பிஞ்சு மாணவனுக்கு பிரம்படி! : அரசு நிர்ணயித்த ஃபீஸ் கட்டியதால்...





‘தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி சிங்காரவேலு கமிட்டி பரிந்துரைத்த கட்டணம்தான் உச்ச வரம்பு. அதற்கு மேல் ஒரு பைசா கட்ட வேண்டாம்’ என்று அரசே சொல்கிறது. ஆனால், இந்த கட்டணத்தை நடைமுறைப்படுத்தச் சொன்ன ஒரே குற்றத்துக்காக, ஒன்றாம் வகுப்பு படிக்கும் சுபாஷன் என்ற ஐந்து வயது சிறுவன் சித்ரவதைக்கு உள்ளானதாக புகார் எழுந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரின் குழந்தை. புகார் எழுந்திருப்பது சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ‘லயோலா மெட்ரிக் பள்ளி’ மீது.

நடந்த சம்பவம் பற்றி சுபாஷனின் தந்தை ஜான் சந்திரசேகர்
பேசினார்.
‘‘வருமானம் கம்மின்னாலும் என் மகனை நல்லா படிக்க வைக்கணும்னுதான் அந்த ஸ்கூல்ல சேர்த்தேன். கல்விக் கட்டணம் இவ்வளவுதான்னு அரசாங்கம் கமிட்டி போட்டு நிர்ணயிச்சிருக்கு. ஆனா, அந்த ஸ்கூல்ல குறைக்கல. என்னோட சேர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட பேரன்ட்ஸ், அரசு நிர்ணயிச்ச கட்டணத்தைத்தான் கட்டுவோம்னு முடிவெடுத்தோம். ஆனா, எங்க 20 பேருக்கு மட்டும் பணம் கட்டுறதுக்கான சலானையே தரலை. மத்தவங்களுக்குக் கொடுத்த சலானை ஜெராக்ஸ் எடுத்து பேங்க்ல பணம் கட்டினோம். ஆனாலும் எங்களுக்கு மட்டும் புக்ஸ், டைரின்னு எதையுமே அவங்க கொடுக்கல. நாங்க வாங்கிக் கொடுத்ததையும் பிடுங்கி வச்சுக்கிட்டாங்க.

இது பத்தி ஸ்கூல் கரஸ்பாண்டன்ட், ஃபாதர் யூக்ரடிஸ்கிட்ட கேட்டப்போ, அவர் என்னைக் கேவலமா பேசி அனுப்பிட்டார். அதனால, நான் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர்கிட்ட புகார் கொடுத்தேன். அதுதான் நான் செஞ்ச தப்பு. அதுக்குத்தான் என் பையனை டார்ச்சர் பண்ணியிருக்காங்க’’ என்று அவர் நிறுத்த, அதன்பிறகு நடந்ததை கண்ணீர் மல்க சொன்னார் சுபாஷனின் அம்மா சரோஜா.
‘‘13ம் தேதி வழக்கம்போல இவனை ஸ்கூல்ல விட்டுட்டு 3 மணிக்கு கூப்பிடப் போனேன். அப்போ இவன் மட்டும் கிளாஸுக்கு வெளிய மொட்டை வெயில்ல நின்னுக்கிட்டிருந்தான். கால்ல ரத்தம் வடிஞ்சுக்கிட்டிருந்துச்சு. ‘என்னாச்சுப்பா’ன்னு கேட்டா, ‘ஃபாதர் அடிச்சுட்டார்’னு சொன்னான். அப்புறம் கூடப் படிக்கிற பசங்ககிட்ட விசாரிச்சப்பதான், ஒரு வாரமா இவன் படுற கஷ்டம் தெரிஞ்சது. எல்லா பசங்களும் பெஞ்ச்ல உட்கார்ந்திருக்க, இவனை மட்டும் தரையில உட்கார வச்சிருக்காங்க. அன்னிக்கு மதியம் கால்ல ஏற்கனவே இவனுக்கு அடிபட்டிருந்த இடத்துல ஃபாதர் பிரம்பால் அடிச்சிருக்கார். காதுலயும் அறைஞ்சிருக்கார். ரத்தம் சொட்டச் சொட்ட, மனசாட்சியே இல்லாம இவனை வெயில்ல நிறுத்தியிருக்கார். மதியம் ஒரு மணியிலிருந்து மூணு மணி வரைக்கும் வெயில்லயே நின்னிருக்கான் எம் புள்ள...’’ என்றவர், அதற்கு மேல் வார்த்தை வராமல் நிற்கிறார்.

இதுபற்றி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர் இவர்கள். ‘‘ஆரம்பத்துல எங்க புகாரை பதிவு செய்யவே மறுத்தாங்க. மத்த பேரன்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போராட்டம் நடத்துவோம்னு சொன்ன பிறகுதான் வாங்கினாங்க’’ என்கிற சரோஜா, கமிஷனரிடமும் இதுபற்றி புகார் கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் ஃபாதர் யூக்ரடிஸ் தரப்பு கருத்தை அறிய பள்ளிக்குச் சென்றோம். அவரது அறைக்குள் நுழைந்து நம்மை அறிமுகம் செய்துகொண்டது தான் தாமதம், ‘‘வெளில போங்க... எல்லாம் முடிஞ்சிடுச்சு. நான் இதுபற்றி எதையும் பேசமாட்டேன்’’ என்று கிட்டத்தட்ட நம்மை விரட்டிய அவரது முகம் முழுக்க படர்ந்திருந்தது கோப வெறி.

‘பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்தச் சொல்பவர்களின் பிள்ளைகளுக்கு இதுதான் கதி’ என்றால், அதை யார்தான் தட்டிக் கேட்பது? தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதனிடம் இதுபற்றிக் கேட்டோம்...

‘‘இது ஒரு தவறான முன்னுதாரணம். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், பள்ளிகள் விதிப்பதுதான் கட்டணம் என்ற சர்வாதிகாரம் வலுத்துவிடும். இந்தப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ஒவ்வொரு மாணவர்களிடமும் இரண்டாயிரமும் அதற்கு மேலும் கட்டணம் வசூலித்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 300 தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இதில் 95 சதவீத பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கிறார்கள். ஆனால் ஒரு சில பெற்றோர்கள்தான் இதனை எதிர்த்து கேட்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு கெடுமோ என்ற பயத்தில் அமைதியாக இருக்கிறார்கள். கல்வி அதிகாரிகள்தான் இதனை முறைப்படுத்த வேண்டும். சட்ட திட்டங்களை மதிக்காமல், முறைகேடு செய்யும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதே ஆசிரியர்களைக் கொண்டு அந்தப் பள்ளியை அரசே பொறுப்பேற்று நடத்தலாம். இதுபற்றி அரசுக்கு எங்கள் சங்கம் மூலம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்’’ என்றார்.

‘‘கடந்த இரண்டு வருடங்களாகவே அந்தப் பள்ளி மீது நிறைய புகார்கள் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. பள்ளி நிர்வாகத்திற்கு காவல்துறை துணை போனால், எப்படி பயம் இருக்கும். அதனால்தான் மறுபடியும் மறுபடியும் தவறு செய்கிறார்கள். நடவடிக்கை எடுக்கவேண்டிய பள்ளிக் கல்வித்துறையும் மௌனமாக இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதுமே நிறைய தனியார் பள்ளிகளில் நூதனமான முறைகளிலெல்லாம் விதிமீறல் செய்கிறார்கள். அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தால், பள்ளிகளின் நூதனக் கொள்ளை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்’’ என்கிறார் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’யின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
- அமலன்