தலபுராணம் -கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகம்‘மனநல மருத்துவமனை’ எனப் ெபயர் மாற்றமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு டாக்டர் ஹெச்.எஸ்.ெஹன்ஸ்மேன் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரே, முதல் இந்திய கண்காணிப்பாளர்.

இவருடன் எடின்பர்க்கில் மனநலம் படித்த டாக்டர் ஜி.ஆர்.பரசுராம் துணை கண்காணிப்பாளராக இணைய, இரண்டு பேருமாக மருத்துவ
மனையில் மேலும் சில கட்டடங்கள் உருவாக வழிவகுத்தனர்.இவர்கள் இருவருமே மனநலம் பற்றி பயிற்சி எடுத்த மருத்துவர்கள் என்பதால், மன நோய்கள் பற்றி படிக்க வரும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தனர். 1937ம் வருடம் ஹென்ஸ்மேன் ஓய்வு பெற்றதும் அந்த இடத்தில் டாக்டர் எஸ்.வெங்கடசுப்பாராவ் வந்து சேர்ந்தார்.

பின்னர், துணை கண்காணிப்பாளரான பரசுராம் இரண்டாம் உலகப் போரில் ராணுவத்தினருக்குச் சேவை செய்யச் சென்றுவிட்டார். இதனால், வெங்கடசுப்பாராவின் பணிக்காலம் முடிந்ததும் டாக்டர் ஜெ.தைரியம் கண்காணிப்பாளர் ஆனார். இதுவரை மனநலத்திற்கென மருந்துகள் எதுவும் இருக்கவில்லை. உள்நாட்டு மருத்துவ முறைகளே (ஆயுர்வேதம், சித்தா) பின்பற்றப்பட்டு வந்தன. இதில், சிலரே குணமாகி வெளியேறினர். அதனாேலயே பிரிட்டிஷ் காலத்தின் தொடக்கத்திலிருந்து இது காப்பகமாக மட்டுமே இருந்து வந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு, டாக்டர் ஏ.எஸ்.ஜான்சன் கண்காணிப்பாளரானார். இவரின் காலத்தில், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.மருத்துவமனை பதிமூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்பது பிரிவுகள் ஆண்களுக்கும், நான்கு பிரிவுகள் பெண்களுக்குமாக ஒதுக்கப்பட்டன. ஆண்கள் பிரிவு ஆண்கள் மருத்துவமனை என்றும், பெண்கள் பிரிவு பெண்கள் மருத்துவமனை என்றும் அழைக்கப்பட்டன.
புதியதாக சேர்க்கப்படும் நோயாளிகள் முதலில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் சிகிச்சை தரப்பட்டது. பிறகு, மனநோயைப் பொறுத்து அவர்கள் வகைப்படுத்தப்பட்டு மருத்துவமனையின் வார்டுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தேர்ந்த பயிற்சி பெற்ற செவிலியர்கள் இவர்களைக் கவனித்துக் கொண்டனர். இதனால், 800 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதே போல ஒரு மடங்கு அதிகரித்தது. அத்துடன், படுக்கை எண்ணிக்கையும் 1800 ஆகக் கூடியது.1957ம் வருடம் டாக்டர் டி.ஜார்ஜ் கண்காணிப்பாளரானார். இந்நேரம், மருத்துவர்களின் நிர்வாகப் பளுவைக் குறைக்க செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அத்துடன், நோயாளிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், ‘ஓபன் ஹாஸ்பிட்டல்’ முறை கொண்டு வரப்பட்டது. அதாவது, வார்டுகளின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டன.அதில் ஒரே ஒரு வார்டின் கதவு மட்டும் ‘கிரிமினல்’ மனநோயாளிகளுக்கும், வலிப்பு நோயாளிகளுக்கும் மூடிய நிலையில் இருந்தது. டாக்டர்கள் பரிந்துரைக்கும் சில நோயாளிகள் தனியறையில் பூட்டப்பட்டனர்.

இவரின் காலத்தில் இரண்டு புதிய கட்டடங்கள் காச நோயாளிகளுக்கெனக் கொண்டு வரப்பட்டன. ஏற்கனவே இருந்த ஒன்பது ஆண்கள் பிரிவு பத்தாகவும், நான்கு பெண்கள் பிரிவு ஐந்தாகவும் உயர்ந்தன. இந்நேரமே, மனநலத்திற்கென புதிய மருந்துகள் வந்தன.இதற்கிடையே பெங்களூரிலுள்ள அகில இந்திய மனநல மருத்துவ நிறுவனம் 1955ம் வருடம் மனநலத்தில் தனது முதல் டிப்ளமோ படிப்புகளைத் தொடங்கியது. டாக்டர் பூஷணமும், டாக்டர் ஓ.சோமசுந்தரமும் இங்கிருந்து சென்று அங்கே பயிற்சி எடுத்துத் திரும்பினர்.

இந்நிலையில், மனநல சிகிச்சையை மாவட்ட அளவிலும் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதன்படி 1957ம் வருடம் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல கிளினிக் திறக்கப்பட்டது. இதன்மூலம் கீழ்ப்பாக்கம் வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

1961ம் வருடம் சாரதாமேனன் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக வந்து சேர்ந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர். அவர் ஓய்வு பெறும் வரை கிட்டத்தட்ட 17 வருடங்கள் இங்கே பணியாற்றினார். அவரின் காலத்தில் பல்வேறு முன்முயற்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், வெளிநோயாளிகளுக்கென்று மருத்துவமனையின் காம்பவுண்டிற்கு வெளியே தனி கட்டடம் கட்டப்பட்டது.

பின்னர், ஓ.சோமசுந்தரம் கண்காணிப்பாளரானார். இவர், குழந்தை மனநலத்தில் சிறப்பு மருத்துவராக விளங்கினார். இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த கண்காணிப்பாளர்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்தனர். இப்போது எப்படி இருக்கிறது? மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பூரண சந்திரிகாவிடம் பேசினோம். ‘‘நான் இங்க வந்து பனிரெண்டு வருஷங்களாச்சு. என்னோட சேர்த்து இப்ப ஆறு தலைமை மருத்துவர்கள், 24 உதவி மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இன்னைக்கு உள்நோயாளிகள்ல ஆண்கள் 501 பேர், பெண்கள் 346 பேர்னு மொத்தம் 847 பேர் இருக்காங்க.

வெளிநோயாளிகள் 467 பேர் வந்திருக்காங்க. இது தினமும் மாறிட்டே இருக்கும்இங்க வர்ற வெளிநோயாளிகளுக்கு அங்கேயே மருந்துகள் கொடுத்து சரிப்படுத்துவோம். இல்லைன்னா, தீவிர பிரிவுல பத்து நாட்கள் வைச்சு கண்காணிப்போம். அங்கயும் சரியாகலைன்னா உள்நோயாளிகள் பகுதிக்கு அனுப்புவோம். இப்ப நவீன மருத்துவமும், மருந்துகளும் வந்திட்டதால நோயாளிகளைச் சீக்கிரமே குணப்படுத்த முடியுது.
இது மொத்தம் 63 ஏக்கர் நிலம் கொண்டது. இதுல ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனிபகுதிகள் இருக்கு. தவிர, குடிநோயாளிகளுக்கென்று தனி வார்டு இருக்கு.

இப்ப, போதைப் பொருட்களுக்கு அடிமையான சிறார்களுக்காகத் தனி வார்டு திறக்கிற ஐடியாவுல இருக்கோம். இதுக்கு, டில்லி எய்ம்ஸ் உடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கு. அதனால, இந்த மருத்துவமனையை போதை மருந்து சிகிச்சை நிலையமா அறிவிச்சிருக்காங்க. அத்துடன், ஓபியாய்டு சிகிச்சைக்கும் நிதி கொடுக்க இருக்காங்க. இனிமேல் இதற்கும் தரமான சிகிச்சை இங்க கிடைக்கும். தவிர, ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஒரு ஓபி திறக்கலாம்னு இருக்கோம்.’’

விரிவாகத் தெரிவித்த பூரணி சந்திரிகா, ‘‘இங்குள்ள நோயாளிகளுக்கு கைத்தொழில் கற்றுக் கொடுக்குறோம். இது ஒரு வகையான சிகிச்சை. இதுக்கு இண்டஸ்ட்ரியல் தெரபி சென்டர்னு பெயர். அதாவது, தொழில்வழி மருத்துவ சிகிச்சைனு சொல்லலாம். அதை நேரடியா போய் பார்த்திட்டு வாங்க...’’ என நம்மை தெரபி சென்டரின் பொறுப்பாளர் அம்பிகாவிடம் அறிமுகப்படுத்தினார்.

அதென்ன தொழில்வழி மருத்துவ சிகிச்சை?

‘‘இங்க ஆண் நோயாளிகளுக்கு தோட்டக்கலை, பேக்கரி ஐயிட்டங்கள் செய்றதுனு சில பணிகளைக் கொடுக்குறோம். பெண்கள், கூடை பின்னுதல், ஃபைல் தயாரித்தல், மெழுகுவர்த்தி செய்தல் ேபான்ற பணிகளை மேற்கொள்றாங்க. இதன்மூலம் வேண்டாத சிந்தனைகளுக்கு ஆட்படவிடாமல் ஏதாவது ஒரு வேலையில ஈடுபடுத்துறோம். அப்புறம், அவங்க குணமாகி வெளியே போய் இந்த வேலையைத் தொடர முடியும்...’’ என்றபடியே தோட்டப் பகுதிக்கு நம்மை அம்பிகா அழைத்துச் சென்றார்.

புடலங்காய், பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பப்பாளி, எலுமிச்சை, வாழை என அந்த ஆளுயர காம்பவுண்டுக்குள் பச்சைப் பசேல் நிறத்தை குளிர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு தோட்டத்தைப் பராமரித்து வருகின்றனர் நோயாளிகள். ‘‘இங்க ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சமையல் நடக்குது.

அதிலிருந்து வரும் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கிறோம். இங்க விளையிற காய்கறிகளை வெளிநோயாளி பிரிவுல வச்சு விற்கிறோம். டாக்டர்களும், படிக்கிற மாணவர்களும் கூட வாங்கிட்டு போவாங்க. கடந்த நாலு மாசத்துல காய்கறிகள் மூலம் 9,750 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இந்தப் பணத்தை நோயாளிகளின் நலனுக்குப் பயன்படுத்தணும்னு இயக்குநர் மேடம் சொல்லியிருக்காங்க. அப்புறம், பேக்கரி இருக்கு. அங்க கேக், பிஸ்கட், ரொட்டி எல்லாம் தயாரிக்கிறோம்...’’ என்றபடியே அங்கேயும் நம்மை அழைத்துப் போனார் அம்பிகா.

ஐந்தாறு பேர் பிரட், கேக், பிஸ்கட் தயாரிப்பில் விறுவிறுப்பாக இருந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த பயிற்றுநர் அதை சொல்லித் தந்தபடியே இருந்தார்.
‘‘ஓரளவு குணமான நோயாளிகளை மட்டுமே இந்த ஐடிசி பணிக்குக் கொண்டு வர்றோம். பணி செய்ற நோயாளிகளுக்கு பணத்திற்கு பதிலா டோக்கன் கொடுத்திடுவோம். ஒரு நாளைக்கு மூணு மணிநேரம்தான் வேலை. அதுக்கு, பதினைந்து ரூபாய் வரை டோக்கன் கொடுப்போம். அந்த டோக்கனை பயன்படுத்தி அவங்க கேன்டீன்ல பிடிச்சதை வாங்கி சாப்பிட்டுக்கிடலாம். இல்லைன்னா, அந்த டோக்கனை நாங்க சேர்த்து வச்சு அவங்க டிஸ்சார்ஜ் ஆகும்போது பணமா கொடுத்திடுவோம்.

முன்னாடி பிரட் அதிகம் தயாரிச்சு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக் கொடுத்திட்டு இருந்தோம். இடையில நின்னுடுச்சு. திரும்ப ஆர்டர் கேட்டுட்டு இருக்கோம். இப்ப கேக்கும், பிஸ்கட்டும் பண்றோம். பெரும்பாலும் இங்கேயே வித்துத் தீர்ந்திடும்...’’ என்றவர், பெண்கள் பகுதியில் நடக்கும் ஐடிசியைக் காண்பித்தார்.  

அழகுப் பூங்கொத்துகள், பொக்கேகள், பொம்மைகள், மெழுகுவர்த்திகள், ஃபைல்கள், கூடைகள், செல்போன் கவர்கள், ஹேண்ட்பேக்குகள் என விதவிதமான வேலைப்பாடுகளைப் பார்க்க முடிந்தது.

‘‘கடந்த வருஷம் குறளகத்துல நடந்த கண்காட்சியில ஒரு மாசம் கடை போட்டோம். 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாச்சு! இந்த வருஷம் போடுறதுக்கு இப்பவே ஆயத்தமாகிட்டு இருக்கோம்...’’ என்றார் அம்பிகா.      

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் இவர்தான்!

கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் ரோட்டில் வசித்து வருகிறார் டாக்டர் சாரதாமேனன். மெல்லிய குரலில் பேசும் அவருக்கு வயது 96. பாலக்காடு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமம் இவரின் பூர்வீகம். தந்தை கே.எஸ்.மேனன், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். தாய் நாராயணி.  
‘‘நான், பெங்களூர் மனநலப் பயிற்சி நிறுவனத்துல மூன்றாவது பேட்ச் மாணவி.

எனக்கு முன்னாடி முதல் பேட்ச்ல ஒரு மாணவி இருந்தாங்க. அவங்க முடிச்சிட்டு அமெரிக்கா போயிட்டாங்க. அப்புறம், என்னோட இன்னொரு மாணவியும் படிச்சாங்க. அவங்க பாஸாகல. அதனால, நான் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவராகிட்டேன்!’’ என மெலிதாகச் சிரிக்கும் அவர் தன்னுடைய கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘எம்.பி.பி.எஸ்., எம்.டி முடிச்சிட்டு ஜி.ஹெச்ல வேலைக்குச் சேர்ந்தேன். 1951ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்ப ஒரு பதினைஞ்சு வயசு பெண் மனநலம் சரியில்லாம அனுமதிக்கப்பட்டாங்க. ரொம்ப அடம்பிடிச்சாங்க. ஊசி போட்டதும் கொஞ்ச நேரம் தூங்கினாங்க. அப்புறம், மறுபடியும் பிரச்னை செய்தாங்க. என்னால ஒண்ணும் செய்ய முடியல. பிறகு, அந்தப் பெண்ணை வீட்டுக்கே அழைச்சிட்டு போயிட்டாங்க.

எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்துச்சு. இந்த மாதிரி மனநிலை சரியில்லாதவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. பிறகு மனநலம் சம்பந்தப்பட்ட படிப்புல பயிற்சி எடுக்கலாம்னு நினைச்சேன். 1955ல் ைசக்கியாட்ரிக் கோர்ஸ் பெங்களூர்ல வந்தது.அங்க பயிற்சி எடுக்க டெபுடேஷன்ல போனேன். ெரண்டு வருஷப் பயிற்சி. பிறகு, மனநல மருத்துவமனையில வேலைக்குப் போட்டாங்க. அடுத்த வருஷமே கண்காணிப்பாளரா ஆகிட்டேன்.
 
அந்த நேரம் மருந்துகள் எதுவும் கிடையாது. ஆயுர்வேதிக் மாதிரியான நம்ம பாரம்பரிய வைத்தியம்தான் செய்திட்டு இருந்தாங்க. நோயாளிகளைத் தூங்க வைக்க ஒரு ஊசி மட்டும் இருந்துச்சு. அதைப் போட்டால் நான்கு மணி நேரம் தூங்குவாங்க. ஆனா, அது ரொம்ப வலியா இருக்கும். நான் பயிற்சி முடிக்கும்போது சில மருந்துகள் வந்தது. அதுக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிச்சது.  

ஆரம்பத்துல, முகவரி மட்டும் பார்த்துட்டு உள்ளே அனுமதிப்பாங்க. ஆனா, கொண்டு வந்து விடுறவங்க முகவரியை தப்பா கொடுத்திடுவாங்க. இதனால, நிறைய நோயாளிகள் குணமாகியும் தவறான முகவரியால வீட்டுக்கு அனுப்ப முடியாம இருந்துச்சு. நான் வரும்போது 888 நோயாளிகளுக்குதான் உள்ளே அனுமதி. ஆனா, ஆயிரத்து 800 பேர் இருந்தாங்க. நான் கண்காணிப்பாளரா ஆகும் போது இரண்டாயிரத்து 800-ஐ ெதாட்டுடுச்சு.

இதனால, இதை குறைக்கணும்னு நினைச்சேன். பெங்களூர் மாதிரி வெளிநோயாளிகள் பிரிவு வேணும்னு அரசுகிட்ட கேட்டேன். ஓர் இடம் கொடுத்தாங்க.பிறகு, நோயாளிகளுக்கு நல்ல வசதிகள் செய்து கொடுத்தேன். சாப்பாடு கொடுத்தால் மட்டும் போதாது. அதை சரியா சாப்பிடுறாங்களானு பார்க்கணும். ஒரு குழந்தையைப் பார்க்கிற மாதிரி கவனிக்கணும்.

அப்புறம், அட்மிஷனை கவனமா போட ஆரம்பிச்சோம். பிறகு, சமூக ஆர்வலர்களை உள்ளே கொண்டு வந்தோம். அவங்களை வச்சு குடும்பத்திடம் பேசி நோயாளிகளை அழைச்சிட்டு போக வச்சோம்.  என் ஆசையெல்லாம் இங்க இருக்கிறவங்க சீக்கிரம் குணமாகி வீட்டுக்குப் போய் குடும்பத்துடன் பழையபடி சந்தோஷமா வாழணும் என்பதுதான்.

மனநோய் என்பது மத்த நோய்கள் போல ஒரு சாதாரண நோய்தான். மருந்து கொடுத்தால் எப்படி மற்ற நோய்கள் குணமாகுதோ அதே
மாதிரிதான் இதுவும். சில நோய்களுக்கு மட்டும் தொடர்ந்து மருந்து எடுக்கணும். எப்படி நீரிழிவுக்கும், ஆஸ்துமாவுக்கும், ரத்தக் கொதிப்புக்கும் தொடர்ந்து மருந்து எடுத்துக்குறோமோ அதுபோல. அப்படி எடுத்துக்கிட்டா எந்தப் பிரச்னையும் இல்லாம எப்பவும் போல சமூகத்துல வாழலாம்...’’ என்கிறார் டாக்டர் சாரதா மேனன்!

பேராச்சி கண்ணன்  ஆ.வின்சென்ட் பால்

ராஜா