பிரணாப்





காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர்... சில எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் பழுத்த அரசியல்வாதி என்ற அடையாளத்தோடு பிரணாப் முகர்ஜி அடுத்த ஜனாதிபதி ஆவது அநேகமாக உறுதியாகி விட்டது. அவரது பர்சனல் பக்கங்கள்...

*  சுதந்திரப் போராட்ட தியாகி குடும்பத்தில் பிறந்த வங்காள பிராமணர். அப்பா கமாதா கின்கார் முகர்ஜி மேற்கு வங்காளத்தில் எம்.எல்.சியாக இருந்தவர்.

*  கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு, எம்.ஏ. பொலிடிகல் சயின்ஸ் மற்றும் சட்டம் பயின்றவர் பிரணாப். போன வருஷம் டாக்டர் பட்டம் கூட வாங்கி விட்டார்.

*  கல்லூரி ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருந்துவிட்டு பிறகு அரசியலுக்கு வந்தவர்.

*  அரசியல் வாழ்வில் நீண்ட நாட்கள் நேரடித் தேர்தலை சந்திக்காதவர். 1969 முதல் 5 முறை ராஜ்ய சபா எம்.பி. ஆகியிருக்கிறார். 2004ம் ஆண்டில்தான் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் நின்றார்.

*  முதல் முறையே அமைச்சர் ஆனவர். 73ம் ஆண்டு இந்திரா கேபினட்டில் தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது கொடுமையை நிகழ்த்திய காங்கிரஸ் அமைச்சர்கள் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு.

*  தொழில், வெளியுறவு, உள்துறை, பாதுகாப்பு, வர்த்தகம், நிதித்துறை என முக்கியமான அனைத்துத் துறைகளின் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

*  84ம் ஆண்டு உலகின் சிறந்த நிதியமைச்சர் என்ற விருது பெற்றார். அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர், இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்.

*  பிரணாப் முகர்ஜி என்பதை சுருக்கினால், ‘பி.எம்.’ எனலாம். பிரைம் மினிஸ்டரை சுருக்கினாலும் ‘பி.எம்.’தான். ஆனால் அந்தப் பதவி பிரணாப்புக்கு கடைசிவரை கனவாகவே இருந்தது.

*  இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது பிரணாப் நிதியமைச்சர். கேபினட்டில் நம்பர் 2. ‘‘பெரிய பொறுப்புகளை சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறேன்’’ என பிரதமர் ஆகிவிட்டதாகவே நினைத்து அப்போது பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திடீரென ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்.

*  ராஜீவ் செய்த முதல் காரியம், பிரணாப்பை ஓரங்கட்டியதுதான்! புதிய அமைச்சரவையில் பிரணாப்புக்கு இடமில்லை. கோபித்துக் கொண்டு ‘ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ்’ என தனிக்கட்சி ஆரம்பித்தார் அவர். 89ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோற்றபோது ராஜீவ் மீண்டும் பிரணாப்பை கட்சியில் சேர்த்தார்.

*  அதன்பிறகு ஏறுமுகம்தான். நரசிம்மராவ், மன்மோகன் சிங் என அடுத்தடுத்து பிரதமர்கள் வர, இவர் எப்போதும் நம்பர் 2 என்றே இருந்தார்.

*  மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அப்போது காங்கிரஸில் இருந்த மம்தா பானர்ஜி இளைஞர் அணித் தலைமை பதவிக்கு வருவதைத் தடுத்தார். அந்தக் கடுப்பில்தான் இப்போது பிரணாப்பை ஆதரிக்க மம்தா மறுக்கிறார்.

*  30 வருட இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவரான பிரணாப், 76 வயதிலும் தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார். இரவு 10 மணிக்கு மேல் வீட்டில் கட்சிக்காரர்களை சந்திப்பார். நள்ளிரவு 1 மணி வரை கூட்டங்கள் நடக்கும்.  

*  சாதமும் மீன் கறியும் பிடித்த உணவு.

*  மனைவி சுவ்ரா. அபிஜித், இந்திரஜித் என இரண்டு மகன்கள். அபிஜித் இப்போது மேற்கு வங்காள எம்.எல்.ஏ. ஒரே மகள் சர்மிஷ்டா, கதக் கலைஞர்!