குட்டிச்சுவர் சிந்தனைகள்



நடுவர் ஞானசந்தேகம்: வணக்கம்யா! எல்லோரும் நல்லா இருக்கீங்களா? இந்த வருஷ தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் பார்க்க எல்லோரும் ரெடியா? என்ன... தெறிக்க விடலாமா? இந்த வருஷ பட்டிமன்றத் தலைப்பு, ‘அழகிலும் திறமையிலும் நம் மனதில் எஞ்சி நிற்பது 90களுக்கு முன் வந்த நடிகைகளா? இல்லை, அவர்களையும் மிஞ்சி நிற்பது 90களுக்குப் பின் வந்த நடிகைகளா?’

‘90களுக்குப் பின் வந்த நடிகைகளே’ எனப் பேச வர்றாரு முனைவர் நீலத்திமிங்கலம்.நீலத்திமிங்கலம்: நடுவர் அவர்களே! இன்று பசும்பாலுக்கே பவுடர் அடிச்சதைப் போல இருக்கும் எங்கள் டால்கம் தங்கம் தமன்னா போலவோ, தாஜ்மகாலுக்கே சுண்ணாம்பு அடிச்சதைப் போல ஜொலிக்கும் எங்கள் டிஸ்டம்பர் தங்கம் ஹன்சிகா அளவுக்கோ சிவப்பான, சிறப்பான, சூப்பரான ஒரு ஹீரோயினை எதிர் அணியினரால் காட்ட முடியுமா? 90களுக்கு முன் வந்த நடிகைகள் கடை கடையாய் ஏறினாலும், அவர்களால் எங்கள் ரம்பாவைப் போல ஒரு தொடை கொண்டு வர முடியுமா?

எதிர் அணியினருக்கு சவால் விடுகிறேன்... உங்களுக்குத் திராணி இருந்தால் எங்கள் சிம்ரனைப் போல இடுப்பைக் கொண்டிருக்கும் ஒரு நடிகையைக் காட்டுங்கள். பழைய நடிகைகளுக்கு இருந்ததெல்லாம் இடுப்பா?  அதெல்லாம் பார்த்தாலே கடுப்பை வரவைக்கும் பத்த வைக்காத தந்தூரி அடுப்பு, நடுவர் அவர்களே!

 அழகை விடுங்கள், திறமையைப் பாருங்கள். எங்கள் யுவராணி போல கபடி ஆடவோ, எங்கள் ‘உள்ளத்தை அள்ளித்தா’ ரம்பா போல டென்னிஸ் ஆடவோ, இல்லை ‘முறைமாமன்’ குஷ்பூ போல கிரிக்கெட் ஆடவோ, ஏன் ‘ஜென்டில்மேன்’ படத்திலே நடிகை சுபா போல ‘கப்ளிங்க்ஸ்’, ‘ஸ்பூன்லிங்க்ஸ்’, ‘ஜலபுலஜங்’ என விதவிதமான விளையாட்டுகளைக் கண்டுபிடித்து விளையாடவோ 90களுக்கு முன்னால் வந்த நடிகைகளுக்குத் தெரியுமா, நடுவர் அவர்களே?

‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு பூந்திருக்கு’ எனக் கம்ப்ளைன்ட் பண்ணத் தெரிந்த அதே நேரத்தில், ‘முத்தம் தர ஏத்த இடம் எந்த இடம்’ என்று கேள்வி அறிவையும் வளர்க்கத் தெரிந்த நடிகைகள் 90களுக்குப் பின்தான் வந்தார்கள், நடுவர்கள் அவர்களே! அதனால் உங்கள் தீர்ப்பை, இப்படிப்பட்ட பெருமை மிக்க நடிகைகளுக்கே வழங்குமாறு வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி!

நடுவர் ஞானசந்தேகம்: பிச்சுட்டய்யா நீலத்திமிங்கலம்! இது ஒரு அட்டகாச பேச்சுய்யா, இது ஒரு அற்புத பேச்சுய்யா, இது அசராத பேச்சுய்யா, இது அழகான பேச்சுய்யா, இது அறிவான பேச்சுய்யா, இது அசரடிக்கும் பேச்சுய்யா. இப்ப கவுந்து கிடக்கும் தன் அணியை கொஞ்சம் நிமிர்த்தி வைக்க வராரு, புகழ்பெற்ற வக்கீல் பிரஸ்டீஜ் பத்மநாபனின் தம்பி, டாக்டர் பைல்ஸ் பத்மநாபன்.

பைல்ஸ் பத்மநாபன்: நாலு பேரு நடமாடும் நல்லதொரு தெருவில் நடுநாயகமாக வீற்றிருக்கும் டாஸ்மாக் கடை போல இங்க அமர்ந்திருக்கும் நடுவர் அவர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தைச் சொல்லிக்கொண்டு எனது பேச்சை ஆரம்பிக்கிறேன்.

நடுவர் அவர்களே, ஒரு நடிகைக்கு இடுப்பின் சுற்றளவு முக்கியமல்ல, தான் நடிக்கும் அந்த கதாபாத்திரத்தின் மேல இருக்கும் பற்றளவுதான் முக்கியம். உடலின் வளைவுகளை விட, உடல்மொழிகளின் நெளிவுசுளிவுகள்தான் முக்கியம். எங்க கால நடிகைகள் யாராவது தொப்புளில் ஆம்லெட் போடுவது, அம்பாசிடர் கார் விடுவது, பம்பரம் விடுவது, பால் காய்ச்சுவது என்று நடித்திருக்கிறார்களா?

நடுவர் அவர்களே! கொடுத்த காசுக்குக் கூட நடிக்கத் தெரியாதவர்கள் 90களுக்கு பின்னால் வந்த நடிகைகள்; ஆனா கொடுத்த காசுக்கும் மேல நடிக்கக் கூடியவர்கள் 90களுக்கு முன் அறிமுகமான எங்கள் நடிகைகள்.

 ஒன்றை கவனிக்கணும் நடுவர் அவர்களே, 50 வயதாகியும் 30 வயதைப் போல இருக்கும் எங்கள் தேவி போல ஒரு நடிகையை இவர்களால் காட்ட முடியுமா? 90களுக்குப் பின் வந்த நடிகைகள் எல்லாம், 30 வயதிலேயே 50 வயது மாமியாராக சின்னத்திரையில் சின்னாபின்னமாகிப் போய்விட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. அதனால் அழகிலும் திறமையிலும் சிறந்து விளங்குபவர்கள் 90களுக்கு முன் அறிமுகமான நடிகைகள்தான் எனக் கூறி விடைபெறுகிறேன்.

நடுவர் ஞானசந்தேகம்: பிச்சுட்டய்யா, பின்னிட்டய்யா... தேவிகா தற்கொலைப் படையில உங்க அப்பாவும், அம்பிகா அட்டகாசப் படையில நீயும் போர்ப்படைத் தளபதிகளா இருந்ததை நிரூபிச்சட்டய்யா. அடுத்தது வாங்க, வந்து பேசுங்க கவிஞர் கசாயம்!

கவிஞர் கசாயம்: நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் நடுவர் அவர்களே! இன்று சின்னத்திரையில் மாமியார்களாக வருவது 90களுக்குப் பின் அறிமுகமான நடிகைகள்தான். ஆனா இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம், 90களுக்கு முன் அறிமுகமான முக்காவாசி ஹீரோயின்கள், அறிமுகமாகும்போதே மாமியார் மாதிரிதான் இருந்தார்கள். இன்று காஞ்சனா, டார்லிங் போன்ற பேய்ப் படங்களில் நடிக்க நடிகைகளை எந்தளவுக்கு மேக்கப் போட்டு அவர்கள் அழகை மறைக்க வேண்டும் தெரியுமா?

ஆனால், 90களுக்கு முன் இருந்த நடிகைகளுக்கு வெறும் வெள்ளை சேலை கட்டிவிட்டாலே போதும், பேய் மாதிரிதான் இருப்பார்கள். பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா ஓடி வந்ததை ஊரே தேடி வந்து பார்த்தது நடுவர் அவர்களே. ஆனால் இவர்கள் காட்டும் நடிகைகள் நடந்தால் கூட மொத்த தியேட்டரும் தெறித்து ஓடியது. நடுவர் அவர்களே, ப்ரியா, தேவி, வித்யா என நாலஞ்சு களை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அரைத்த மாவையே அரைத்து, கரைத்த மாவையே கரைத்து, கோதுமை தோசை ஊற்றியவர்கள் எதிரணியினர்.

ஆனால், மாநிறத்துக்கு லட்சுமி மேனன், மாம்பழ நிறத்துக்கு பாவனா மேனன், மங்காத நிறத்துக்கு நித்யா மேனன், இது மூன்றும் கலந்த நிறத்துக்கு சிந்து மேனன் என வகை வகையாக ஹீரோயின்களை இறக்குமதி செய்த காலகட்டத்தினர் நாங்கள். நடுவர் அவர்களே, இவர்கள் இங்கிருந்த ஹேமமாலினி, தேவியைக் கூட வடநாட்டுக்குத் தாரை வார்த்த இனத் துரோகிகள். ஆனால், மாட்டுக்கு ஒன்று மடுவுக்கு ஒன்றென, வாரம் ஒரு பம்பாய் ஹீரோயினை ஃப்ளைட்டில் வர வைத்த எங்கள் காலகட்டமே கோலிவுட்டின் குப்தர் காலம். அதுவே பொற்கால ஆட்சி எனக் கூறி விடைபெறுகிறேன்.

நடுவர் ஞானசந்தேகம்: அருமையா சொன்னய்யா, ‘ரசிகன்’ல சங்கவிக்கு போட்டுவிட்ட சோப்ப எடுத்து விளக்கி வச்ச மாதிரி ரொம்ப பளிச்சுனு சொன்னய்யா. இப்ப கடைசியா பேச வராரு நம்ம பாலிடாயில் பாண்டி.

பாலிடாயில் பாண்டி: இன்று எல்லா படத்திலும் ஹீரோயின்கள் பாதி நேரம் தண்ணீரில் குளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அன்று எங்கள் ஜெயப்ரதா ‘மௌனமான நேரம்’ பாடலில் குளித்தபோது ஒட்டுமொத்த நாடே எங்கள் ஜொள்ளினால் ஈரமானது நடுவர் அவர்களே! எங்கள் காலகட்ட நடிகைகள் எத்தனை பேர் தேசிய விருது வாங்கியிருக்காங்க தெரியுமா?

இந்தக் கால நடிகைகள் தமிழ்ல சரியா பேசினாலே விருது தரலாம். எங்கள் கால நடிகைகள் அட்டகாசமாக அழுது நடிப்பார்கள், ஆனால் இன்றைய நடிகைகள் நடிப்பதைப் பார்த்தால் நமக்கு அழுகை வரும். கடைசியாக ஒன்று சொல்கிறேன், வெங்காயத்தைக் கடலை மாவில் முக்கி பஜ்ஜி சுட்டாலும் வெங்காயம் அதோடு ஒட்டாது. அதுபோல ஆயிரம் நமீதாக்கள், நயன்தாராக்கள் வந்தாலும் எங்கள் சில்க் ஸ்மிதாவுக்கு எட்டாது.

நடுவர் ஞானசந்தேகம்: அற்புதம்யா. நடிகைகள் பற்றிய என் பூனைக் கண்ண திறந்து ஞானக்கண்ணா மாத்திட்டீங்க. சாப்பாட்டுல என்னய்யா வித்தியாசம், அது சோறா இருந்தா என்ன? சப்பாத்தியா இருந்தா என்ன? தேய்ச்சுக் குளிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, தலைக்கு ஷாம்பூ தேய்ச்சுக் குளிங்க, தேகத்துக்கு சோப்பு தேய்ச்சுக் குளிங்க. அதனால என் தீர்ப்பு என்னன்னா, 90க்கு முன்னால வந்தாலும் 90க்குப் பின்னால வந்தாலும், அத்தனை பெண்களும் நமது கண்கள். பட்டிமன்றம் முடிஞ்சு போச்சு... எந்திரிச்சு போங்க!   

ஆல்தோட்ட பூபதி