கிரகங்கள் தரும் யோகங்கள் 12



மேஷ லக்னத்துக்கு கூட்டு  கிரகங்கள்  தரும் யோகங்கள்!

இந்தத் தொடரில் மேஷ லக்னத்தைப் பற்றியும் அதில் ஒற்றை கிரகமான செவ்வாய் தனித்து நின்ற பலனையும் இரண்டிரண்டு கிரகங்களாக பன்னிரெண்டு ராசிகளுக்குள்ளும் நின்ற பலன்களையும் பார்த்துக்கொண்டே வருகிறோம்.

இப்போது இதில் மூன்று முதல் ஐந்து கிரகங்கள் வரை சேர்ந்திருந்தால் என்ன மாற்றம் நிகழும் என்பதையும் பார்ப்போம். ஏனெனில், இரட்டைக் கிரகங்கள் இதுதான் செய்யும் என்று சொல்லலாம். ஆனால், கூட்டாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும். மகான்களாக்குவதும், மட்டம் தட்டி மண்ணில் அமுக்குவதும் என எல்லாமுமே கூட்டுக் கிரகங்களின் செயல்கள்தான்.

நம் வாழ்வில் ஒருமித்த உணர்வு, சிந்தனை, நோக்கம் இதெல்லாம் உடையவர்கள் ஒன்றிணையும்போது மாபெரும் நல்லதொரு மாற்றம் நிகழ்கிறது. சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்போது அசைக்கமுடியாத தொழில் விருத்தியை தலைமுறை தலைமுறையாக நிகழ்த்த முடிகிறது. ஒரே குறிக்கோளோடு போராடும் விளையாட்டு வீரர்கள் வெற்றிக் கனியைப் பறிப்பது எளிதாகிறது. இதேபோலத்தான் கிரகங்களும் தமக்குள் ஒரே இடத்தில் அமையும்போது செயல்படும். மேஷ லக்னத்திற்கு அதிபதியான செவ்வாயே ஒருவருக்கு அனைத்தையும் அளித்துவிட முடியாது; கூட்டாக கிரகங்கள் நிச்சயம் வேண்டும்.

மேஷ லக்னத்தில் பிறந்து - உலக அளவில் சாதித்த சில தலைவர்களின் பெயர்களைக் காண்போமா? இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், அமெரிக்க ஜனாதிபதி உலிஸஸ் சிம்ஸன் கிராண்ட்,

நெதர்லாந்து அரசியான ஜூலியானா, ஸ்பெயின் அரசரான ஜுவான் கார்லோஸ், பிரிட்டிஷ் பிரதமரான மெக்டொனால்ட், இந்தியாவின் தலைசிறந்த இயக்குனரான சத்யஜித் ரே, பிரான்ஸின் எட்டாம் சார்லஸ், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹென்றி வாலஸ், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டன், இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான ஐ.பி.எஸ். அதிகாரியான கே.பி.எஸ்.கில் என்று எண்ணற்ற பிரபலங்கள் மேஷ லக்னத்தில் பிறந்துள்ளனர்.

அதிலும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், இவர்களில் பலர் பெரும்பாலும் நாடாளும் யோகத்தைப் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில், மேஷ லக்னத்தின் அதிபதியே செவ்வாய் எனும் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உரிய கிரகம்தான். அது சரி, நான்கைந்து கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்திருந்தால் அது கிரக யுத்தம் என்பார்களே! இது நன்மை செய்யுமா? தீங்கு விளைவிக்குமா?

ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு வீட்டில் அமர்ந்திருந்தாலே அந்த சேர்க்கையினால் உண்டாகும் ரசாயனம் ஒரு மனிதனின் உடற்கூறுகளின் இயக்கங்களிலும், மனதிலும் பல்வேறு விதமான மாற்றங்களை உருவாக்கும். மேஷ லக்னத்திற்கு அதிபதியான செவ்வாயுடன் சுகாதிபதி சந்திரனும் பாக்யாதிபதி குருவும் பூர்வ புண்ணியாதிபதி சூரியனும் தனாதிபதி சுக்கிரனும் சேர்ந்திருந்தால் மிகப் பெரிய ராஜயோகம் உண்டாகும். கூட்டுக் கிரக சேர்க்கையில் ஒரு மனிதனை சாதனையாளனாகவும் ஆக்கும். சந்தி சிரிக்க வைத்து சிறையிலடைக்கவும் செய்யும்.

கூட்டுக் கிரகங்களில் எந்த கிரகம் அதிக வலிமை அடைந்திருக்கிறதோ, அந்த கிரகத்தின் காரகத்துவங்கள், ஆதிபத்தியங்கள் ஒரு மனிதனுக்கு அதிகமாகக் கிடைக்கும்.
அதேசமயம், கிரகங்கள் அதனதன் நட்பு வீட்டில் அமர்ந்தால் நேர்மறை தாக்கங்களையும், ஆட்சி வீட்டில் அமர்ந்தால் எளிதாக நன்மை செய்யும் ஆற்றலையும், உச்ச வீட்டில் அமர்ந்தால் விதிமுறைகளையும் தாண்டி வேறுசில கூடுதல் நன்மைகளையும் தருகின்றன. ஆனால், இதே யோக கிரகங்கள் பகை வீட்டில் அமர்ந்தால் மற்றவர்களால் பழிக்கப்படும் நிலையை அடைவார்கள்.

பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலும் திடீர் பண இழப்பு, காவல்துறை, நீதிமன்ற அலைக்கழிப்பு, குடும்ப வாழ்வு பாதிக்கப்படுதல் எல்லாம் இருக்கும்.

மறைவு ஸ்தானங்களான மூன்று, ஆறு, பன்னிரெண்டு போன்ற இடங்களில் யோக கிரகங்கள் அமர்ந்து மங்கியிருந்தால், கூட இருந்தே குழி பறிப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு ஆளாவதுடன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பிரகாசிக்க முடியாமல் மந்த கதியிலேயே வாழ்க்கை செல்லும். நல்லவர்கள் நான்கு பேர் சேர்ந்தால் நாடும் வீடும் தானாய் முன்னேறும். அதேபோல நல்ல ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் ஒன்று சேரும்போது ஜாதகரின் அடிப்படை வசதி வாய்ப்புகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும்.

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று நேருவாலும் உலகத் தலைவர்களாலும் அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் மேஷ லக்னம் விருச்சிக ராசியில் பிறந்தவர். அவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் குரு, சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய நான்கு கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன.

லக்னாதிபதி செவ்வாயும் உச்சம் பெற்றும் கேந்திர பலம் பெற்றும் அமர்ந்ததால்தான் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. இவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணியாதிபதி சூரியனுடன் பாக்யாதிபதி குருவும் சேர்ந்திருப்பது பஞ்சமகா யோகங்களில் தலைசிறந்த யோகமாகும்.

பூர்வ புண்ணியாதிபதி சூரியனானது நீச பங்க ராஜயோகம் அடைந்ததுடன், நவாம்சத்திலும் வலுவடைந்து காணப்படுகிறது. மேலும், தசாம்சம் போன்றவற்றிலும் பலம் பெற்றதால்தான் தைரியமாக சில முக்கிய முடிவு களை எடுத்தார். மேஷ லக்னத்திற்கு தைரிய ஸ்தானாதிபதியாக புதனும், வாக்கு ஸ்தானாதிபதியாக சுக்கிரனும் சேர்ந்திருப்பதாலேயே சுதந்திரம் பெற்றும் பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை இணைத்தார்.

 பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் முயன்றும் முடியாமல்போன சிற்றரசு இணைப்புகள் இவரால் மட்டுமே முடிந்தன. லக்னாதிபதி செவ்வாய் பாதகாதிபதி சனியுடன் சேர்ந்திருந்தாலும், சனியும் செவ்வாயும் கூடுதல் பாகை வித்தியாசத்தில் அமர்ந்திருப்பதாலேயே இவரால் பல சாதனைகள் புரிய முடிந்தது.

இருந்தாலும் பாதகாதிபதியுடன் செவ்வாய் சேர்ந்ததனால்தான் சிறைவாசமும் அனுபவிக்க நேர்ந்தது. இந்த ஜாதகத்தை ஒரு முறைக்கு இரண்டு முறை உற்றுப் பார்த்தால்தான் உங்களின் ஜாதகத்திலும் கூட்டுக் கிரகங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 

இதுபோன்று கூட்டுக் கிரகங்கள் அமையப்பெற்ற எல்லோருக்கும் இத்தகைய சாதனை அமைப்பு அமையவில்லை. ஏனெனில், இவருடைய ஜாதகத்தில் அமையப்பெற்ற கூட்டுக் கிரகங்களுக்குள் கிரக யுத்தமோ, அஸ்தங்கமோ (கிரக திறன் குறைதல்) ஏற்படவில்லை. நவாம்சத்திலும் ராசிக் கட்டத்திலுள்ள கூட்டுக் கிரகங்கள் வலிமையாகவே உள்ளன.

மேஷ லக்னத்திற்கு லக்னத்திலேயே சூரியன், செவ்வாய், குரு, சந்திரன் யுத்தமில்லாமல் அமர்ந்திருந்தால் பணம், பதவி, பக்தி எல்லாம் கிடைக்கும். இதே சேர்க்கை லக்னத்திற்கு ஐந்தாம் இடமான சிம்மத்திலும் ஏழாம் இடமான துலாத்திலும், ஒன்பதாம் இடமான தனுசிலும்,

பத்தாம் வீடான மகரத்திலும் இடம் பெற்றிருந்தால் ராஜயோக நிலையை அடைய முடியும். ராஜயோக நிலை என்பது தொடர்ச்சியான வளர்ச்சியையும் தோல்வியினால் துவண்டு விடாத தன்மையையும் நிலை நிறுத்தும். இன்னும் மேலே இன்னும் மேலே என்று தொடர்ந்து ஈடுபட்ட தொழிலில் சென்று கொண்டேயிருப்பார்கள். எப்போதும் உள்ளத்தில் குன்றாத செயலூக்கம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

 உதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையின் தந்தையான இயக்குனர் சத்யஜித் ரேவையே எடுத்துக் கொள்வோம். மேஷ லக்னம், சதய நட்சத்திரம், கும்ப ராசி. இவரின் ஜாதகத்தில் லக்னத்திலேயே சூரியன், சுக்கிரன், புதன், கேது போன்ற நான்கு கிரகச் சேர்க்கை இடம் பெற்றுள்ளது. இதில் சுக்கிரன் நவாம்சத்தில் ஆட்சி பெற்றதால்தான் கலைத்துறையில் இவர் பிரகாசித்தார்.

லக்னாதிபதியாகிய செவ்வாய் சுக்கிரன் வீட்டிலும், தனாதிபதி சுக்கிரன் செவ்வாய் வீட்டிலும் பரஸ்பரம் தங்கள் வீடுகளைப்பரிமாறிக்கொண்டு பரிவர்த்தனா யோகம் பெற்றதால்தான் திரைத்துறைக்கான உலக அங்கீகாரத்தின் அடையாளமான ஆஸ்கார் விருதைப் பெற முடிந்தது. பாக்யாதிபதி குரு, லக்னத்திற்கு ஐந்தாம் இடமான சிம்மத்தில் கலை கிரகமான சுக்கிரனின் நட்சத்திரமான பூரத்தில் அமர்ந்திருக்கிறார்.

லக்னத்தையும் லக்னத்தில் நின்ற நான்கு கிரகங்களையும் பார்வையிட்டதாலும்தான் சினிமாத்துறைக்கே தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணிக்க முடிந்தது. படைப்பாற்றலைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் குருவுடன் சனியும் இருந்ததால்தான் மாறுபட்ட சிந்தனையோடு சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டும் படங்களையும் பாடங்களையும் இவரால் படைக்க முடிந்தது.

மேஷ லக்னத்திற்கு சுப கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையானது மிதுனம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகளில் நிகழ்ந்தால் ஜாதகர் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரும்.

விருச்சிகமானது செவ்வாயின் சொந்த வீடாக இருந்தாலும், லக்னத்திற்கு எட்டாம் வீடாக வருவதாலும், முப்பது பாகைக்குள், முதல் மூன்று பாகையைத் தவிர மீதமுள்ள பாகைகள் யாவும் பாதகாதிபதியான சனியாலும் ரோகாதிபதியான புதனாலும் ஆக்கிரமிக்கப்படுவதாலும் விருச்சிகத்தில் வீற்றிருக்கும் கிரகங்களில் பெரும்பாலானவை கெடுபலன்களையே தருகின்றன.

 இதே நட்சத்திர அமைப்பில் உள்ள வீடுகளான கடகம், மீனத்தில் கிரகங்கள் அமர்ந்தாலும் விருச்சிகத்திற்கு ஈடு இணையாக கெடுபலன்கள் நிகழ்வதில்லை. காரணம், கடகம் சுக ஸ்தானமான நான்காவது வீடாக வருகிறது. மீனம் சுப விரய ஸ்தானமாக வருகிறது. இந்த வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நற்பலன்களையே தருகின்றன.

மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருவதால் சனியுடன் ஐந்து பாகைக்குள் நெருங்கியிருக்கும் கிரகங்கள், சனியின் சமசப்தம பார்வையான ஏழாம் பார்வைக்கு உட்பட்ட கிரகங்கள், சனி பகவானின் மற்றொரு வீடான கும்பத்தில் அமர்ந்த கிரகங்கள் முழுக்க முழுக்க தன் நிலை இழந்து கெடுபலன்களையே அதிகம் தருகின்றன.

கூட்டுக் கிரக சேர்க்கைக்குள் ராகுவோ, கேதுவோ இடம்பெற்றால் ஏற்கனவே கூட்டாக உள்ள கிரகங்கள் தங்களின் வலிமையை இழக்கின்றன. அனைத்து கிரகங்களைக் காட்டிலும் அதீத வலிமையுள்ளதாக ராகுவும் கேதுவும் இருப்பதே இதற்குக் காரணமாகும்.

நல்ல கிரக அமைப்புகளோடு கூடிய மேஷ லக்ன ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ உடனிருந்தால், முழுவதுமான நற்பலன்களைத் தராது முடக்கி விடும். உதாரணமாக செவ்வாய், சூரியன், சந்திரன், குரு ஐந்தாம் வீடான சிம்மத்தில் அமர்ந்திருந்து அதனுடன் ராகுவோ அல்லது கேதுவோ சேர்ந்தால் அந்த வீட்டிற்குரிய பலன்களைக் கெடுக்கும்.

 அதாவது, ராகு சேர்ந்தால் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தை பிறக்கும். கேது சேர்ந்தால் குறை மாதத்தில் குழந்தை பிரசவமாகும். அதேமாதிரி பூர்வீகச் சொத்தை அடையவிடாமல் தடுக்கும். ராகு இருந்தால் வழக்கு தொடுத்து பெற வேண்டியிருக்கும். கேது இருந்தால் இறுதி வரை ஏமாற்றமே மிஞ்சும்.

இவ்வாறு கூட்டுக் கிரகங்களின் பாதிப்புகள் இருந்தால் நீங்கள் நிச்சயம் ஞானியர்களையும், புனித மகான்களையும் வணங்குவது நலம். அதுதவிர செவ்வாய்க்கு எதிர்குண கிரகங்களாக சனியும் புதனும் வரும்போது சுகபோகத்தில் இருக்கும்போதே வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் யோசிப்பீர்கள். எப்போதுமே காடு, மேடெல்லாம் திரியும் சித்தர்கள் எனில் உங்களுக்குப் பிடிக்கும்.

மிகப் பழமையான தலங்களையும் அங்கேயே ஏதேனும் ஜீவ சமாதிகள் இருந்தால் அதையும் நீங்கள் தரிசிக்கும்போது உங்களுக்குள் மாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட தலமே நெரூர் ஆகும். இத்தலத்திலுள்ள சிவாலயத்திற்குப் பின்புறத்தில்தான் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகாஞானி ஜீவசமாதி அடைந்தார்.

தன் உடல், மனம் எதுவும் தெரியாது மகாசமாதியில் வெகு காலம் சஞ்சரித்தவர். அவதூதராக இருந்தார். இதுபோன்ற ஜீவசமாதிகளுக்கு செல்லும்போது எதிர்மறை பலன்கள் நிச்சயம் குறையும். இத்தலம் கரூர் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. அடுத்த வாரம் ரிஷப லக்னத்தைக் குறித்து பார்ப்போம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்