ஆண்டாளை ஆன்மீகம் கலந்தே பார்க்கிறோம்...அவ்வையாரை அறிவுரைக்குப் படிக்கவிட்டோம்...ஆங்கில எழுத்தாளராக வலம் வரும் தமிழ் இயக்குநரின் மகளுடன் ஓர் உரையாடல்

சிந்து ராஜசேகரன் எழுதிய ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு ‘SO I LET IT BE’ இப்போது இலக்கிய உலகில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரைத் தேடிப் போய்ப்பார்த்தால் கனிவும், புன்னகையுமாகக் காத்திருக்கிறார். சிந்து வேறு யாருமல்ல.. சாதி, மதம், இனம், மொழி என எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு மானுடம் தேடிய தந்தை பெரியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கிய இயக்குநர் ஞானராஜசேகரனின் மகள்தான்!  

‘‘எழுத்தே வாழ்க்கையாகும் என நினைத்துப் பார்த்ததேயில்லை என்பதுதான் உண்மை. அப்பாவின் பணிகளைப் பொறுத்து வேறுபட்ட இடங்கள், அப்பாவின் படிப்பு வாசனை எல்லாம் என்னோடு சேர்ந்தே இருந்தது. அவர் எங்களை சுதந்திரமாக இருக்க அனுமதித்தார். நமக்கு இயல்பான, வேண்டியதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பிரியத்தை அவரே விட்டுக் கொடுத்தார்.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வளர்ப்பும், கலாசாரமும் எழுதுபவன் வாழ்வில் முக்கியப் பங்கெடுத்துக் கொள்கின்றன. குடும்பம் ஒன்றாகக் கூடும்போது எங்களின் வௌிப்பாடுகள் உற்சாகப்படுத்தப்பட்டது. பத்து வயதிலேயே ஒரு புத்தகம் எழுதிவிட முடிகிற பெண்ணை அவர்களும் சேர்த்து பாராட்டினார்கள். இப்போது அந்தப் புத்தகத்தைப் பார்த்தால் குழந்தைத்தனமாகத் தோன்றுகிறது. ஆனால், ஒரு முயற்சி, சொல்ல வந்ததை சொல்லித் தீர்த்த விதம் என எல்லாமே எனக்கு இன்றைக்கும் முக்கியமானதாகத் தோன்றுகிறது.

எஞ்சினியரிங் படிக்க அமெரிக்கா செல்ல இருந்தவள், க்ரியேட்டிவ் ரைட்டிங் படிக்க பிரிட்டன் போய்விட்டேன். எடின்பரோவில் இருக்கிற அந்தக் கல்லூரி பிரசித்தி பெற்றது. எழுதும் கலையின் கூர்மை உச்சம் போக அங்கே அவ்வளவு பயிற்சி தருகிறார்கள். அங்கே நான் படித்தது என்னை மேலும் வேறுபடுத்தியது. மனத்தெளிவும், கண்டு உணர்தலும் நடந்தன.

நான் இந்த இடத்தில் பெண்ணியம் சார்ந்த எழுத்தைக் கொண்டு வருகிறேன் எனச் சொல்லிக்கொண்டெல்லாம் எழுதுவதில்லை. பெண்கள் எந்த வகையிலும் கவுரவத்தை விட்டுத் தருவதோ, அவர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதோ பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

ஆனால், நம் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண் பார்வை வழியே மட்டுமே சொல்லப்படுகின்றன. ஆணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான கணங்களுக்கு மட்டுமே பெண்கள் படைக்கப்பட்டவர்களாகவும், அவர்களிடம் காதல், அன்பு, உற்சாகம், பணிவு, நம்பிக்கை, கற்பு, தியாகம் எல்லாமே எதிர்பார்க்கப்
படுகின்றன.

நம் முன்னோர்களில் ஆண்டாளை விடவும் பாண்டித்தியம் பெற்றவர் கிடையாது. நாம் அவரையும் ஆன்மீகம் கலந்தே பார்க்கிறோம். அவர் இன்னும் எழுதியிருக்கக்கூடும். நாம் பார்க்க அவை கிடைக்கவில்லை என்றே சொல்வேன். அவ்வையாரையும் அறிவுரைக்குப் பழக்கிவிட்டோம்.
பெண்களைத் தெய்வங்களாக்கிப் போற்றும் சமூகம், எதிர்ப்படும் பெண்களுக்கு மதிப்பளிப்பதில்லை. அவர்களின் மன உளைச்சல்கள், வேதனைகள், உறவுச்சிக்கல்களைக் கண்டுகொள்வதில்லை. துக்கத்தின் வேர்களை நோக்கி பெண்கள் செல்வதை இங்கே எழுதுவதில்லை.

ஆகவே, பெண்களின் எழுத்து மிகவும் முக்கியமானது. இங்கே ஒரு பெண்ணைப் பார்த்தால் எப்படி அவர்களைப் பற்றி யோசிப்பது என்பது கூட இன்னும் யாருக்கும் புரிபடவில்லை. எனவே, பெண்கள் இப்போது ‘Don’t care’ என ஆகிவிட்டார்கள். கட்டுப்பெட்டித்தனத்தை உதறியும், அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். நீங்கள் பெண்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றிய கவலை அவர்களுக்குக் கிடையாது.
இவ்வேளையில் என்னுடைய எழுத்துகளை முக்கியமாகக் கருதுகிறேன்.

எனக்கு இங்கே ஆர்.சூடாமணியின் எழுத்துகள் மிகவும் பிடிக்கும். மிகவும் மெல்லிய வகையில் அவர் எழுதியிருப்பதை விரும்புவேன். நம் புன்னகைகளை ஏற்க மறுத்து, நம் ஒப்பனைகளை நம்ப மறுத்து, நாம் நடிக்கும் பண்பாடு, சமூகம், உறவுகளில் அபூர்வமாக சுடர் விடும் ஒளியை அவர் காட்டுகிறார்.

என் கதைகளின் அனுபவம் வாசகனுக்குக் கடத்தப்பட்டாலே போதுமானது. என்னைச் சுற்றியுள்ள அனைத்தும் பாதிக்கும்போது நான் எப்படி எழுதாமல் இருக்க முடியும்...’’ எனக் கேட்கிற சிந்துவிற்கு சுசாந்த் தேசாய் என்ற காதல் கணவரும், ஆர்யா என அழைக்கப்படுகிற
தேவதையும் இருக்கிறார்கள்.

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்