3 லட்சம் புகைப்படங்கள் வச்சிருக்கேன்!



மயிலாப்பூரில் இருக்கிறது ஞானத்தின்  டபுள் பெட்ரூம் ஆபீஸ்.  ஹாலிலிருந்து சமையற்கட்டு வரை எங்கும்  சிதறிக் கிடக்கின்றன பழமையான புகைப்படங்கள். சினிமா, அரசியல், இலக்கியவாதிகள் என பல்துறையினரின்  அரிதான தருணங்களை சிறைப்பிடித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் அவை.

‘‘1940ம் ஆண்டிலிருந்து இப்போ வரை உள்ள  அபூர்வமான பல புகைப்படங்களை சேகரிச்சிட்டு வர்றேன். இதுவரை 3 லட்சம்  புகைப்படங்களுக்கு மேல் சேர்த்து வச்சிருக்கேன்’’ என்கிறார் ஞானம். பத்திரிகைகளில் வெளிவரும் ஃப்ளாஷ்பேக் தொடர்களிலிருந்து, சினிமா வரலாற்றுப் புத்தகங்கள், பிரபலங்களைப் பற்றிய தொகுப்புகள் என அத்தனைக்கும் புகைப்படங்களைக் கொடுத்து உதவுவது இவர்தான்.

‘‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்னு பெரும் ஹீரோக்கள் நடிச்ச படங்களோட அத்தனை ஒரிஜினல் ஸ்டில்களும் எங்கிட்ட இருக்கு. இப்போ அமெரிக்காவில் மெக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் நம் தமிழ் சினிமாவைப் பத்தி ஒரு வகுப்பு நடந்துட்டு வருது. அதுக்கு நான்தான் ஸ்டில்ஸ் அனுப்பிக்கிட்டிருக்கேன்!’’ - நம்மிடம் பேசிக்கொண்டே, ஒரு புகைப்படத்தை அட்டாச் செய்து, யாருக்கோ மெயில் அனுப்புகிறார் ஞானம்.

‘‘என்னோட முழுப்பெயர் ஞானப்பிரகாசம். பூர்வீகமே சென்னைதான். அப்பா ஒரு நகைத் தொழிலாளி. பிளஸ் 2 வரை படிச்சேன். போட்டோகிராபியில ரொம்ப ஆர்வம். சிவாஜியோட பர்சனல் போட்டோகிராபர் திருச்சி அருணாசலம்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்தேன். அதுக்கப்புறம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட ஸ்டில் போட்டோகிராபர் வெங்கடாசாரியோட உதவியாளர் அமிர்தம்கிட்ட வேலை செய்தேன்.

என் சின்ஸியாரிட்டியைப் பார்த்து அமிர்தம், அவர் வேலை செய்த 400 படங்களின் ஸ்டில்களை எனக்குக் கொடுத்து உதவினார். அதே மாதிரி எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களின் ஸ்டில் போட்டோகிராபர் செம்மை ஆனந்த், முந்நூறு பட ஸ்டில்களை எனக்குக் கொடுத்தார். கையில இவ்வளவு பட ஸ்டில்கள் சேர்ந்தபிறகு இன்னும் நிறைய ஸ்டில்கள் சேகரிக்கணும்னு ஆசை வந்துச்சு.

இந்த ஸ்டில்களை எல்லாம் பத்திரிகைகளுக்குக் கொடுத்து, இதை முழுநேரத் தொழிலா எடுத்து நடத்த முடியும்னு எனக்குள்ள நம்பிக்கையை விதைச்சவர் ‘நக்கீரன்’ கோபால் சார்தான். ‘ரஜினி ரசிகன்’னு அவங்க கொண்டு வந்த தனிப் புத்தகத்துக்குதான் முதன்முதலா ஸ்டில்ஸ் கொடுத்து, சன்மானம் வாங்கினேன்.

அதுக்கப்புறம், சின்ன பத்திரிகை, பெரிய பத்திரிகைனு எந்தப் பாகுபாடும் பார்க்காம யார் ஸ்டில்கள் கேட்டாலும் அனுப்பி வைப்பேன். ‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரை எழுதின ஐ.சண்முகநாதன் சாரால என் வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனை கிடைச்சது. சினிமா தொடர்புகள் அதிகரிச்சது. இப்போ நான் இருக்கற இந்த அலுவலகத்தை சொந்தமா வாங்கக்கூடிய அளவுக்கு எனக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர் சண்முகநாதன் சார்தான். 

 தமிழ், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழி சினிமா ஸ்டில்களும் வச்சிருக்கேன். என்.டி.ஆர்., ராஜ்குமார் ஸ்டில்களெல்லாம்கூட இருக்கு. சினிமா மட்டுமில்ல... அரசியல் பிரபலங்கள், இலக்கியவாதிகள் புகைப்படங்களையும் பாதுகாத்து வச்சிருக்கேன். ‘படையப்பா’ படத்தோட ப்ெராமோஷனுக்காக ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல ரஜினி வர்ற மாதிரியான ஸ்டில்ஸ் வேணும்னு கேட்டாங்க.

அந்தப் படத்தோட ஸ்டில் போட்டோகிராபரா பணிபுரிந்த இ.வி.கே.நாயர் பெங்களூருவுல இருக்கார்னு கேள்விப்பட்டு, அங்கே போயிட்டேன். அவர்கிட்டேயே ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல ரஜினியோட ஸ்டில் மொத்தமே பதினைஞ்சுக்குள்ளதான் இருந்தது.

அதுவும் இப்ப என் கலெக்‌ஷன்ல சேர்ந்திடுச்சு. ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ படத்துக்கு முன்னாடி ஜெய்சங்கரோட கௌபாய் ஸ்டில்கள் கேட்டு வந்திருந்தார், இயக்குநர் சிம்புதேவன். ‘இதையெல்லாம் கம்ப்யூட்டர்ல பாதுகாத்து வைங்க’னு சொல்லி, அவர்தான் கம்ப்யூட்டரோட முக்கியத்துவத்தைப் புரியவச்சார்.

பொம்மை, பேசும்படம், குண்டூசினு அந்தக் கால சினிமா பத்திரிகைகளையும் சேர்த்து வச்சிருக்கேன். பழைய போட்டோ கார்டுகள் ஆயிரத்துக்கும் மேல வச்சிருக்கேன். அந்தக் கால பிளாக் அண்ட் வொயிட் சினிமா ஆல்பங்கள் பிரமாண்டமா இருக்கும்.

இப்ப எங்கேயும் பார்க்கவே முடியாத அந்த மாதிரி ஆல்பங்கள் ஐம்பதுக்கும் மேல என்கிட்ட இருக்கு. தனஞ்செயன் எழுதி தேசிய விருது வாங்கின, ‘பிரைடு ஆஃப் தமிழ் சினிமா’ புத்தகத்துக்கு  ஸ்டில்கள் கொடுத்தது பெருமையான விஷயம்.

இப்ப தமிழ் சினிமாவின் மொத்த புகைப்படங்களையும் ஆவணப்படுத்துற முயற்சியில இன்னும் கடுமையா இறங்கியிருக்கேன். மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த படங்களின் புகைப்படங்கள், ஜூபிடர் பிக்சர்ஸ் புகைப்படங்கள், நாடகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்... இதையெல்லாம் அடுத்தடுத்து சேகரிக்கும் வேலையில இருக்கேன். வெறும் ஸ்டில்களோடு நின்னுடாம, டேட்டாபேஸ்களையும் சேகரிக்க விரும்புறேன். இந்த ஸ்டில்களை பராமரிக்கறது சிரமம்தான். அடிக்கடி எடுத்து தூசு துடைச்சு வச்சாதான் ஒண்ணு மேல ஒண்ணு ஒட்டாம இருக்கும்.

 கிடைக்கிற ஓய்வு நேரத்திலெல்லாம் ஸ்டில்களை காலகட்ட வாரியா பிரிச்சு ஃபைல் பண்ணி வைப்பேன். அப்பதான் தேடும்போது எடுக்க ஈஸி. இப்ப மூணு லட்சம் படங்களையும் டிஜிட்டலாக்கி கம்ப்யூட்டர்ல ஏத்துற முயற்சியில இறங்கியிருக்கேன்!’’ என நெகிழும் ஞானத்தின் புகைப்படக் குவியலில் பளிச்சிடுகிறது ஃப்ரேம் போட்ட கடிதம் ஒன்று. எடுத்துப் பார்த்தால் அது வாலி எழுதினது.

‘வானம் வரை வளர வேண்டும் நண்பர் ஞானம் அவர்களின் நிழற்பட ஞானமும் அவரது  ஆயுளும்!’அந்தக் கால பிளாக் அண்ட் வொயிட் சினிமா  ஆல்பங்கள் பிரமாண்டமா இருக்கும். இப்ப எங்கேயும் பார்க்கவே முடியாத அந்த  மாதிரி ஆல்பங்கள் ஐம்பதுக்கும் மேல என்கிட்ட இருக்கு.

- மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்