சூரியனைத் தொடும் தமிழச்சி!



மீண்டும் ஒரு சாதனைத் தமிழர். மற்றொரு விண்வெளித் திட்டத்துக்கு ஒரு தமிழர் தலைமை ஏற்றிருக்கிறார்.சந்திராயன் 1 திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்றிருந்தார். சந்திராயன் 2 திட்ட இயக்குநராக வனிதா முத்தையா இருந்தார். அடுத்து இப்போது வெற்றிகரமாக நிலவில் இறங்கிய சந்திராயன் 3 திட்டத்தின் இயக்குநராக வீர முத்துவேல் பொறுப்பேற்றிருந்தார்.

அடுத்து சூரியனை ஆராய ஆதித்யா எல் 1 (Aditya L1) என்ற விண்வெளி கலன் திட்டத்தின் இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்தியாவின் மிக முக்கியமான விண்வெளித் திட்டங்களுக்கு தொடர்ந்து தமிழர்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் இவர்கள் யாரும் ஆடம்பரமான அதிநவீன பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல. அரசுப் பள்ளிகளில் பயின்று இந்த நிலைக்கு உயர்ந்தவர்கள்.

நிகர் ஷாஜியும் அப்படியே. தென்காசிக்காரர். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, செங்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றவர். பின் திருநெல்வேலி அரசு பொறியியற் கல்லூரியில் பொறியியல் படித்தார். 1987ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இணைந்தார். 26 வருட அனுபவத்துக்குப் பிறகு விண்வெளித் திட்டத்துக்கு தலைமையேற்கும் அளவு உயர்ந்திருக்கிறார்.

நிகர் ஷாஜியின் கணவரும் பொறியாளர்தான். துபாயில் பணி புரிகிறார். மகன் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக இருக்கிறார். மகள் பெங்களூருவில் மருத்துவம் பயில்கிறார்.

இந்தியா இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் ஆதித்யா எல்1, சூரியனை பல விதங்களில் ஆராயும். 

மிகக் குறைந்த நாடுகளே சூரியனை ஆராய விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. இப்போது இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.பூமியிலிருந்து சூரியன் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 125 நாட்கள் பயணித்து சூரியனை விண்கலம் நெருங்கும். அதீத வெப்பம் காரணமாக சூரியனிலிருந்து சற்றுத் தள்ளி நின்றுதான் ஆய்வுகளை மேற்கொள்ளும்.  

என்.ஆனந்தி