நிழல்கள் நடந்த பாதை





நாம் ஏன் தொடர்கதைகள் படிப்பதில்லை? 
மனிதர்களோடு வாழ்வதைவிட சிக்கலானது கதாபாத்திரங்களோடு வாழ்வது. மனிதர்கள் கதாபாத்திரங்களாக மாறி நம் வாழ்க்கையில் நுழையும்போது ஏற்படும் குழப்பங்கள் பற்றி ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் என்னை மிகவும் வருந்தச் செய்கிறது. கதாபாத்திரங்கள் நம் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருகிறார்கள். கற்பனை மனிதர்கள் வாழவே இடமில்லாத ஒரு தட்டையான உலகத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சோறு இல்லாத உலகத்தில்கூட வாழ்ந்து விடலாம். கற்பனை இல்லாமல் ஒரு வாழ்க்கையை எப்படி வாழ்வது?


என் இளமைக்காலம் முழுக்க நான் கதாபாத்திரங்களோடுதான் வாழ்ந்திருக்கிறேன். காமிக்ஸ் தொடர் கதைகளைப் படிப்பதில் ஆரம்பித்தது அது. பிறகு எல்லா தொடர்கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். மணியன் ‘இதயம் பேசுகிறது’ இதழில் எழுதிய தொடர்கதைகள் கடும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் என்னை விம்மச் செய்தன. இன்னொருபுறம் லக்ஷ்மி எழுதிய தொடர்களில் பெண்கள் அடைந்த துயரங்கள் என்னைத் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன. பிறகு சுஜாதாவும் பாலகுமாரனும் தங்கள் தொடர்களில் உருவாக்கிய நவீன உலகத்தின் கதாபாத்திரங்கள் என்னை முழுமையாக ஆட்கொள்ளத் தொடங்கின. வாரா வாரம் பத்திரிகைகளில் வரும் எனக்குப் பிடித்த தொடர்கதைகளை சேகரிக்கத் தொடங்கினேன். கடைசியாக நான் சேகரித்த தொடர் ‘தினமணி கதிரி’ல் லா.ச.ராமாமிருதத்தின் ‘சிந்தா நதி’.

தமிழர்களின் மனதில் கல்கியும் அகிலனும் நா.பார்த்தசாரதியும் ஜெயகாந்தனும் தி.ஜானகிராமனும் சாண்டில்யனும் சுஜாதாவும் பாலகுமாரனும் தொடர்கதைகளின் வழியே உருவாக்கிய கதாபாத்திரங்கள் நமது பண்பாட்டு அடையாளங்கள் என்றுகூட சொல்லலாம். அந்தக் கதாபாத்திரங்கள் நம்மோடு அந்தரங்கமாகப் பேசியிருக்கின்றன. நமது கனவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் துயரங்களுக்காக நாம் மனமுவந்து கண்ணீர் சிந்தியிருக்கிறோம். ஒரு தொடர்கதை முடியும்போது விடைகொடுக்க முடியாமல் தவித்து நின்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கதாபாத்திரங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக்கும் மகத்தான கூட்டுக் கனவு. அந்தக் கனவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள். வாசகர்களுக்கு வயதாகி மூப்பு வந்து விடுகிறது. ஆனால் கதாபாத்திரங்களுக்கு வயதாவதே இல்லை. அவை சொல்லின் அமரத்துவ வெளியில் அப்படியே நிலைபெற்று விடுகின்றன.

தஸ்தாயெவ்ஸ்கி தனது மகத்தான நாவல்களைத் தொடர்கதையாகவே எழுதினார். உலகின் பல மாபெரும் படைப்பாளிகளும் அப்படித்தான் எழுதினார்கள். தமிழின் மிகச் சிறந்த நாவல்கள் பலவும் தொடர்கதைகளாக எழுதப்பட்டவையே. அது ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய சுதந்திரம். அவன் லட்சக்கணக்கான வாசகர்களோடு சேர்ந்து அந்தக் கதையை எழுதுகிறான். தமிழில் யதார்த்தவாத கதைகள், நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகள், சிறுவர் கதைகள், காதல் கதைகள், வரலாற்றுக் கதைகள், அறிவியல் கதைகள், துப்பறியும் கதைகள், பேய்க் கதைகள் என எத்தனைவிதமான தொடர்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்று நினைத்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது.

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தொடர்கதை வடிவம் தமிழில் படிப்படியாக மரணித்துவிட்டது. பெரும்பாலான இதழ்கள் தொடர்கதைகள் வெளியிடுவதை நிறுத்திவிட்டன. சுஜாதா ஒரு முறை ஒரே நேரத்தில் ஐந்து தொடர்கதைகளையும், பாலகுமாரன் நான்கு தொடர் கதைகளையும் எழுதியது நினைவுக்கு வருகிறது.

தமிழின் தலைசிறந்த புனைகதை எழுத்தாளர்கள் யாரும் இன்று தொடர்கதைகள் எழுதுமாறு அழைக்கப்படுவதில்லை. வாசகர்களோடு தொடர்பே இல்லாமல் பிரமாண்டமான நாவல்கள் எழுதப்பட்டு, சில நூறு பேரால் மட்டும் படிக்கப்பட்டு அப்படியே மறைந்து போகின்றன.

இன்றைய வாசகர்கள் தொடர்கதைகள் படிப்பதை நிறுத்தி விட்டார்களா? கற்பனையோ, நினைவுத் தொடர்ச்சியோ அற்ற உடனடி நுகர்வை மட்டும்தான் சார்ந்திருக்கிறார்களா? யாருக்கும் காத்திருக்க முடியவில்லையா? அப்படியெனில் நாம் மிகவும் ஆதாரமான ஒரு விஷயத்தை இழக்கிறோம். உப்புப் பெறாத ஒரு சீரியலை வருஷக்கணக்கில் இருந்திருந்து பார்க்கும் நம்மால் தொடர்கதைகளைப் படிக்க முடியாதா?


சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நெடுங்குருதி’, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ என நவீன எழுத்தாளர்களின் பல நாவல்கள் எந்த ஒரு பிரபல இதழிலும் தொடர்கதையாக வெளிவரக் கூடியவையே. ஆனால் ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன் போன்ற பல நவீன எழுத்தாளர்களுக்கு கிடைத்த சுதந்திரமும் பெரிய களமும் பின்னால் வந்த எழுத்தாளர்களுக்கு இல்லை. ‘கணையாழி’ போன்ற இலக்கிய இதழ்கள் கூட தொடர்கதைகள் வெளியிட்டிருக்கின்றன. ஆனால் இன்றைய சிற்றிதழ்களில் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

தொடர்கதை என்ற இலக்கிய வடிவத்தை, எழுத்தாளனும் வாசகனும் சேர்ந்து உருவாக்கும் அந்தக் கூட்டுக் கனவை நாம் இழக்கத்தான் வேண்டுமா? அதற்கான இடமும் தேவையும் தொடர்ந்து இருக்கிறது.
 பாட்டொன்று எழுதி...
‘கலியுகம்’ என்ற படத்தில் ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன். இந்த வாரம் ஆடியோ ரிலீஸ். ‘உன்னைப்போல் ஒருவனி’ல் கமலுக்காக எழுதிய பாடலுக்குப் பிறகு நான் எழுதிய பாட்டு. ‘ஏனோ... ஏனோ...’ எனத் தொடங்கும் பாடல். சொற்கள் பாடலாக உருவாகும் காட்சி ஒரு இனிய அனுபவம். எனக்கு என் பாடல் ரெக்கார்டிங் செய்யப்படும் இடத்தில் உட்கார்ந்திருப்பது மிகவும் பிடிக்கும். நான்கு நிமிடங்களில் நீங்கள் கேட்டுக் கடந்து போகிற ஒரு பாடலின் ஒவ்வொரு துளியும் உருவாகும் விதத்தை நேரடியாகக் கண்டால் வியந்து போவீர்கள். இசையமைப்பாளனும் பாடகனும் கவிஞனும் ஒத்திசைந்து, தொழில்நுட்பத்தின் மகத்தான சாத்தியங்களுடன் எண்ணற்ற அற்புதங்கள் செய்யும் இடம் அது.

ஒரு நான்கு நிமிடப் பாடல், பல மணி நேரம் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. ஒரே வரி பலமுறை திரும்பத் திரும்பப் பாடப்பட்டு, அதன் உச்சபட்ச உணர்ச்சி வெளிப்பாடு உள்ள ஒரு இடம் பின்னர் இசையமைப்பாளரால் தேர்ந்தெடுத்து தொகுக்கப்படுகிறது. நாம் எழுதிய சொற்கள் நாமே நம்பமுடியாதபடி உயிர்பெற்று எழுந்து நடனமாடும் காட்சியை ஒலிப்பதிவுக் கூடத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. ஸ்ருதி ஹாசன் ‘அல்லா ஜானே’ பாடலுக்காக கமலை இரண்டு மணி நேரம் பாட வைத்தார். எதைத் தொட்டாலும் அதைக் கலையாக மாற்றக் கூடிய கமலை அவரது சின்னப் பெண் திரும்பத் திரும்பப் பாடவைத்து தான் விரும்புகிற ஒன்றைப் பெறுவதற்காக முயற்சித்ததும், அன்றைக்குத்தான் பாட வந்த ஒரு இளம்பாடகனைப் போல கமல் அதற்கு ஒத்துழைத்ததும் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

இப்போது வெளிவரும் பாடல் ஒலிப்பதிவின்போது ஒரு சம்பவம் நடந்தது. தாஜ்நூர் இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவுக் கூடத்தில் ராகுல் நம்பியார் கண்ணாடி அறைக்குள் இருந்து பாடிக்கொண்டிருக்கிறார். எங்களைச் சுற்றி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசை பிரமாண்டமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. திடீரென தலையைப் பிடித்துக்கொண்டு ராகுல் நம்பியார் சுருண்டு விழுந்தார். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். ஒலிப்பதிவு நிறுத்தப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவருக்கு உணர்வு வந்தது. வெளியே ஸ்பீக்கருக்கு வரும் இசையின்  அவுட்புட்டை தவறுதலாக யாரோ அவரது ஹெட்போனிற்குக் கொடுத்துவிட்டார்கள். அவரது காதில் ஒரு நிமிடம் இசையின் பெரு வெடிப்பு. சிறிது நேரத்திற்குப் பிறகு ‘ஏனோ... ஏனோ...’ என்று அவர் மறுபடி பாட ஆரம்பித்தார். நாங்கள் புன்னகைத்தோம். கைச் செலவுக்கு ஒரு தொழில்!

சென்னையில் இன்று அதிக அளவு நடக்கும் குற்றம் ‘செயின் பறிப்பு’ என்று காவல்துறையில் பணிபுரியும் ஒரு நண்பர் சொன்னார். ஆனால் இதில் பாதி அளவுகூட பதிவாவதில்லை. 2 பவுன், 3 பவுன் சங்கிலிகளைப் பறிகொடுப்பவர்கள் பெரும்பாலும் புகார் செய்வதில்லை. அப்படியே புகார் செய்ய வருபவர்களை காவல்துறையினர் ஏதாவது சாக்குச் சொல்லி சமாளித்து திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதையெல்லாம் பதிவு செய்தால், குற்றங்களின் அளவு அதிகரித்துவிட்டது என்று பழி வந்துவிடும் அல்லவா?

இதில் ஈடுபடுபவர்கள் படித்த இளைஞர்கள். செலவுக்கு நிறைய பணம் தேவைப்படுபவர்கள். ஒரு பைக்கும் கொஞ்சம் துணிச்சலும் இருந்தால் போதும். ஈஸி சாஃப்ட் டார்கெட்.
நண்பர் சொன்ன ஒரு சம்பவம்தான் கொஞ்சம் பயமாக இருந்தது. சென்னையில் ஒரு இடத்தில் ஒரு பெண் செயினைப் பறிகொடுத்திருக்கிறார். மூன்று நாள் கழித்து அதே இடத்தில் அந்தப் பெண்ணை அந்த செயின் திருடன் கன்னத்தில் அறைந்துவிட்டுப் போயிருக்கிறான். அந்தப் பெண் செய்த ஒரே குற்றம், கவரிங் செயின் அணிந்திருந்தது. அன்றைக்கென்று அவன் என்னென்ன ப்ளான் வைத்திருந்தானோ?
(இன்னும் நடக்கலாம்...)