சுவிஸ் வங்கியில் பதுக்கப்படுவது எது..?தன்னிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளில் 32% பணமாகத்தான் உள்ளது என அறிவித்திருக்கிறது UBS எனப்படும் ‘யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து’. சுருக்கமாக சுவிஸ் வங்கி!

அதாவது தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களிலோ அல்லது சேமிப்புப் பத்திரங்களிலோ இப்போது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே இதன் பொருள். உலகம் முழுதும் உள்ள பெரும்பாலான பணமுதலைகள் சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். இதில் கணிசமானவர்கள் கட்டுக்கட்டாக ரொக்கப் பணத்தைத்தான் பதுக்கியிருக்கிறார்கள். 24 X 7 இப்பணத்தை எடுக்க முடியும்... தேர்தல் முதல் லஞ்ச லாவண்யம் வரை சகலவிதமான கறுப்பு - வெள்ளை வேலைகளுக்கும் ரொக்கமாக வைத்திருப்பதே வசதி... என பல காரணங்களால் முதலீட்டாளர்கள் இந்த பதுக்கலை செய்கிறார்களாம்.

இதில் ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்காவின் பங்கு மட்டும் 36%! சொந்த நாட்டு பணக்காரர்களான சுவிட்சர்லாந்துவாசிகள் 31%யும், ஐரோப்பியர்கள் 35%மும் ரொக்கமாக வைத்திருக்கிறார்களாம். பெரியண்ணன் அமெரிக்காவின் பங்கு இதில் 23%தான்.
‘‘பணமாக வைத்திருப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல, உடனடி பட்டுவாடாவுக்கும் சுலபமானது. ஆனால், நீண்ட கால அளவில் முதலீடு செய்ய ரொக்க சேமிப்பு அவ்வளவு உகந்தது அல்ல...’’ என்கிறார் சுவிஸ் வங்கியின் புவிக்கோள நிதி நிர்வாகப் பிரிவின் வாடிக்கையாளர் திட்ட அலுவலரான பெளலோ பொலிட்டோ.

திடீரென அரசு பண மதிப்பிழப்பு போன்ற ஒரு கொள்கையை அறிவித்தால் பணம் போயே போச்சு என்பது அவர் வாதம். இதற்குத்தான் லேட்டஸ்ட் உதாரணமாக இந்தியா இருக்கிறதே! டீமானிட்டைசேஷன் அமலுக்கு வந்தபோது என்னவெல்லாம் நடந்தது என்பதற்கு ரத்த சாட்சியே நாம்தானே!  
‘‘இப்போது உலகம் முழுதும் இருந்து ரொக்கம் அதிகமாக உள்ளே வருவதை கவனிக்கிறோம்.

முதலீட்டாளர்கள் வழக்கம்போல் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யாமல் இப்படி பன்முகமான வழிகளில் செல்வத்தைக் கொண்டுவருவது நல்ல விஷயம்தான். இந்த ஆண்டு உலகம் முழுதும் பங்குச்சந்தை நன்றாகவே உள்ளது. எது எப்படியோ... இந்த ரொக்கப் பணம் முதலீடாகக் குவிவதை நாங்கள் வரவேற்கிறோம்...’’ என்கிறார் பெளலோ.

விரைவில் பங்கு வர்த்தகம் சரிவடையும் என்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் செல்வந்தர்களின் அச்சம் காரணமாகவே இப்போது அதிக அளவில் பணம் குவிவதாகவும் சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.இந்த ரொக்க முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 42% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கிறது சுவிஸ் வங்கி.

தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் பணத்தை இங்கு கொண்டுவந்து தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பணமுதலைகள் முதலீடு செய்கிறார்கள் எனில் ஆசியர்களுக்கு, குறிப்பாக ஜப்பான், சீனா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்களின் நோக்கம் வேறாக இருக்கிறது. ஆசியாவில் நடக்கும் வணிகப் போரால் திடீரென பொருளாதாரம் சரிந்தால் என்ன செய்வது என்ற அச்சத்திலேயே ரொக்கத்தை பதுக்குகிறார்களாம்.

சரி. அமெரிக்கர்களுக்கு..? எலியைப் பூனை பிடித்தும் விட்டும் விளையாடுவது போல் இதுஒரு ஆட்டம்! அவ்வளவுதான்.  இப்படி ஓர் அறிக்கையை சுவிஸ் வங்கி இப்போதுதான் முதன் முதலாக வெளியிட்டுள்ளது என்பதால் இதற்கு முந்தைய காலங்களில் இது எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டு இப்போது என்ன நடக்கிறது என்று நம்மால் சொல்ல முடியாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். எது எப்படியோ, இங்கு பலகோடி மக்கள் ஒருவேளை சோற்றுக்குக் கூட ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்க, அங்கு ஒருசிலர் தேசத்தின் மொத்த வருவாயையும் பதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.                     

இளங்கோ கிருஷ்ணன்