பல துகள்களின் சேர்க்கைதான் மனிதன்!



அதிர வைக்கும் அறிவியல் உண்மை

வயிறு முட்ட சாப்பிட்ட பின்பு சர்வர் பில் கொண்டு வருகையில்... ஏடாகூடமாகப் பொய் சொல்லிவிட்டு மனைவி யிடம் மாட்டிக்கொண்டு முழிக்கையில்... மாதக் கடைசியில் கடன்காரன் எதிரில் வருகையில்... திடீரென நீங்கள் துகளாக மாறிவிட்டால் எப்படி இருக்கும்? ‘வாவ்...’ என துள்ளிக் குதிக்கிறீர்களா? அட! நாம் உருவானதே அப்படி துகள்களில் இருந்துதான் என அதிரடிக்கிறார்கள் அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

பால்வெளியில் தொலைதூர விண்மீன் கூட்டத்தில் பெருவெடிப்பு ஏற்பட்டதால் - காற்றுவழியாக பரவிய துகள்களின் வழியாக - சிரியா நாட்டு மக்கள் போல அகதிகளாக அல்லது யுவான் சுவாங், மார்க்கோபோலோ போல பயணிகளாக வந்தவர்கள்தான் மனிதர்கள் என்று அடித்துப் பேசுகிறது ஓர் அதிரடி ஆய்வு. காற்று கடுகளவும் இல்லாத இடத்தில் எப்படி நிகழ்ந்திருக்கும் பெருவெளி வெடிப்பு? பால்வெளியில் உள்ள வாயுத் துகள்கள் ஒரு நொடிக்கு பல கி.மீ. வேகத்தில் வீண்மீன் கூட்டத்தின் மீது தடார் என்று ஹைஸ்பீடில் மோதினால்... அந்த வேகத்தால் நட்சத்திரங்கள் பிளக்கும்.

அப்போது வெளியாகும் போட்டான்கள், வாயுக்களோடு இணைந்து பல்வேறு கேலக்ஸிகளுக்கு இடையிலான பாதையை உருவாக்கும். இப்படி உருவானவை வெற்றிடத்தில் நுழைந்தவை போக, இன்னும் மிச்சமிருக்கின்றன என்ற நம்பிக்கைதான் மேற்கண்ட சோதனைக்கு அடிப்படை. அணுக்கள் தோன்றி பால் வெளியை உருவாக்கின என்பதுதான் விஞ்ஞானிகளின் தியரி. இதனை உறுதியாக நம்புபவர் அமெரிக்காவின் இலினாய்ஸைச் சேர்ந்த நார்த்வெஸ்டர்ன் பல்கலையின் வானியற்பியலாளர் டேனியல் ஏங்கெல்ஸ் அல்காஸர்.

இவரை டீம் லீடராகக் கொண்ட குழுவினர், பால் வெளியின் பிறப்பை துல்லியமாக அறிய முடிவெடுத்தனர். கேலக்ஸி உருவாக்கம் குறித்த அனைத்துத் தகவல்களையும் கணினியில் சேமித்து, அதனை முந்தைய மாடல்களோடு ஒப்பிட்டனர். மிராக்கிள் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது அங்குதான். வெடிப்பில் உருவான அணுக்கள் இருவேறு கேலக்ஸிகளுக்கிடையே பரவியதோடு, புதிய அணுக்கள், புதிய விண்மீன்களை உருவாக்கின.

வாயுக்கள் அப்படியே சிறிய கேலக்ஸியிலிருந்து மெகா கேலக்ஸிகளுக்கும் பரிமாற்றமாகி இருக்கலாம் என்பதை இந்த கணினி மாடல்களிலிருந்து டேனியல் கண்டுபிடித்திருக்கிறார். ஜஸ்ட் லைக் தட் கண்டுபிடிப்பு அல்ல இது. கேலக்ஸி எப்படி உருவானது என்று இதுவரை நாம் யூகித்திருந்த அனைத்தையும் தலைகீழாக மாற்றிய கண்டுபிடிப்பு இது. இதில் புதுசு, கேலக்சிகளுக்கு இடையேயான அணுக்கள் பரிமாற்றம்தான். ‘‘இன்றைய சூரிய மண்டலம், அதில் உள்ள கோள்கள், நான், நீங்கள் என அனைவரும் கேலக்ஸிகளுக்கிடையே கடந்து வந்த அணுக்களால் உருவாகியிருக்கலாம்.

கேலக்ஸிகளின் எடையை அறிந்தால், அவை பரிமாறிய அணுக்களின் எடையைக் கூட கண்டறியலாம்!’’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல். அமெரிக்கா அனுப்பியுள்ள ஹப்பிள் டெலஸ்கோப்பின் வழியாக, வாயு சூழ்ந்த கேலக்ஸிகளைப் படம்பிடித்து அதை சூழ்ந்துள்ள காற்றின் அளவு குறித்து அறிய வாய்ப்பு உள்ளது. ‘‘பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இல்லை என்ற செய்தியை அறிந்துகொண்டதே பயங்கர த்ரில்.

பல பில்லியன் ஒளி ஆண்டுகளிலிருந்து வந்த வாயுக்களால் கோள்கள் உருவாயின என்ற செய்தி பால்வெளியின் தோற்றம் குறித்த ஆராய்ச்சியில் நாம் வேகமாக முன்னோக்கிச் செல்ல உதவும். கேலக்ஸிகளில் அணுக்கள் பரவிய பாதை வழியாகப் பிற கேலக்ஸிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா என்ற ஆராய்ச்சி இதில் அடுத்த கட்டம்...’’ எனப் புன்னகைக்கிறார் டேனியல். ஒருவழியாகப் பால்வெளியின் காலிங்பெல்லை அடிச்சாச்சு… என்ன நடக்கப் போகிறதென்று பார்ப்போம்.

பிக்பேங் தியரி ஹிஸ்டரி!

பிங் பேங் தியரிக்கான திரியைப் பற்றவைத்தவர், பெல்ஜிய நாட்டு பாதிரியான ஜார்ஜஸ் லெமைட்ரே. 1920ம் ஆண்டு ஆதி அணுவிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்றார் இவர். ஜார்ஜஸின் தியரி, ஆராய்ச்சியாளர் எட்வின் ஹப்பிளுக்கு எட்டு திசையில் உள்ள விண்மீன் கூட்டங்கள் பற்றிய அறிவுக்கண்ணைத் திறந்தது. இவரைத் தொடர்ந்து காஸ்மிக் கதிர்வீச்சு குறித்து அர்னோ பென்ஸியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகிய இருவரின் கண்டுபிடிப்பு பால்வெளி குறித்த ஆர்வத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. இதில் பதில் கிடைக்காத கேள்வி, பெருவெடிப்பு நிகழக் காரணம் என்ன என்பதுதான்.

எத்தனை கேலக்ஸிகள்?

பால்வெளியில் உள்ள கேலக்ஸிகள் - 2 ட்ரில்லியன் (குறைந்தபட்சம்).

ஹப்பிள் டெலஸ்கோப்பில் கண்டுபிடித்தவை - 10,000 முதல் 20,000 மட்டுமே.

பெருவெடிப்பு நிகழ்ந்த காலம் - 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.