Must Watch



விமானம்

அப்பா- மகன் உறவைப் பற்றிய ஓர் அழகான படம், ‘விமானம்’. ‘ஜீ 5’ல் தமிழில் காணக்கிடைக்கிறது இத்தெலுங்குப்படம்.உடல் ஊனமுற்றவர் வீரய்யா. கட்டணக் கழிப்பறை நடத்தி வருகிறார். அவரது ஒரே மகன் ராஜு. பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.

படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்கிறான். வீரய்யாவின் மனைவி இறந்துவிட்டார். அதனால் அப்பாவும், மகனும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக வாழ்ந்து வருகின்றனர். தினமும் தனது மூன்று சக்கர வாகனத்தில் ராஜுவைப் பள்ளியில் விட்டுவிட்டு, கட்டணக் கழிப்பறையைக் கவனிப்பது வீரய்யாவின் அன்றாட வேலை.

ராஜுவுக்கு விமானம் என்றால் உயிர். அடிக்கடி விமான நிலையத்துக்குச் சென்று விமானத்தை வேடிக்கை பார்க்கிறான். எப்போதும் விமானம் என்றே இருக்கிறான். வாழ்க்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது ராஜுவின் கனவு. இந்நிலையில் ராஜுவுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. 

உடைந்து போகிறார் வீரய்யா. இன்னும் கொஞ்ச நாட்களில் ராஜு இறந்துவிடுவான். அதற்குள் மகனின் கனவை அப்பா எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே திரைக்கதை. நெகிழ்ச்சியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவ பிரசாத்.

ரிவென்ஜ்

எவ்வளவோ பழிவாங்கல் கதையை மையமாக வைத்த திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் சுவாரஸ்யமான ஒரு படம், ‘ரிவென்ஜ்’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த பிரெஞ்ச் மொழித் திரைப்படம். ஒரு பாலைவனத்தில் தனியாக வீற்றிருக்கும் ஒரு சொகுசு விடுதிக்கு ஜென் என்ற இளம் பெண்ணை அழைத்து வருகிறான் ரிச்சர்ட்.  அடுத்த நாள் விடுதிக்கு ரிச்சர்டின் இரண்டு நண்பர்கள் வருகின்றனர். ரிச்சர்ட் விடுதியில் இல்லாதபோது அவனின் நண்பர்களின் ஒருவன் ஜென்னை கொடூரமாக வன்புணர்வு செய்துவிடுகிறான்.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மூன்று பேருக்குமே பிரச்னை என்று நினைக்கிறான் ரிச்சர்ட். அதனால் ஜென்னை கொலை செய்ய முடிவு செய்கின்றனர். மூன்று பேரிடமிருந்தும் தப்பித்து ஓடுகிறாள் ஜென். அவளை ஒரு மலையிலிருந்து கீழே தள்ளிவிடுகிறான் ரிச்சர்ட். ஒரு மரத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறாள் ஜென். அவள் பிழைக்க மாட்டாள் என்று மூவரும் சென்று விடுகின்றனர். உயிர் பிழைத்த ஜென், எப்படி மூன்று பேரையும் பழி வாங்குகிறாள் என்பதே திரில்லிங் திரைக்கதை. விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை எங்கேயும் நிற்காமல் கிளைமேக்ஸ் வரை வேகத்துடன் செல்கிறது. படத்தின் இயக்குநர் கோரலை ஃபார்கியட்.

ஃப்ரைடே நைட் பிளான்

‘நெட்பிளிக்ஸி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் இந்திப் படம் ‘ஃப்ரைடே நைட் பிளான்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. அமைதியான அண்ணன் சித். குறும்புக்கார தம்பி ஆதி. இவர்களது அம்மா ஒரு பிசினஸ்வுமன். சித்துவும், ஆதியும் ஒரு சர்வதேசப் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளியில் சித் இருக்கிற இடமே தெரியாது.  

சித்துவின் பள்ளிக்கும், இன்னொரு பள்ளிக்கும் இடையில் கால்பந்து போட்டி நடக்கிறது. அதில் ஒரு கோல் அடித்து தன்னுடைய பள்ளியை ஜெயிக்க வைக்கிறான் சித். அன்றிலிருந்து பிரபலமாகிறான்.  இந்நிலையில் அவர்களது அம்மா பிசினஸ் டிரிப்பாக வெளியூருக்குச் செல்கிறார். எந்த காரணம் கொண்டும் காரை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டாம் என்று மகன்களிடம் கட்டளையிட்டுவிட்டுச் செல்கிறார்.  

அன்று வெள்ளிக்கிழமை. ஒரு பார்ட்டி. அம்மா வீட்டில் இல்லை என்பதால் சித்துவும், ஆதியும் அந்த பார்ட்டிக்கு காரை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். இதுதான் அவர்களது முதல் பார்ட்டி. அந்தப் பார்ட்டியும், காரை எடுத்துக்கொண்டு போனதால் சித்துவுக்கும்; ஆதிக்கும் நேரும் பிரச்னையும்தான் மீதிக்கதை. ஜாலியாக ஒரு படம் பார்க்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ். படத்தின் இயக்குநர் வட்சல் நீலகண்டன்.

த ரவுண்ட்அப்: நோ வே அவுட்

‘த அவுட்லாஸ்’, ‘த ரவுண்ட்அப்’ ஆகிய க்ரைம் பட வரிசையில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் கொரியன் படம் , ‘த ரவுண்ட்அப்: நோ வே அவுட்’.  ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. புகழ்பெற்ற துப்பறிவாளர் மா சியோக். குத்துச்சண்டை போடுவதில் வல்லவரும் கூட. ஒரு ஹோட்டலின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து ஓர் இளம் பெண் இறந்துவிடுகிறாள். கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரிக்கச் செல்கிறார் மா.

பிரேத பரிசோதனையில் அந்தப் பெண் ஹைபர் என்ற போதை மருந்தை உட்கொண்டது தெரிய வருகிறது. அந்தப் பெண்ணுக்கு எப்படி ஹைபர் கிடைத்தது என்பதற்காக ஓர் இரவு விடுதியின் பொறுப்பாளரை விசாரிக்க, அவரோ வேறு ஒரு ஆளைக் கைகாட்டுகிறார். இன்னொரு பக்கம் போதைக் கும்பல் 20 கிலோ ஹைபரை விற்பனை செய்ய டீலிங்  செய்துகொண்டிருக்கிறது. நகரத்துக்குள் ஹைபரை உலாவ விட்டவர்களை எப்படி மா கூண்டோடு அழிக்கிறார் என்பதே மீதிக்கதை. ஆக்‌ஷன், திரில்லிங் படப் பிரியர்களுக்கு செம விருந்து வைத்திருக்கிறது இந்தப் படம். படத்தின் இயக்குநர் லீ சாங் யோங்.

தொகுப்பு: த.சக்திவேல்