பாக்ஸ் ஆபீசை ஒரு காட்டு காட்டும் கிழவர்கள்!



இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திப்படம், ‘கடர் 2’. கடந்த செப்டம்பர் 1ம் தேதி வரையிலான வசூலே 625 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.
இந்த வருடம் வெளியாகி, அதிக வசூலைக் குவித்த இந்தியப் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தையும்; இதுவரையில் வெளியான இந்தியப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளது ‘கடர் 2’.

அத்துடன் இந்தி மொழியில் அதிக வசூல் செய்த இரண்டாம் பாகம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் மீதமிருக்கும் வசூல் சாதனைகளையும் ‘கடர் 2’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்ல, 2001ல் வெளியான முதல் பாகமான ‘கடர்: ஏக் பிரேம் கதா’ கூட ரூ.18 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.133 கோடியை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

‘கடர் 2’வின் மூன்று முக்கிய தூண்களான நாயகன் சன்னி தியோல், இயக்குநர் அணில் சர்மா, திரைக்கதையாசிரியர் சக்திமான் தல்வார் ஆகியோர் 60 வயதைத் தாண்டிய கிழவர்கள் என்பதுதான் இதில் ஹைலைட். அத்துடன் இந்த மூன்று பேருக்கும் கடந்த சில வருடங்களாக சொல்லக்கூடிய அளவுக்கு எந்தப் படமும் அமையவில்லை.  இந்தக் கிழவர்களின் வெற்றியை யாருமே எதிர்பார்க்கவில்லை!

உண்மையில் அந்த மூன்று பேரும்கூட பெரிதாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவர்களது அசாதாரண வெற்றி புதிதாக சினிமாவில் நுழைபவர்களுக்கு மட்டுமல்ல, வேறு எந்தத் துறையில் ஈடுபடுபவர்களுக்கும் அதீதமான நம்பிக்கையை அளிக்கக்கூடியது.

சன்னி தியோல்

பாலிவுட் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்ட ஓர் ஆளுமை, சன்னி தியோல். பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகன். இவர் கடந்த 40 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேலான இந்திப்படங்களில் நடித்திருக்கிறார்; ரசிகர்களின் மத்தியில் கோபமான, ஆக்ரோஷமான ஒரு நாயகனாகப் பார்க்கப்படுகிறார் சன்னி.

ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே சன்னியின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன. உதாரணத்துக்கு ‘பார்டர்’, ‘அப்னே’, ‘கடர்: ஏக் பிரேம் கதா’ போன்றவை.

இந்தப் படங்கள் எல்லாம் வெளியாகி பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.

கடந்த சில வருடங்களாகவே சன்னியின் படங்கள் பெரிதாக வசூலை ஈட்டவில்லை. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ரசிகர்களும் அவரை மறந்து போய்விட்டனர். வயதும் 66ஐ தாண்டிவிட்டது. இனிமேல் ஒரு வெற்றிப்படத்தை சன்னியால் கொடுக்க முடியும் என்பது அவ்வளவு சுலபத்தில் நடக்கக்கூடிய விஷயம் இல்லை.

இந்நிலையில்தான் சன்னி நடிக்க ‘கடர் 2’ வெளியாகி, சக்கைப்போடு போட்டு வருகிறது. சன்னி நடித்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்ததும் ‘கடர் 2’தான்.
இத்தனைக்கும் ‘கடர் 2’வில் நடிப்பது குறித்து தயக்கத்துடனும், பயத்துடனும் இருந்தார் சன்னி. ஆம்; இயக்குநர் அணில் சர்மா ‘கடர் 2’வின் கதையை சன்னி தியோலிடம் சொன்ன போது, தயக்கத்துடனே கேட்டிருக்கிறார் சன்னி. 

காரணம், முதல் பாகம் வசூலைக் குவித்து, ரசிகர்களிடமும் நல்ல பெயரையும் பெற்றிருந்தது. ஒருவேளை இரண்டாம் பாகம் சரியாக வரவில்லை என்றால் முதல் பாகத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் மதிப்பு போய்விடும் என்ற அச்சத்திலேயே கதையைக் கேட்டிருக்கிறார் சன்னி.

பல தயக்கங்களுக்குப் பிறகே இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது இரண்டாம் பாகத்தை மட்டுமே பார்த்தவர்கள், முதல் பாகத்தைத் தேடிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு ஹிட் அடித்துவிட்டது, ‘கடர் 2’. சன்னியும் இப்போது புது உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களுக்கான கால்ஷீட்டை கொடுத்து வரு
கிறார்.

அணில் சர்மா

பாலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர், அணில் சர்மா. 18 வயதிலேயே பாலிவுட்டின் பிரபல இயக்குநரான பால்தேவ் ராஜ் சோப்ராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட்டார் அணில். 21 வயதிலேயே தனது முதல் படமான ‘ஸ்ரத்தாஞ்சலி’யை தயாரித்து, இயக்கிவிட்டார். ஓரளவுக்கு நல்ல வசூலை அள்ளியது, ‘ஸ்ரத்தாஞ்சலி’. இரண்டாவது படம் அவ்வளவாகப் போகவில்லை.

1987ம் வருடம் மூன்றாம் படமான ‘குக்குமட்’டை இயக்கினார். அப்போதே கோடிகளைக் குவித்தது இந்தப்படம். இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் ஓர் இயக்குநராக அணிலின் பெயர் பதியவில்லை. 2001ல் வெளியான ‘கடர்: ஏக் பிரேம் கதா’தான் அணில் சர்மாவுக்கு இயக்குநர் என்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தது. ரசிகர்களும் அணிலை அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால், ‘கடர்’ படத்துக்குப் பிறகான அணிலின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கடைசியாக 2018ல் அணில் இயக்கிய ‘ஜீனியஸ்’ வசூல் ரீதியாக படுதோல்வி
யடைந்தது. அணிலின் சினிமா வாழ்க்கை முடிந்தது; வயதும் அறுபதுக்கு மேலாகிவிட்டது; இனிமேல் அணிலால் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியாது என்று பலரும் அவரை விமர்சித்தனர். இப்படியான விமர்சனங்களுக்கு ‘கடர் 2’ மூலமாகப் பதில் கொடுத்து அசத்தியிருக்கிறார் அணில். அதுவும் 63 வயதில்!  

சக்திமான் தல்வார்

பாலிவிட்டில் பெரிதாக கவனம் ஈர்க்காத ஒரு திரைக்கதை ஆசிரியராக வலம் வருபவர் சக்திமான் தல்வார். இவரது வயதும் அறுபதைத் தாண்டிவிட்டது. ‘சிங் சாப் த கிரேட்’, ‘த ஹீரோ:லவ் ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை’, ‘வீர்’, ‘கடர்: ஏக் பிரேம் கதா’ உட்பட பத்து படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த சக்திமான்.

தில்லியில் பிறந்த சக்திமான், குழந்தைப்பருவத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிய பல கதைகளைக் கேட்டிருக்கிறார். அந்தக் கதைகள்தான் சினிமாவுக்குக் கதை எழுத அவருக்கு அச்சாணி. ‘கடர் 2’வின் கதையை சக்திமான்தான் எழுத வேண்டும் என்று அணில் சர்மா கேட்க, உற்சாகமாக எழுதிக் கொடுத்திருக்கிறார் இந்தக் கிழவர். ‘கடர் 2’வில் திரைக்கதையும், வசனமும்தான் பெரும் பலம். இதற்குக் காரணமானவர் சக்திமான்.  

த.சக்திவேல்