எஸ்.ஜே.சூர்யா OPEN TALK நான் நடிகன்தான்... ஆனா, இன்னும் ஹீரோ ஆகலை!‘‘நடிகனாகும் கனவுலதான் சினிமாவுக்கே வந்தேன். காலேஜ் முடிச்சதும் நிறைய வேலைகள் கிடைச்சது. அதை எல்லாம் உதறிட்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா என் கேரியரை ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 25 வருஷங்கள் ஓடியே போச்சு. இன்னமும் போராடிட்டு இருக்கேன். வாழ்க்கைல பல ஏற்ற, இறக்கங்களை சந்திச்சுட்டேன். திடீர்னு எகிறி அடிச்சு டாப் கியர்ல உச்சத்துக்கும் போயிருக்கேன். அதே வேகத்துல டமால்னு கீழயும் விழுந்திருக்கேன். பல் உடைஞ்சு, மூஞ்சு முகரையெல்லாம் பெயர்ந்தும் இருக்கேன்.

ஆனாலும் கலங்காம எழுந்திரிச்சு காயங்களுக்கு மருந்து போட்டுட்டு மறுபடியும் மலை மேல ஏற ஆரம்பிச்சிருக்கேன். இயக்குநரா மட்டும் டிராவல் பண்ண நினைச்சிருந்தா இவ்வளவு காயங்கள் உடம்புல வந்திருக்காது. இதுக்காக ஒருநாளும் நான் வருத்தப்பட்டதில்ல. நம்பிக்கையையும் கைவிட்டதில்ல. கீதைல சொல்லியிருக்கற ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’தான் என் தாரக மந்திரம்! கடமையைச் செய்யறேன். பலன் கிடைக்கும்போது கிடைக்கட்டும்...’’

ஆர்ப்பாட்டமின்றி நிதானமாக மனதில் இருந்து பேசுகிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘மான்ஸ்டர்’, ‘இறவாக்காலம்’, அமிதாப்பச்சனுடன் ‘உயர்ந்த மனிதன்’ என ஹீரோவாகவும் மனிதர் இப்போது பிசி.

‘‘ஒரு நல்ல நடிகன் என்கிற இடத்துக்கு வர்றதுக்கே இத்தனை காலமாகிடுச்சு. இன்னும் நான் ஹீரோவாகல. இனிமேதான் ஆகணும்! பூவின் குணம் மணத்தைப் பரப்புவதுதான். ரேடியத்தின் செயல் ஒளியைப் பாய்ச்சுவதுதான். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குவாலிட்டி இருக்கு. இந்த வகைல நடிகன் கதாபாத்திரத்தை ஏற்று நான் பிரதிபலிக்கத் தெரிஞ்சவன்.

ஸ்டார்னா, ஐ மீன் ஹீரோனா என்னைப் பொறுத்தவரை ஐடியாலஜி உள்ள ஒரு நல்ல ஆக்டர். காந்தம் மாதிரி ஈர்க்கக்கூடியவன். மேக்னட் எல்லாத்தையும் ஈர்க்காது. அது இரும்பை மட்டும்தான் ஈர்க்கும்!இந்த குவாலிட்டி சிலருக்கு பிறப்புலயே வந்துடும். சிலர் போராடிப் பெறுவாங்க. மைக்கேல் ஜாக்சனுக்கு பிறப்புலயே அந்த காந்தம் இருந்தது. எம்ஜிஆர் அதை போராடித்தான் பெற்றார்!

ஒரு நேரத்துல எனக்கும் ஸ்டார் ஆகணும்னு கனவு இருந்தது. இப்ப இல்ல. இருக்கு. ஆனா, இல்ல! நான் எவரெஸ்ட்டை நோக்கி ஏற ஆரம்பிச்சிருக்கேன். அதுதான் இலக்கு. இந்த ரியாலிட்டியை புரிஞ்சு வச்சிருக்கேன். அறியாமைல வாழல. யெஸ். கடமையைச் செய்யறேன். பலனை எதிர்பார்க்கல...’’ தீர்க்கமாகப் பேசுகிறார் எஸ்.ஜே.சூர்யா.

பாக்யராஜ், டி.ஆர். மாதிரி நீங்களும் உங்களுக்கான கதாபாத்திரத்தை உருவாக்கி, இயக்கி ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ பண்ணியிருந்தீங்க. அந்த வழியை ஏன் தொடரலை?விரும்பல. ஏன்னா எனக்குள் இருந்த டைரக்டரையும், தயாரிப்பாளரையும் வைச்சு நடிகன் எஸ்.ஜே.சூர்யாவை உருவாக்கினேன்; உருவாக்கப் பயன்படுத்தினேன். இன்னும் சொல்லப்போனா பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்னு நான் எடுத்த அத்தனை அவதாரங்களும் நடிகன் எஸ்ஜே.சூர்யாவை ஷேப் பண்ணத்தான்.

உருவாக்கியாச்சு... இனிமே நடிகன் எஸ்.ஜே.சூர்யா வளரணும். அதுக்கு இவங்க எல்லாம் பயன்படக்கூடாதுனு முடிவெடுத்தேன். இல்லைனா இந்த சப்போர்ட்டை கடைசிவரை நடிகன் எஸ்.ஜே.சூர்யா எதிர்பார்ப்பான்! மத்தவங்க இயக்கத்துல நடிச்சிட்டிருந்தா மட்டும்தான் stardom வரும். இதைக் குறிப்பிடும் விதமாதான் நான் இன்னும் ஹீரோவாகலனு சொல்றேன். இப்படி நடிச்சுதான் அமிதாப் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார் எல்லாம் சூப்பர் ஸ்டார்ஸ் ஆனாங்க.

நாமளே நம்மை டைரக்ட் பண்ணிட்டிருந்தா இந்த நிலைக்கு ஒருநாளும் வந்து சேரமாட்டோம். ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு நமக்கே அது தொல்லையாதான் வந்து நிற்கும். இந்தத் தொல்லை மத்தவங்க இயக்கத்துல நடிக்கிறப்ப வராது. டிரபிள் வர்றப்ப தூக்கி விட எல்லா டைரக்டர்ஸும் வருவாங்க! எப்படி வந்திருக்கு ‘மான்ஸ்டர்’?

ரொம்பவே சிம்பிளா... ஸ்வீட்டா.. மேஜிக்கா வந்திருக்கு! என் படங்கள்ல முதன் முறையா ‘யு’ சர்டிபிகேட் வாங்கியிருக்கும் படம் இதுதான்! குழந்தைகளுக்கான படம்னு இதைச் சொன்னாலும் ஃபேமிலி ஆடியன்ஸை முழுசா திருப்திப்படுத்தும்.வில்லனா ஒரு எலி நடிச்சிருக்கு! எலி என்பது விநாயகரின் வாகனம். இந்த எண்ணமே மிகப்பெரிய ஆசீர்வாதமா நினைக்கறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுசார் இந்தக் கதையைச் சொன்னதும் உடனே கமிட் ஆனேன்.

இதோட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் சென்ஸிபிளானவர். அருமையான ரைட்டர். எழுதிய வசனத்தை நடிகர்கள் எப்படிப் பேசணும்... அவங்க அதை எப்படி சீரா கொண்டு போகணும்... கதையின் லிமிட் எதுனு எல்லா பேராமீட்டரையும் சரியா கையாளத் தெரிஞ்சவரா இருக்கார்!

படத்தோட ஒளிப்பதிவாளர் கோகுல் விநாயக், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்னு சரியான டெக்னீஷியன்ஸை நெல்சன் வெங்கடேசன் தேர்ந்தெடுத்திருக்கார்.

ஹீரோயினா பவானி சங்கர் நடிச்சிருக்காங்க. நல்ல பெர்ஃபாமர். ஹோம்லியா நடிச்சாலும் தனக்குனு ஒரு ஃபேன் பேஸ் வைச்சிருக்கும் ரேவதி, ஜோதிகா, அசின், ஷாலினி மேடம்ஸ் மாதிரி வருவாங்க. அந்தத் தரம் அவங்ககிட்ட இருக்கு.அடுத்து..?‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. ‘இறவாக்காலம்..’ அழகான எமோஷனல் த்ரில்லர். அது சர்வதேசத் தரத்துல இருக்கும். ஷூட்டிங் போயிட்டிருக்கு. செல்வராகவன் சார், நெல்சன் சார், அஸ்வின் சார்னு நல்ல இயக்குநர்கள் எனக்கு அமையறாங்க. சந்தோஷமா இருக்கு.

இதையடுத்து நான் நடிக்கற ‘உயர்ந்த மனிதன்’ல அமிதாப்பச்சன் சார் நடிக்கறார்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஒரு ஷெட்யூல் ஷூட் போயிட்டு வந்துட்டோம். எத்தனையோ ஜாம்பவான்கள் நகர்த்த விரும்பற தேராக  இருப்பவர் அமிதாப்பச்சன் சார். அந்தத் தேரை ஓரமா நின்னுக்கிட்டிருந்த நாங்களும் இழுக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உடனே சம்மதிச்சுட்டார். லெஜண்ட் இஸ் ஆல்வேஸ் லெஜண்ட். நடிக்கறதே தெரியாத அளவுக்கு அசால்ட்டா நடிச்சுட்டுப் போயிடறார். அவருடன் நடிப்பது வரம்! என்னாச்சு ‘நெஞ்சம் மறப்பதில்லை’?

செல்வராகவன் சார் நிஜமாகவே லெஜண்டரி டைரக்டர். அவர்கிட்ட நடிச்ச எல்லாருமே அவங்க கேரியரை செல்வா சாருக்கு முன்... செல்வா சாருக்குப் பின் என்றுதான் கணக்கு வைச்சுப்பாங்க. அவ்வளவு பொட்டன்ஷியலானவர். அவர்கிட்ட நானும் நிறைய கத்துக்கிட்டிருக்கேன். இன்னமும் அந்தப் படம் ரிலீஸாகாமல் இருக்க நானோ செல்வா சாரோ காரணமில்ல. சில சூழல்களால் அது முடங்கியிருக்கு. விரைவில் வெளியாகும்னு நம்பறோம்.

நடிகைகள்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி இது...புரியுது. எப்ப கல்யாணம்..? இதுதானே! இன்னும் அந்த ஐடியாவே தோணல. நான் அடைய வேண்டிய இலக்கை இன்னும் அடையவே இல்ல. அந்த புரொஃபஷனல் இலக்கை அடையும்போது, யோசிக்கலாம். ஆனா, அந்த இலக்கை நோக்கி ஓடும்போதே, கண்ணைக் கட்டுதே!             

மை.பாரதிராஜா