சங்மா





ஜெயலலிதா மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சர்ப்ரைஸ் ஜனாதிபதி வேட்பாளர் சங்மா. அவரது கட்சி பிரணாப்பை ஆதரிக்கிறது. வேறு வழியின்றி கட்சியிலிருந்து வெளியேறிய சங்மாவை பாரதிய ஜனதாவும் ஆதரிக்க... வலுவான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறார் சங்மா. ஆனாலும் சோனியாவை விமர்சித்த ஒரு சொல்தான் அவரை அந்த நாற்காலியில் அமர விடாமல் தடுக்கிறது!

*  பூர்ணோ அகிடோ சங்மா. இதுதான் அவரது முழுப்பெயர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் பிறந்தவர். சொந்த கிராமத்தின் பெயர் சப்பாத்தி. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்.

*  பழங்குடி மக்கள் வாழும் வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை எனவும், அந்த மாநிலங்களை மத்திய அரசு உதாசீனப்படுத்துவதாகவும் எப்போதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதுவரை அங்கிருந்து யாரும் ஜனாதிபதி ஆனதில்லை; பழங்குடி இனத்தவரும் ஆனதில்லை. எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பழங்குடி இன எம்.பி.க்களின் ஆதரவுக் கடிதங்களை பெற்றபிறகே களத்தில் குதித்திருக்கிறார் சங்மா.

*  அடிப்படையில் வழக்கறிஞரான இவர், இளம் வயதிலிருந்தே காங்கிரஸ்காரர். மேகாலயாவின் டுரா தொகுதியிலிருந்து 8 முறை எம்.பி. ஆனவர்.

*  மேகாலயா முதல்வராக 2 ஆண்டுகள் இருந்தவர். மத்திய அரசில் தொழிலாளர் நலத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர். 96ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்ற சபாநாயகர் ஆனார். எதிர்க்கட்சி வரிசையிலிருந்து இந்தப் பதவிக்கு வந்த ஒரே நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தேவ கவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசை காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரித்ததால், இவருக்கு இந்தப் பதவி கிடைத்தது.

*  99ம் ஆண்டு காங்கிரஸின் தலைவர் ஆனார் சோனியா. ‘‘வெளிநாட்டில் பிறந்தவர்கள் இந்தியாவில் அரசியல் பதவிகளை வகிக்கக்கூடாது’’ என அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சங்மா. இவரோடு எதிர்ப்பு தெரிவித்த சரத் பவாரும் நீக்கப்பட, இருவரும் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார்கள்.

*  2004ம் ஆண்டு காங்கிரஸோடு சரத் பவார் கூட்டணி வைக்க, கோபித்துக் கொண்டு கட்சியை உடைத்தார் சங்மா. மம்தா பானர்ஜியோடு சேர்ந்து தேசியவாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். ஒரே வருடத்தில் மம்தாவோடு சண்டை வர, திரும்பவும் பவாரோடு சேர்ந்தார்.

*  2009ம் ஆண்டு தனது டுரா தொகுதியில் மகள் அகதா சங்மாவை நிறுத்தினார். இவர் மேகாலயா முதல்வராக ஆசைப்பட்டார். ஆனால் கட்சி நிறைய இடங்களில் ஜெயிக்காததால் சங்மா முதல்வர் ஆக முடியவில்லை.

*  சரத் பவார் கேட்டதால், சங்மாவின் மகள் அகதாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தார் சோனியா காந்தி. அப்போதுதான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியாவை மீண்டும் சந்தித்தார் சங்மா. தனது விமர்சனங்களுக்கு மன்னிப்பும் கேட்டார். சோனியாவின் பெருந்தன்மையைப் பாராட்டிப் பலமுறை பேசினார். இப்போது ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்துக் கொண்டு சோனியாவைப் பார்க்க சங்மா முயன்றார். ஆனால் சோனியா சந்திக்க மறுத்துவிட்டார்.

*  மேகாலயா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் சங்மாவின் மகன் கோன்ராட் சங்மா.