மாத்தி யோசித்த ஸ்பைடர்மேன்!





சிலந்தியின் விசேஷ சக்தி பெற்றவர் சூப்பர் ஹீரோவாகி அமெரிக்காவைப் பல சோதனைகளிலிருந்து காப்பாற்றிய கதையை, மார்வல் காமிக்ஸிலிருந்து கைபடாமல் எடுத்து கண்ணுக்கு விருந்தளித்த ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி உலகெங்கிலும் ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இதோ நான்காம் பாகம் ரெடி!

ஆனால் இது கொஞ்சம் ஸ்பெஷல்... ஒரே கதையை சீக்குவலாக சொல்லிக்கொண்டிருப்பதில் சின்ன அசுவாரஸ்யம் தட்ட, அதையே காலத்துக்கேற்றவாறு கொஞ்சம் ‘மாத்தி யோசித்து’ ஸ்பைடர்மேனின் மறு உருவாக்கமாகக் கொடுக்க நினைத்தது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். அதன் விளைவே ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’.

இதுவரை சொல்லப்பட்டு வந்த கதைகளில் பீட்டர் பார்க்கர் பாத்திரம் உயிரியல் கண்காட்சியகத்தில் சிலந்தி ஒன்று கடித்துவிட சிலந்திக்குண்டான அபூர்வ சக்திகளைப் பெற்றதாக இருக்கும். ஆனால் இதில் ஆராய்ச்சிபூர்வமாக சிலந்திக்கான செயற்கை இழைகளை அவரே உருவாக்குகிறார் என்று போகிறது கதை. சொல்லப்போனால் ஒரிஜினல் கதையில் ஸ்பைடர்மேனை உருவாக்கிய எழுத்தாளர் ஸ்டேன் லீ இப்படித்தான் எழுதியிருக்கிறாராம்.

இதுவரை பீட்டர் பார்க்கர் பாத்திரம் ஏற்றிருந்த டோபே மேகொயர் இதில் இல்லை. அவருக்கு பதிலாக ஆன்ட்ரூ கார்ஃபீல்ட் புது ஸ்பைடர்மேன் ஆகிறார். ஸ்பைடர்மேனின் முதல் பாகம் வெளியானபோது ஆன்ட்ரூவுக்கு 18 வயதாம். திரையில் ஸ்பைடர்மேனின் சாகசங்களைப் பார்த்து பிரமித்தவர் ஸ்பைடர்மேன் காஸ்ட்யூமை கடைகளில் வாங்கிப் போட்டுப் பார்த்து சந்தோஷித்த கதையை நினைவுகூர்கிறார். இப்போது அவருக்கு ஒரிஜினல் ஸ்பைடர்மேனாகவே அடித்தது அதிர்ஷ்டம். முன் பகுதிகளில் அவரது காதலியாக நடித்திருந்த கிர்ஸ்டன் டன்ஸ்டுக்கு பதிலாக இதில் எம்மா ஸ்டோன் நடித்திருக்கிறார். முந்தைய பாகங்களின் இயக்குநர் சாம் ரைமிக்கு பதிலாக இதில் மார்க் வெப் இயக்குநராகிறார். பழைய ஸ்பைடர்மேனின் சாகசங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் ஆக்ஷனில் நனைத்தெடுத்திருக்கும் புது வடிவத்தில் இன்னொரு சுவாரஸ்யமாக ‘3 டி’யும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. 

என்னதான் ஸ்பைடர்மேன் அமெரிக்காவுக்காகப் பறந்து பறந்து நூல்விட்டாலும், இந்தியாவில்தான் அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதைப் புரிந்துகொண்டு இந்தப்படத்தில் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கானையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்திய ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் விதமாக இந்தமாதம் 29ம் தேதியே தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகிறது படம். ஆனால் அமெரிக்கர்கள் பார்க்கப் போவது அடுத்த மாதம் மூன்றாம் தேதிதான். அமேஸிங் இண்டியன் ஃபேன்ஸ்..!