்லலை. இப்ப வரைக்கும் நமக்கும் தெரியலை. அகழ்வாராய்ச்சில ஒருவேளை பின்னாடி கிடைக்கலாம். சொல்ல வந்தது ரிக் வேதத்துக்கு முன்னாடியே அர்ஜுனனின் வில் இருந்தது... அது சரஸ்வதி நதிக்கு சொந்தம் என்பதுதான். புவியியல் காரணங்களால சரஸ்வதி வறண்டது. இதோ இப்ப பாலாறு வறண்டு வர்ற மாதிரி.
அதனால ஹரப்பா நாகரீக மக்கள் மெல்ல மெல்ல கங்கை சமவெளில குடியேற ஆரம்பிச்சாங்க...’’ ‘‘இதனாலதான் கங்கையை பழிவாங்க சரஸ்வதி காத்திருக்கு. நம்மை பகடைக்காயா பயன்படுத்தப் போகுதுனு சொல்றியா..?’’ இமைகள் துடிக்க ஐஸ்வர்யா கேட்டாள். ‘‘யெஸ்...’’ கம்பீரமாக ஆதி அறிவித்தான். ‘‘அப்படீன்னா உங்க ‘Intelligent Design’ அமைப்போட கொள்கையை நீ ஏத்துக்கலையா?’’ சிரித்தபடி கிருஷ்ணன் கேட்டதும் ஆதி நிமிர்ந்தான். ‘‘என்ன சொல்ற..?’’
‘‘உண்மையை. அர்ஜுனனுக்கு வில் எப்படி கிடைச்சது..?’’ ‘‘...’’ ‘‘ஒரு மன்னன். அவன் பேரு சுவேதகி. யாகங்கள் செய்யறதுல அவனுக்கு ஈடுபாடு அதிகம். தொடர்ந்து நூறு வருஷங்கள் ஒரு யாகத்தை செய்ய விரும்பினான். இதுக்காக சிவனை நோக்கி தவம் செஞ்சான். காட்சி தந்த சிவனிடம் யாகம் செய்யற வரத்தை கேட்டான்...’’ ‘‘...’’ ‘‘முதல்ல 12 வருஷங்கள் வேள்வி செஞ்சு அக்னியை திருப்திப்படுத்து. பிறகு உதவறேன்னு சிவன் சொன்னார். மன்னனும் அதே மாதிரி செஞ்சான். உடனே சிவன், ‘நூறு வருட யாகத்துக்கு ஏற்பாடு செய்.
துர்வாசர் உதவுவார்’னு சொன்னார். மன்னன் ஆசைப்பட்ட மாதிரியே நடந்தது. நூறு ஆண்டுகள் யாகம் செஞ்சு முடிச்சான்...’’ ‘‘...’’ ‘‘ஆனா, ஏகப்பட்ட நெய்யை சாப்பிட்டதால அக்னி தேவனுக்கு மந்த நோய் தாக்கிச்சு. பிரம்மாகிட்ட போய் என் வியாதி தீர வழி சொல்லுங்கனு கேட்டார். ‘எப்படி தேவர்களுக்கு உதவ காண்டவ வனத்தை எரிச்சியோ அப்படி இப்பவும் ஒரு காட்டை எரிச்சா உன் நோய் தீரும்.
அர்ஜுனன் இதுக்கு உதவுவான்’னு பிரம்மா கைகாட்டினார்...’’ ‘‘...’’ ‘‘அதே மாதிரி கிருஷ்ணர் துணையோட அர்ஜுனன் அக்னிக்கு உதவினான். இதுக்கு நன்றி செலுத்தும் விதமா அவனுக்கு ஒரு வில்லை அக்னிதேவன் பரிசளிச்சார். அதுதான் காண்டீபம். இதைத்தான் நாங்க தேடிட்டு இருக்கோம்!’’ ‘‘...’’ ‘‘இப்ப சொல்லு ஆதி... அந்த காண்டீபம் எப்படி சரஸ்வதிக்கு சொந்தமாகும்?!’’ ‘‘நீ சொன்ன கதை ஒரு code. அதை பிரேக் பண்ணு!’’ என்றபடி ஆதி சிரித்தான்!
(தொடரும்)
ஓவியம் : ஸ்யாம்
|