ஈட்டி வீரன்!



உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்பட வைத்தவர். அப்போது நீரஜின் பெயரை உச்சரிக்காத இந்தியர்களே இல்லை. 
இப்போது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் திரும்பியிருக்கிறார் நீரஜ். பதிமூன்று வயதில் தொடங்கிய அவரின் ஈட்டி எறிதல் பயணம், அடுத்த 12 ஆண்டுகளில் மாபெரும் வெற்றியை அவருக்கு ஈட்டித் தந்திருக்கிறது. சரி, எப்படி நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் விளையாட்டிற்குள் வந்தார்? அது ஒரு சுவாரஸ்யமான கதை.

அரியானா மாநிலத்தின் பானிபட் மாவட்டத்திலுள்ள கந்த்ரா கிராமத்தில் 1997ம் ஆண்டு பிறந்தார் நீரஜ். தந்தை சதீஷ்குமார் ஒரு சாதாரண விவசாயி. தாய் சரோஜ் தேவி. வளமான பின்னணி இல்லாவிட்டாலும் நீரஜின் விளையாட்டிற்கு இன்றுவரை உறுதுணையாக இருப்பவர்கள் இவர்கள் இருவரும்தான். 

இளம் வயதில் உடல் பருமனான சிறுவனாக இருந்திருக்கிறார் நீரஜ். இதனால் சக நண்பர்கள் அவரைக் கிண்டல் செய்ய, அவரின் தந்தை அருகிலுள்ள மட்லாடா ஊரில் உள்ள ஜிம்மில் பயிற்சிக்காக சேர்த்துள்ளார். பிறகு, பானிபட்டில் உள்ள ஜிம்மில் சேர்ந்து பயிற்சி எடுத்துள்ளார். அங்கே சிவாஜி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, சில ஈட்டி எறிதல் வீரர்களைக் கண்டு ஆர்வத்துடன் அதில் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து தொடங்கியது நீரஜின் ஈட்டி எறிதல் விளையாட்டு.

ஆனால், இத்தனை குறைந்த ஆண்டுகளில் இவ்வளவு பெரிய சாதனைகளைப் படைப்பார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 2010ம் ஆண்டு பானிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, காசியாபாத்திலிருந்து வந்திருந்த ஈட்டி எறிதல் வீரர் அக்‌ஷய் சவுத்ரி, நீரஜின் ஈட்டி எறிதலைப் பார்த்துள்ளார்.

அப்போது எந்தவித முறையான பயிற்சியுமில்லாமல் 40 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார் நீரஜ். இதைப் பார்த்து வியந்துபோன அக்‌ஷய், நீரஜுக்கு ஈட்டி எறிதல் விளையாட்டின் அடிப்படைகளைக் கற்றுத் தந்தார். நீரஜின் முதல் பயிற்சியாளர் அக்‌ஷய்தான்.பிறகு, இன்னும் பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொள்ளலானார். 

மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவே அவர் வென்ற முதல் பதக்கம். பிறகு, அவரின் குடும்பம் பானிபட்டிலேயே அவரைத் தங்கியிருந்து பயிற்சியெடுக்க வழிவகைகள் செய்தது. இதன்பிறகு, உலக யூத் சாம்பியன்ஷிப், யூத் ஒலிம்பிக்ஸ் எனப் பல போட்டிகளில் பதக்கங்கள் வென்றார்.

2016ம் ஆண்டு ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். இதே ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றதுடன், ஜூனியர் பிரிவில்  உலக சாதனையும் படைத்தார். 

இதுவரை இந்தத் தூரத்தைத் தாண்டி எறிந்து யாரும் சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதன்பிறகு, தெற்காசிய போட்டியில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், காமன்வெல்த் போட்டியில் தங்கம், ஆசியப் போட்டியில் தங்கம், டைமண்ட் லீக் போட்டியில் நம்பர் ஒன் என தொட்டதெல்லாம் தங்கம் என்பதுபோல கலந்துகொண்ட போட்டிகளில் எல்லாம் தங்கங்களைக் குவித்தார்.

இதற்கிடையே பல்வேறு காயங்கள், அறுவை சிகிச்சைகள் எல்லாவற்றிலும் இருந்து மீண்டும் வந்தார். தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இவரின் செயல்திறனைப் பார்த்த இந்திய ராணுவம் வேலைக்கான நியமனத்தை வழங்கியது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் நீரஜ்.

கடந்த ஆண்டு இதே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமே நீரஜுக்குக் கிடைத்தது. இந்தமுறை தங்கத்தைத் தட்டி வந்திருக்கிறார். இதன்மூலம் துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ராவுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார் நீரஜ்.

இதுமட்டு மல்ல;  ஈட்டி எறிதல் விளையாட்டு வரலாற்றில் செக் குடியரசின் ஜான் ஜெலெஸ்னி மற்றும் நார்வேயின் ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையும் நீரஜ் வசம் வந்திருக்கிறது.

தவிர, 25 வயதிலேயே அனைத்து வகையான போட்டிகளிலும் தங்கம் வென்று சாதித்த இளைஞராகவும் மிளிர்கிறார் நீரஜ் சோப்ரா.இப்போது உலக சாதனை பட்டியலில் முதல் 25 இடங்களில் நீரஜ் 89.94 மீட்டர் தூரம் எறிந்து 24வது இடத்தில் இருக்கிறார். இனி அவருக்குமுன் உள்ள சவால் எல்லாம், 1996ம் ஆண்டு ஈட்டி எறிதலில் 98.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை படைத்திருக்கும் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜான் ஜெலெஸ்னியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

பேராச்சி கண்ணன்