எழுத்தாளரும் பாத்திரக்காரரும் : எமக்குத் தொழில் எழுத்து!





‘‘40 ஈய வட்டகை, 150 பிளாஸ்டிக் சேர், 6 ஸ்டவ்வு, 5 இருப்புச்சட்டி, 40 வாளி, 4 டிரம்... இதெல்லாம்தான் இன்னைய பொழுதுக்கு என் நம்பிக்கை. நான் பண்ணாத தொழில் இல்லை. ஆனா எதுவும் என் இயல்புக்கு பொருந்தல. இன்னைக்கு இது... நாளைக்கு என்னன்னு யோசிக்கலை!’’  காமுத்துரையின் பேச்சும் எழுத்து மாதிரியே பூடகமாக இருக்கிறது.

தமிழ் எழுத்துச்சூழலில் விளிம்புநிலைக் குரலாய் ஒலிப்பது ம.காமுத்துரையின் எழுத்து. வெம்மை ததும்பும் தேனியின் வழக்குச் சொற்களில் அடித்தட்டு மக்களின் சுமைகளையும், வலிகளையும் வார்த்தைகளாக்குபவர். ‘கப்பலில் வந்த நகரம்’, ‘விடுபட’, ‘நல்ல தண்ணி கிணறு’, ‘நாளைக்குச் செத்துப் போனவன்’, ‘கனா’ போன்ற சிறுகதை நூல்கள் மூலம் தமிழின் தனித்துவமிக்க படைப்பாளியாக கவனம் பெற்றவர்.

அல்லிநகரத்தில் வாடகைப் பாத்திரக்கடை நடத்தும் இந்த படைப்பாளியை, ‘பாத்திரக்காரர்’ என்று அழைக்கிறார்கள் தேனிக்காரர்கள்.

‘‘பொறந்தது தேனின்னாலும் வளர்ந்ததெல்லாம் அம்மா ஊரு வீரபாண்டியில. தாய்வழி சொந்தமுன்னாவே நெகிழ்ச்சியான ஒட்டுதல் இருக்கும். தேனியைவிட வீரபாண்டிதான் என் கதைகள்ல முன்னாடி நிக்கும். முல்லையாறு கிளையெடுத்து பெரிய ராஜ வாய்க்காலா ஊருக்குள்ள ஓடும். தேரிமேடு முழுக்க மிளகாய்ப்பழம் விரிஞ்சு காயும். இன்னைக்கு நினைச்சாலும் அதெல்லாம் இனிக்குது...’’  வட்டகையைத் துடைத்தபடி பேசுகிறார் காமுத்துரை.

‘‘இன்னைக்கு ரசனையா நாலெழுத்து சேத்தாப்புல எழுதுறேன்னா, அதுக்குக் காரணம் எங்க பாட்டி. நம்ம மனநிலைமைக்குத் தகுந்தமாதிரி கதை சொல்லும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாத்திரம். தாத்தா நெல்லவிச்சு, அரிசி அரைச்சு விப்பாரு. அவரும் இட்டுக்கட்டி பாடுவாரு. இந்தமாதிரி கதையும் இசையுமா, இதமான சூழல்ல வளந்தேன்.


பெரிய பத்து (எஸ்எஸ்எல்சி) முடிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு. ஐடிஐயில சேத்து விட்டாரு அப்பா. வெல்டிங் டிரேடு படிச்சேன். மேலோட்டமான படிப்புதான். உள்ளுக்குள்ள இறங்கல. தங்கச்சி பூப்பெய்தின நேரம். ‘பொழுது போகலே... ஏதாவது புத்தகம் எடுத்துக்கிட்டு வாண்ணே’ன்னு சொன்னுச்சு. தங்கச்சிக்காகதான் முதன்முதல்ல நூலகத்துக்குள்ள நுழைஞ்சேன். பிற்பாடு அதுதான் வாசத்தலம் ஆயிருச்சு. முதல்ல என்னை வசீகரிச்சது கண்ணதாசன். கொஞ்சம் கொஞ்சமா வேற தளத்துக்கு வாசிப்பு விரிவாச்சு.

பொன்.விஜயன் நடத்தின ‘புதிய நம்பிக்கை’, அல்லி உதயன் நடத்தின ‘விடியும்’ கையெழுத்துப் பத்திரிகை... இதெல்லாம் என்னை எழுதத் தூண்டி பண்படுத்தின களங்கள். பாரதிராஜாவோட ‘பதினாறு வயதினிலே’ கொடுத்த உத்வேகத்துல, தேனியில நிறைய நாடகக்குழுக்கள் உருவாச்சு. அந்த குழுக்களுக்கு பாடல்கள் எழுதிக் கொடுப்பேன். நாடகங்களும் எழுதுவேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தோட தொடர்பு கிடைச்ச பிறகுதான் எழுத்தோட தன்மையும், வீரியமும் புரிஞ்சுச்சு.


ஐடிஐ முடிச்சு ஒர்க்ஷாப்புல வெல்டரா சேந்தேன். ஆனா மனசொரு பக்கமும், வேலையொரு பக்கமும் இழுத்துக்கிட்டு நின்னுச்சு. வேலை சுணங்கிப் போச்சு. இது உனக்கு சரிப்படாதுன்னு அனுப்பி வச்சுட்டாங்க. அடுத்து ஒரு செருப்புக் கடையில சேல்ஸ்மேனா சேந்தேன். அதுவும் ஒட்டலை. தையல் கத்துக்கிட்டா பிழைச்சுக்கலாம்னு சிலர் சொன்னாங்க. ஒரு தையல்கடையில காஜா போடப் போனேன். நம்ம போட்ட காஜாவைப் பாத்துட்டு நாலைஞ்சு நாள்ல வீட்டுக்கு அனுப்பிட்டாரு அந்த தையல்காரரு...’’  சிரிக்கிறார் காமுத்துரை.

‘‘பிழைக்க நிறைய வழியிருக்கு... ஆனா மனசுக்குப் புடிச்ச மாதிரி பிழைக்கணும். தேனிக்கு ஸ்பின்னிங் மில்கள் அறிமுகமான நேரம். ஒரு மில்லுல ‘சைடரா’ வேலைக்குச் சேந்தேன். மெஷின் ஓடுறப்போ நூல் அறுந்து விழுந்தா எடுத்து முடிஞ்சு விடணும். ஆறேழு வருஷம் ஓடுச்சு. ஆனா விவகாரம் வேறுமாதிரி வந்துச்சு. மில்லுல கடினமான வேலை, குறைவான கூலின்னு பலருக்கு பல பிரச்னைகள். நாம படைப்பாளியாச்சே... அந்தக் கொடுமைகளை சகிக்க முடியலே. சங்கம் கட்டுற வேலையில இறங்குனோம். இதைக் கேள்விப்பட்டு முன்னணியில இருந்த 16 பேரையும் வேலையை விட்டு தூக்கிருச்சு நிர்வாகம்.


அடுத்த 5 வருஷம் வேலை நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு அலைஞ்சோம். கடைசியா, நிவாரணத் தொகையா கொஞ்சம் பணம் குடுத்தாங்க. அதை வச்சு பைனான்ஸ் கம்பெனி தொடங்குனேன். சித்தாள், கொத்தனார், விவசாயக்கூலி, மீன் வியாபாரி மாதிரி அன்னாடம் உழைப்பாளிகளுக்கு கடன் கொடுத்து வாங்குறது. அசலோட கூடகொஞ்சம் வட்டி.

பைனான்ஸ் தொழிலுக்கு அமட்டி பேசத் தெரியணும்; சண்டை போடணும்; தேவைப்பட்டா கையையும் நீட்டணும். நம்ம பேசுனா நமக்கே குரல் கேட்காது. எங்கிட்டு அமட்டிப் பேசுறது? அந்தத் தொழிலும் சரியா வரல. கையில இருந்த எல்லாத்தையும் காலி பண்ணிட்டு நின்னேன். ‘பிரெட் கம்பெனி ஏஜென்ட் எடுக்கலாம்’னு சொன்னான் ஒரு நண்பன். கடன் வாங்கி ஏஜென்சி எடுத்தேன். அதுவும் சரியா வரல. அடுத்து, செய்தித்தாள் ஏஜென்சி. அது நாலு வருஷம் ஓடுச்சு. பெறகு அதையும் நிறுத்திட்டு ஒதுக்குப்பொறத்தாப்ல ஒரு கடையைப் புடிச்சு கயிறு, இரும்புச்சாமான், நட்டு, போல்ட் வாங்கி வித்தேன். கைநட்டம்தான். நெளிவு சுளிவா தொழில் செய்யத் தெரியல.

தேனியில கட்டுமான வேலைகள் நிறைய நடக்கும். எப்பவும் தேவை இருக்கும். அதனால தட்டு, மம்பட்டி, கடப்பாரை, திரிசுக்கட்டை, உளி, ஆப்பு, கோக்காலி எல்லாம் வாங்கி வச்சு வாடகைக்கு விட்டேன். வாங்கிட்டுப் போறவங்க கொண்டாந்து குடுக்கிறதில்ல. அதுவும் போச்சு! கடைசியா, வாடகைப் பாத்திரக்கடை. இதுவும் எவ்வளவு காலம்னு தெரியாது.

ஒரு தனி மனிதனா இந்தப் பொருளாதார இழப்புகள் என்னை பாதிக்குதுதான். ஆனா எனக்குள்ள இருக்கிற எழுத்தாளனுக்கு இதெல்லாம்தான் தீனி. சித்தாள், கொத்தனார், மீன்காரப் பெண், பொரி கடலை வியாபாரி, சமையல்காரர்... இவங்ககிட்ட இருந்துதான் கதைகள் வருது. என்னையே நான் தூர நின்னு பாத்து எழுதப் பழகியிருக்கேன். என் வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா என் கதைகளைப் படிக்கணும். எதிர்பார்ப்புகளை குறைச்சுக்கிட்ட மனைவியும் மகன்களும் இல்லைன்னா, காமுத்துரைங்கிற எழுத்தாளன் சாத்தியமில்லை. 

தொழில் மாறலாம். ஆனா எழுத்து வாழ்க்கையோட அங்கமாவே இருக்கும். அதுதான் என்னை செம்மைப்படுத்துது. தீய பழக்கங்கள்ல சிக்காம என்னைக் காப்பாத்துது. மனசை ஈரமாக்குது. சொல்லப் போனா, எதையும் நான் எழுதறதில்லை; என் வழியா எழுத்து தன்னைத்தானே எழுதிக்குது... அவ்வளவுதான்!’’
 தத்துவார்த்தமாகப் பேசிவிட்டு பழைய பாத்திரங்களில் தூசி துடைக்கிறார் காமுத்துரை.
 வெ.நீலகண்டன்
படங்கள்: பி.ராதாகிருஷ்ணன்