அமெரிக்காவை உலுக்கும் ஜாம் பி டிரக்!



நாம் நிறைய ஜாம்பி படங்கள் பார்த்திருப்போம். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ‘மிருதன்’, யோகி பாபு நடிப்பில் ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்கள் நமக்கு பரிச்சயம். இவையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் படங்கள் எனக் கடந்திருப்போம். 
ஆனால், உண்மையில் மனிதர்கள் ஜாம்பி போல நடந்துகொண்டால் எப்படியிருக்கும். கற்பனை செய்து பார்க்க முடியவில்லைதானே?

ஆனால், இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர மக்கள் ஜாம்பி போல் காட்சியளிக்கும் வீடியோ காட்சிகள் பலரையும் பயமுறுத்தி வருகின்றன.

இந்த வீடியோவில் மக்கள் தள்ளாடியபடியும், தலை கவிழ்ந்த நிலையிலும், சிம்பன்ஸி நிற்பதுபோலவும் சாலையோரங்களில் தடுமாறி, தன்னுணர்வு இன்றி இருப்பதைப் பார்க்கமுடிகிறது.

ஆரம்பத்தில் இதை ஃபேக் வீடியோ என்றே பலரும் குறிப்பிட்டனர்.ஆனால், ஒரு போதைப் பொருளினால் இப்படி ஜாம்பி போல் நடந்துகொள்வது தெரிய வந்துள்ளது. இந்த போதைப் பொருளை ஜாம்பி டிரக்ஸ் என்றே குறிப்பிடுகின்றனர். இப்போது இந்த போதைப் பொருள் பல நகரங்களுக்கும் பரவி அமெரிக்காவிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, நியூயார்க் நகரம் கவலையளிக்கும் நகரமாக மாறியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். இந்த போதைப் பொருளை ஓவர்டோஸ் போட்டுக் கொண்டதன் காரணமாக ஒன்பது பேர் இறந்துள்ளனர். இந்த போதைப்பொருளுக்கு டிராங்க் (Tranq) அல்லது சைலாக்சின் (xylazine) என்று பெயர். 

இதை டிராங்க் டோப் என்றும், ஜாம்பி டிரக் என்றும் இதனை பயன்படுத்துபவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையில் இது பசுக்கள் மற்றும் குதிரைகளுக்கு அமைதியளிக்கும் மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்தும் இந்த மருந்தினைத்தான் போதைப்பொருளாக உபயோகிக்கின்றனர்.

இதை சட்டவிரோதமான வழிகளில் மக்கள் வாங்குகின்றனர். இதை விற்கும் டீலர்கள் ஃபென்டானைல், கோக்கைன் மற்றும் ஹெராயின் போன்ற பிற சட்டவிரோத போதைப்பொருள்களுடன் கலக்குகின்றனர். இதனால் இதனை உட்கொள்பவர்களுக்கு, போதை தலைக்கேறி அவர்களை ஜாம்பி போல் நடக்கவைக்கிறது. 

இந்த போதைப்பொருள், உட்கொள்பவர்களின் தோல், தசைகள், இரத்த நாளங்கள் மற்றும் முக்கிய உறுப்புகளைச் சேதப்படுத்தி நிறைவில் கோமா அல்லது இறப்பினை ஏற்படுத்துகிறது. உடல் சதைகளை அழுகச் செய்கிறது. இதுமட்டுமில்லாமல் பலருக்கு தொற்றுநோய்களை ஏற்படுத்துவதுடன், பிரமை போன்ற மனநல பாதிப்புகளையும் உண்டு பண்ணுகிறது.

தவிர, இதை பயன்படுத்துபவர்களின் உடலில் பெரிய காயங்கள் ஏற்படுகின்றன. இவை பார்ப்பதற்கு ஜாம்பி கடித்ததுபோல் ஓட்டையுடன் காணப்படுகின்றன. இந்தக் காயங்கள் பாக்டீரியாவாலோ, புழுக்களாலோ பாதிக்கப்பட்டால் அது ஊனத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். டிராங்க் ஓவர்டோஸிற்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.   

நியூயார்க் மாநிலத்தில் 2021ம் ஆண்டில் ஃபென்டானைல் மற்றும் டிராங்க் எடுத்துக்கொண்டதன் காரணமாக 4,900க்கும் மேற்பட்ட  ஓபியாய்டு ஓவர்ேடாஸ் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. டிராங்க் பயன்படுத்துவது பற்றியும் அதன் பாதகங்கள் பற்றியும் அங்குள்ள மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு வரவில்லை. இப்போது நியூயார்க் நகர சுகாதாரத் துறை டிராங்க் பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பேராச்சி கண்ணன்