முரட்டுக்காளை - விமர்சனம்





வழக்கமாக ரஜினி படத் தலைப்பிட்டு வரும் ஒரு படம் என்றில்லாமல், ரஜினியின் ‘முரட்டுக்காளை’ படத்தை ரீமேக்கே செய்திருக்கிறார்கள். தனக்கென தனி பாணியில் கதை சொல்லத்தெரிந்த இயக்குநர் கே.செல்வபாரதிக்கு இப்படி ஒரு முயற்சி அவசியமா என யோசிப்பதற்குள், ரேக்ளா ரேஸில் படம் தொடங்கி விரைய ஆரம்பித்து விடுகிறது.

ரஜினி, ரதி, சுமலதா, ஜெய்சங்கர், சுருளிராஜன் நடித்து இசைஞானி இளையராஜா இசையமைத்து, எஸ்.பி.முத்துராமன் இயக்கியது முந்தைய படம். மேற்படி லிஸ்ட்டில் முறையே சுந்தர்.சி, சினேகா, சிந்து துலானி, சுமன், விவேக் நடித்து, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து கே.செல்வபாரதி இயக்கியிருப்பதால் இது எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ... அப்படியே இருக்கிறது படம்.


ரஜினி நடித்து ரசிகர்களின் நினைவுகளில் இன்னும் நீங்காதிருக்கும் ‘காளையன்’ கேரக்டரில் நடிக்க ஒத்துக்கொண்ட சுந்தர்.சியின் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும். ரஜினிக்குப் போட்டியாக அதே வேடத்தில் நடிக்கிறேன் பேர்வழி என்று விபரீத முயற்சிகளையெல்லாம் மேற்கொள்ளாமல், தன் ஸ்டைலிலேயே நடித்திருக்கும் அவரது நேர்மையையும் பாராட்டியே ஆக வேண்டும். ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ பாடலில் மட்டும் அங்கங்கே அவரையும் மீறி ரஜினி நினைவில் வந்து விடுகிறார். மற்ற இடங்களிலெல்லாம் ரஜினியை நினைக்க வைத்துவிடாமல் சுந்தர்.சியின் படமாகவே போய்க்கொண்டிருக்கிறது.

ரதியின் வேடத்தில் சினேகா ஆறுதலாக இருக்கிறார். மந்திரப் புன்னகையுடன் அலையும் அவரை தஞ்சமடைய வந்த கிராமத்துப் பெண்ணாகவெல்லாம் லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம். அப்பாவித் தம்பிகளின் ஆற்றல் மிகுந்த அண்ணனாக இருந்தாலும் முந்தைய படத்தில் ரஜினியிடம் தெரிந்த வெள்ளந்தித்தனமெல்லாம் இல்லாமல் சுந்தர்.சியே ஒரு பண்ணையார் போலத் தெரிவதால், தஞ்சமடைய வந்த சினேகாவும் கூட அடுத்த தெருவில் வசிக்கும் அத்தை மகள் போலவே தடவிய பவுடர் கலையாமல் வருவதை ஏற்று ரசிக்கலாம்.

முன்னதில் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் நடித்த ஜெய்சங்கர் - அதுவும் வில்லனாக வேடம் ஏற்றதால் - மிகவும் கவனிக்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றார். ஆனால் இதில் படத்துக்குப் படம் பார்த்துக்கொண்டிருக்கும் சுமனே வில்லனாவதால் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தாமல் வழக்கமான வில்லனாக வந்து போகிறார். அவரது மகளாக வரும் சிந்து துலானி, சுந்தர்.சியை பணக்காரத்தனத்துடன் காதலித்து, பின் உயிரைக் கொடுக்கிறார்.

சுருளி வேடத்தில் திருநங்கை போல் வரும் விவேக்குக்கு படத்தில் காமெடியைத் தாண்டி சீரியஸான வேலையிருப்பதாலோ என்னவோ, நம்மைச் சிரிக்க வைப்பதில் பின்தங்கி விடுகிறார். ஆனால் வெளியூரிலிருந்து வெட்னரி டாக்டராக வரும் செல்முருகன், ‘பதினாறு வயதினிலே’ டைப்பில் விவேக்கை ‘மைய்ல்’ என்றழைத்து மையல் கொள்ளும் காட்சிகள் லந்து. அதிலும் ஸ்ரீதேவியைப் போல் விவேக்கை புடவை நனையாமல் ஆற்றைக் கடந்து வர வைக்க, அதில் விவேக்கின் கரடு முரடான காலைப் பார்த்து அவர் மயங்கிச் சரிவது அமர்க்களம்.

சான்டாணியோவின் ஒளிப்பதிவு வண்ணக் கலவையாக இருக்கிறது. ‘பொதுவாக எம்மனசு’ பாடலைப் போலவே மற்ற இசைஞானியின் பாடல்களையும் பயன்படுத்தி யிருந்தால் ஸ்ரீகாந்த் தேவாவும் தப்பித்திருப்பார். ‘அடிமைப்பெண்’ணின் ‘ஆயிரம் நிலவே வா’ ஓபனிங் டியூனைப் பயன் படுத்தி அவர் இசைத்திருக்கும் ‘சுந்தர புருஷா’வை ரசிக்கலாம்.

ரஜினி பட ரீமேக்காக இருந்தாலும் முன்னதற்கும் இதற்கும் சம்பந்தம் இருந்து விடக்கூடாதென்றே ஜல்லிக்கட்டை மாற்றி ரேக்ளா ரேஸ் என்றெல்லாம் யோசித்திருக்கிறார் செல்வபாரதி. அதுதான் நடந்தும் இருக்கிறது.
- குங்குமம் விமர்சனக்குழு