கடைசி இளவரசியின் காதல்...





‘‘அரச குடும்பத்தின் தகுதிக்குக் குறைஞ்ச ஆணோட ஒரு இளவரசிக்கு வர்ற காதல், அந்தக்கால இலக்கியங்கள் உள்பட எப்போதுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. அதில இந்தக் காலக்கட்டமும் கூட விதிவிலக்கில்லை...’’ என்று ஒரு இளவரசியின் காதலை முன்வைக்கிறார் பெண் இயக்குநரான ரூபா அய்யர். இண்டியா கிளாசிக் ஆர்ட்ஸுக்காக ரூபா இயக்கும் ‘சந்திரா’ படம், இன்றைய காலகட்டத்து அரச குடும்பத்தின் கதை சொல்கிறது.

‘‘இந்தியாவில இன்றும் நீடிக்கிற அரச பரம்பரைகள்ல ஒன்றின் கடைசி தலைமுறை இளவரசியோட கதையை, முக்கியமா அவளோட காதல் கதையை இதில் சொல்லவிருக்கேன்...’’ என்கிற ரூபா அய்யர் இந்தக் கதைக்குப் பொருத்தமான இளவரசியாக ஸ்ரேயாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். கிளாசிகல் நடனக் கலைஞரான ரூபா இயக்கும் மூன்றாவது படம் இது. இவர் இயக்கிய முதல் கலைப்படமான ‘டாட்டு’ பல சர்வதேசப் பட விழாக்களில் கலந்து கொண்டது. ஹெச்.ஐ.வி பாதித்த குழந்தைகளின் பிரச்னையை முன்வைத்து ரூபா இயக்கிய இரண்டாவது படமான ‘தி கவர் பேஜ்’ எட்டு சர்வதேச விருதுகளைப் பெற்றது. மூன்றாவது முயற்சியான இதில் இன்றைய சமுதாயத்தில் கவனிக்கப்படாத அரச குடும்பத்தின் கதையை கமர்ஷியலாகச் சொல்ல வந்திருக்கிறார் அவர்.

‘‘இன்றைக்கும் அதே அரச குடும்ப வழிமுறைகள், பாரம்பரியத்தோடதான் அவங்க வாழ்ந்துக்கிட்டிருக்காங்கன்னு சொன்னா பொதுமக்களுக்கு நம்பறதுக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அதுதான் உண்மை. சில இளவரசிகள் அரண்மனை தாண்டி ஊருக்குள்ள வந்து தெருவில் இறங்கி நடந்துகூட அறியாதவங்களாதான் இருக்காங்க. வெளியிலிருந்து பார்க்கும் அரச வாழ்க்கை அதிர்ஷ்டகரமானதா தோன்றலாம். ஆனா அவங்களுக்கு இருக்கிற கட்டுப்பாடுகளைக் கேட்டா, இங்கே ஒரு சாமானியன் எத்தனை சுதந்திரமா இருக்கான்னு புரியும். ஆனா இது மட்டுமே நான் சொல்ல வர்ற விஷயம் இல்லை. காதல்தான் பிரதானம்...’’ என்கிற ரூபா அய்யர் தொடர்ந்தார்.


‘‘இதை ஒரு மியூசிக்கல் ரொமான்டிக் படமா தர இருக்கேன். அரண்மனையில் வாழ்ந்துக்கிட்டிருக்க ஒரு இளவரசிக்கு இசை கத்துக் கொடுக்கிற ஒரு ஆசிரியரோட மகன் மேல காதல் வருது. அதைத் தொடர்ந்த சம்பவங்கள்தான் கதை. இந்தக் கதைக்காக இந்தியா முழுக்க இருக்கிற பல அரச குடும்பங்களோட வாழ்க்கையை அணுகித் தெரிஞ்சுக்கிட்டேன். அதுல சிலரோட எனக்கு இருக்கிற நட்புதான் இதைப் படமா எடுக்கத் தோணிச்சு. குறிப்பா எந்த அரச குடும்பம்னு சொல்லாம, ஒரு இந்திய அரச பரம்பரைக்குப் பொதுவா இருக்கிற குறியீடுகளோட திரைக்கதையை எழுதியிருக்கேன்.

இதுல ‘மகாராணி அம்மண்ணி சந்திராவதி’ங்கிற கேரக்டருக்கு ஸ்ரேயா ரொம்பப் பொருத்தமா அமைஞ்சாங்க. அவங்க காதலுக்குள்ளாகிற பிரேமோட பெயரும் சந்திரஹாசன்தான். அதனால ‘சந்திரா’ங்கிற டைட்டில் பொதுவா அமைஞ்சிருக்கு. இப்படி இளவரசிகள் சிலர் வெளிநாடுகள்ல கல்யாணமாகி செட்டில் ஆகியிருக்காங்க. அதே நிலை ஸ்ரேயாவுக்கும் படத்துல வருது. ஸ்ரேயாவோட வெளிநாட்டு மாப்பிள்ளையா கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். அவரோட அம்மாவா சுகன்யாவும், இசை ஆசிரியரா விஜயகுமாரும் நடிக்கிறாங்க. மைசூர், பெங்களூரு அரண்மனைகள் தொடங்கி... வெளிநாடுகள் வரை தொடரவிருக்க ஷூட்ல இங்கே அரண்மனையில இந்திய இளவரசி காஸ்டியூம்ல வர்ற ஸ்ரேயா, வெளிநாட்டுல மாடர்ன் காஸ்ட்யூம்லயும் வருவாங்க.

தமிழ், கன்னடம் மொழிகள்ல பைலிங்குவலா தயாராகிற படத்தோட இசையை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில நம்பிக்கைக்குரிய இந்திய இளம் இசையமைப்பாளரா இருக்கிற கௌதம் ஸ்ரீவத்ஸாவும், ஒளிப்பதிவை டி.கே.எஸ்.தாஸும் கவனிக்கிறாங்க. காலமெல்லாம் பார்த்துக்கிட்டிருக்க காதல் கதைகளுக்கு நடுவில, இந்த இளவரசியோட காதல் ஆழமானதாவும், அழகாவும் ரசிக்க வைக்கும்..!’’
- வேணுஜி