நினைவோ ஒரு பறவை
கறிச்சுவை
ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறபோது, அதன் பாட்டியும் புதிதாய் பிறக்கிறாள். - ஆஃப்ரோ அமெரிக்க பெண் கவிஞர் அலைஸ் வாக்கர்
எங்கிருந்தோ காற்றில் கசிந்து வரும் ஒரு பாடல், ஏதோ ஒரு சுத்தியலால் இதயத்தை உடைத்து விடுகிறது. காலையில் மகனை பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். நடைபாதை தேனீர்க் கடை எஃப்.எம்.மில் இசைஞானி இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். ேகாடை முடிந்து பெய்த முதல் மழையின் தெரு வெள்ளத்தில், ஒரு முதிர்ந்த பாதாம் மரத்து இலை மிதந்து கொண்டிருந்தது. இசைஞானி தன் குரலால் இதயத்தைக் கிழித்துக் கொண்டிருந்தார். இசை, பெரு வெள்ளமானது. நான், பாதாம் இலையானேன்.
‘ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே! தனியானா என்ன? துணையிங்கே நான் பாடும் பாட்டுண்டு! அமுதே என் கண்ணே! பசும் பொன்னே!
இனி துன்பம் ஏன் இங்கு?’ பல்லவி முடிந்து இசை ெதாடர்ந்து கொண்டிருக்க, என்னையறியாமல் என் கண்களில் நீர்த்துளி. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் அழவைப்பதுதான் பெரும் படைப்போ! சரணம் தொடர்ந்தது: ‘மண்ணுலகில் வந்தோர்க் கெல்லாம் இன்ப துன்பம் என்றும் உண்டு! தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றும் இல்லை! பூமி என்ற தாயும் உண்டு! வானம் என்ற தந்தை உண்டு! நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு! பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்!
தாயின்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும்! நீ காணும் எல்லாம் உன் சொந்தம்!’ பாடல் தொடரத் தொடர... என் மனப்பறவை பின்னோக்கிப் பறந்தது.
அம்மா இறந்த பிறகு, அப்பாவைப் பெற்ற அம்மாவான ஆயா, என்னை தன் இமைகளுக்குள் வைத்து பொத்திப் பாதுகாத்து வளர்த்தது. அந்த நாட்களில் எதைப் பார்த்தாலும், எதை நினைத்தாலும், நினைவுகள் கிளை பிரிந்து அம்மாவிடம் சென்று முடியும்.பள்ளியின் உணவு இடைவேளையில் நண்பர்களின் அம்மாக்கள் வந்து, அவர்களுக்கு ஊட்டி விடுவார்கள். நான் தனிமையில் அமர்ந்து டிபன் பாக்ஸைப் பிரிப்பேன்.
டிபன் பாக்ஸின் மேல் மூடி எனக்குத் தாயாகும். அதைத் தரையில் கவிழ்த்து, அதில் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்து, அம்மா எனக்கு ஊட்டி விடுவதாக பாவனை செய்துகொண்டே சாப்பிடுவேன். ‘எத்தனை பேருக்கு இப்படி ஒரு எவர்சில்வர் அம்மா கிடைக்கும்’ என்ற பெருமையும், கர்வமும் தலைக்கேறும்.
மாலை வீடு வந்ததும் ஆயாவின் சேலை முந்தானையைப் பிடித்துக் கொள்வேன். ஆயா அப்போது இரண்டு மாடுகள் வளர்த்து வந்தது. மாடுகளை தூரத்து வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போவோம். சிறுகால் நண்டுகள், வளையிலிருந்து வெளியேறி, காலடிச் சத்தம் கேட்டு மீண்டும் வளைக்குள் பதுங்கும் வரப்புகளிலும், வாய்க்கால்களிலும் ஆயாவும் நானும் மாட்டுக்கு புல் தேடித் திரிவோம். வீட்டிற்கு வந்ததும், பால் கறந்து முடித்து கன்றுக்குட்டிகள் பசுவின் மடியில் முட்டி மோதும்.
மீண்டும் எனக்கு அம்மா ஞாபகம் வந்துவிடும். ஆயா என்னும் பெருந்தெய்வத்தின் கருணை, அந்த நாட்களில் என் பால்யத்தைப் பாதுகாத்தது.அந்தி சாய்ந்ததும் ஆயாவின் மடியில் படுத்துக் கொள்வேன். என் தலை கோதியோ, காதுகளில் அழுக்கெடுத்தோ, கால்களை அமுக்கி விட்டோ, ஆயா என்னை வெவ்வேறு கதைகளின் உலகத்திற்கு கூட்டிச் செல்லும்.
கொஞ்சம் சமையலறை புகையின் ஈர விறகுகளின் வாசனையும்... கொஞ்சம் தோட்டத்து மாடுகளின் சாண வாசனையும்... கொஞ்சம் விபூதி வாசனையும் கலந்த ஆயாவின் சேலை வாசனை, என்னை அம்மாவின் வாசனைக்குக் கூட்டிச் செல்லும்.
ஆயா வீர சைவம். அதனால் எப்போதும் வீட்டில் சைவம்தான். ஆதலால் நான் அசைவப் பிரியனானேன். நினைவு தெரிந்து என் பால்யங்களில் நான் அசைவம் சாப்பிட்டது தீபாவளி நாட்களில் மட்டும்தான். எங்கள் கிராமத்தில் எல்லோரும் பட்டுத்தறி நெசவாளர்கள். ஆகையால் கேப்பைக்களியும், பழைய சோறும் மட்டுமே பிரதான உணவு. தீபாவளிக்கு மட்டும் எல்லோர் வீட்டிலும் இட்லியும் கறிக்குழம்பும் அனல் பறக்கும். அப்போது கூட, எங்கள் வீட்டில் இட்லியும், சைவ குருமாவும் மட்டுமே.
ஒவ்வொரு தீபாவளிக்கும் பக்கத்து வீட்டு மாமாவும் மாமியும் எங்கள் வீட்டிற்கு வந்து ஆயாவிடம், ‘‘முத்துவை எங்க வீட்டுக்கு சாப்பிட அனுப்பி வைம்மா. இன்னிக்கு ஒரு நாளாவது கறி சாப்பிடட்டுமே’’ என்று அனுமதி கேட்பார்கள். ஆயாவும் சந்தோஷமாய் சம்மதிக்கும்.அப்படியொரு தீபாவளி நாளில், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள், தறி நெய்யும் தொழிலாளர்கள் என இருபதுக்கும் மேற்பட்டவர்களுடன் கூடத்தில் நான் அமர்ந்திருந்தேன். எல்லாருக்கும் வாழை இலை போடப்பட்டு, இட்லிகள் வைக்கப்பட்டன. மாமி ஒவ்வொருவருக்கும் கறிக்குழம்பு ஊற்றிக் கொண்டு வந்தார்.
உருளைக்கிழங்கும், முருங்கைக்காயும், ஆட்டுக்கறியும் சேர்ந்த கலவையான அந்தக் குழம்பு கமகமத்துக் கொண்டிருந்தது. மாமி என் இலைக்கு குழம்பை ஊற்றிவிட்டு, அடுத்த இலைக்கு நகர்ந்தார். ஒன்றிரண்டு கறித்துண்டுகள் தவிர, முருங்கைக்காயும், உருளைக்கிழங்குமே அதில் நிறைந்திருந்தன. எனக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
தூரத்தில் இருந்து இதை கவனித்த மாமா, ‘‘ஏண்டி, முத்து இலைல கறி கம்மியா இருக்கு பாரு. ஒரு மூணு கரண்டி கறிய மட்டும் தனியா அள்ளி வை. பாவம், தாயில்லா புள்ள... எங்க போயி சாப்பிடும்!’’ என்று சொன்னதும் இட்லிகளை கறித்துண்டுகள் மூழ்கடித்தன.
சாப்பிட்டு வீட்டிற்கு வந்ததும், ஆயாவிடம் இந்தச் சம்பவத்தை விவரித்து பெருமையாகச் சொன்னேன். ‘‘அம்மா உயிரோட இருந்திருந்தா எனக்கு இவ்வளவு கறி கெடைச்சிருக்குமா? அம்மா இல்லைன்னு சொல்லி அள்ளி அள்ளிப் போட்டாங்க’’ என்றவுடன் ஆயா என்னைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தது. பின்னர் மூக்கை உறிஞ்சிக் கொண்டே, ‘‘இனிமே அவங்க வீட்ல இருந்து சாப்பிடக் கூப்புட்டா போக மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு’’ என்றது. நான் மனதுக்குள் ‘அ’ என்ற உயிரெழுத்தை உச்சரித்து ‘அ’சத்தியம் செய்தேன்.
அடுத்த வாரத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆயாவும் நானும் காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டுக்குச் சென்று, அந்த வாரத்திற்குத் தேவையான காய்கறிகளையும், கொசுறாகக் கிடைத்த கருவேப்பிலை, கொத்தமல்லியையும் கூடைப் பையில் சுமந்து கொண்டு தேரடி வீதி பேருந்து நிறுத்தத்தை அடைகையில், ஆயா நிறுத்தத்தைத் தாண்டி நடந்து கொண்டே இருந்தது. ‘‘ஆயா, பஸ் ஸ்டாப்பு தாண்டியாச்சு’’ என்றேன். ‘‘பேசாம வாடா’’ என்றது ஆயா. என்னை அழைத்துக் கொண்டு அது சென்று நின்ற இடம், ‘மதுரை முனியாண்டி விலாஸ் (ஒரிஜினல்)’.
‘‘ஆயா, இது மிலிட்டரி ஓட்டல்’’ என்றேன். ‘‘தெரியும்டா! உள்ள போயி சப்ளையரைக் கூட்டிட்டு வா’’ என்று ஆயா படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டது. சப்ளையர் வந்ததும், ‘‘என் பேரன் என்ன கேக்கறானோ குடு. நான் உள்ள வர மாட்டேன். பில்ல வெளிய எட்த்தாந்து குடு’’ என்றது.
பெரிய நீள்தட்டில் வட்ட வட்ட குறுந்தட்டுகள். அந்த தட்டில்தான் எத்தனை எத்தனை அசைவங்கள்! நண்டு, காடை, மீன், மட்டன், சிக்கன், எறா, சுறாப்புட்டு, ஈரல், ரத்தப்பொரியல், குடல் என எல்லாவற்றையும் விலை கேட்டுவிட்டு ஒன்றிரண்டை ஆர்டர் செய்தேன். பிரியாணி மணமும், சோம்பு மணமுமாக நான் வெளியில் வந்தபோது, ஆயா வாசல் படிக்கட்டில் அமர்ந்து பில்லிற்கான பணத்தை அழுதுகொண்டே எண்ணிக் கொண்டிருந்தது.
இன்று என் வீட்டில் அசைவம் இல்லாத நாளே இல்லை. அமாவாசை, கிருத்திகை என்று என் மனைவி ஞாபகப்படுத்தினாலும் கூட நானும் என் பிள்ளையும் ‘‘கட்டை விரலையாவது குடு, கடிச்சிக்கிறோம்’’ என்போம். உலகம் முழுக்க பயணித்து, உயர்தர அசைவ உணவுகளை ரசித்து உண்டு இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கறியின் முதல் துண்டை எடுத்துக் கடிக்கையில் லேசாக உப்புக் கரிக்கும். என் மனதிற்கு மட்டுமே தெரியும்... அது ஆயா அன்று அழுத கண்ணீரின் உப்பு.
என் தலை கோதியோ, காதுகளில் அழுக்கெடுத்தோ, கால்களை அமுக்கி விட்டோ, ஆயா என்னை வெவ்வேறு கதைகளின் உலகத்திற்கு கூட்டிச் செல்லும்.
பிரியாணி மணமும், சோம்பு மணமுமாக நான் வெளியில் வந்தபோது, ஆயா வாசல் படிக்கட்டில் அமர்ந்து பில்லிற்கான பணத்தை அழுதுகொண்டே எண்ணிக் கொண்டிருந்தது.
(பறக்கலாம்...)
நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்
|