பேங்க் கேஷியர்...ஏர் ஹோஸ்டல்... மாடலிங்... சீரியல்... சினிமா! லாவண்யா பளிச்
‘‘இந்த ஒன்பது மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் செய்கிற வேலைகள்ல பெருசா எனக்கு ஈடுபாடு வரவே இல்லை... எதையோ மிஸ் பண்ற மாதிரி ஃபீல் ஆச்சு. அப்படி ஆரம்பிச்சது சினிமா வாழ்க்கை...’’ ஆரம்பமே சினிமாதான் தன் வாழ்க்கையின் சுவாரஸ்யம் என ஆரம்பித்தார் லாவண்யா.
 எப்போதும் எங்கும் ட்ரெண்டில் இருக்கீங்க... யாரு சாமி நீங்க..?
ஹா... ஹா... சொந்த ஊர் திருப்பூர். அப்பா அன்பழகன் பிசினஸ்மேன், அம்மா யசோதா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வெச்சிருக்காங்க. நான் பி.காம் முடிச்சேன், தொடர்ந்து எம்பிஏ படிச்சேன். அப்பாவைப் பொறுத்தவரைக்கும் கரியர் அவ்வளவு முக்கியம். கௌரவமான ஒரு புரொஃபஷன் செலக்ட் செய்யணும்னு சொல்லிக்கிட்டே இருப்பார். அதனாலயே பேங்க் எக்ஸாம் எல்லாம் எழுதி ஒரு பிரைவேட் பேங்க்ல கேஷியரா வேலைக்கு சேர்ந்தேன். அந்த வேலையில பெருசா ஈடுபாடு இல்ல. ஆனா, நல்ல சம்பளமும் அந்தஸ்தும் கிடைச்சது. ஆனாலும் என்னவோ மிஷின் வாழ்க்கை.
சரி, அப்பா சொன்னபடி நல்ல வேலையா இருக்கணும்... அதேசமயம் கௌரவமான வேலையா இருக்கணும்... அதனால் அடுத்த ஸ்டெப் போகலாமே அப்படின்னு ஏர்லைன்ஸ் வேலைக்கு முயற்சி செய்தேன். அதுவும் கிடைச்சது. சூப்பர் சம்பளம், லக்ஸரியான வாழ்க்கை. எனக்கு இந்த ஒன்பது மணியில் இருந்து ஆறு மணி வரைக்கும் டைம் டேபிள் போட்டு செய்கிற வேலை அவ்வளவா பிடிக்காது. அதனால் அந்த வேலையையும் விட்டுட்டேன்.
அப்பாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது..? சினிமா என்ட்ரி எப்படி நடந்தது..?
என்னவா இருக்கும்..? செம திட்டுதான்! நானும் என் ஃபிரண்டும் சேர்ந்து டிரஸ் சேல் பிசினஸ் எல்லாம் ஆரம்பிச்சோம். அதுக்காக நானே மாடலாக வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. அதுவே கொஞ்சம் கொஞ்சமா மாடலிங் ஃபீல்டுக்குள்ள என்னைக் கொண்டு வந்துடுச்சு. ஆனாலும் முறைப்படி மாடலிங் செய்ய நாம எப்படி எல்லாம் நம்மளை வளர்த்துக்கணும் அப்படின்னு நிறைய கத்துக்கிட்டேன். அதன் மூலம் ஃபேஷன் ஷோ உலகம் எனக்கு சாத்தியம் ஆச்சு.
2019ல மிஸ் தமிழ்நாடு பட்டமும் எனக்கு கிடைச்சது. அதைத் தொடர்ந்து ஒரு ஷார்ட் ஃபிலிம், படங்கள், பைலட் ஃபிலிம்... இப்படியே போன வாழ்க்கையில் முதல் தடவையா சின்னத்திரை கதவைத் தட்டிச்சு. ரியாலிட்டி ஷோ, சீரியல்... இப்படியே போயிட்டு இருந்த லைஃப்ல அடுத்த கட்டமா சினிமா என்ட்ரி.
முதல் பட வாய்ப்பு பற்றி சொல்லுங்க?
முதல் படம் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’. டிஸிஃப்மா - டீசேல்ஸ் சர்வதேச ஃபிலிம் மற்றும் மீடியா அகடமி (DESIFMA - Desales International Film & Media Academy) ஒவ்வொரு வருஷமும் அவங்களுடைய அகடமில படிக்கிற மாணவர்களுக்காக ஒரு படம் தயாரிப்பது வழக்கம். அப்படி இந்த வருஷம் அவங்க எடுக்கிற படம்தான் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’. எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் டைரக்ஷன். பாக்யராஜ் சார், எஸ்.ஜே.சூர்யா சார், திருமுருகன் சார்... இவங்க கூட எல்லாம் ஜெயக்குமார் லாரன் வொர்க் பண்ணியிருக்காரு.
‘அற்றைத் திங்கள் அந்நிலவில்...’ இது என்ன கதைக்களம்?
நான் ஒரு ஐடி கேர்ள், ஆபீஸ்ல மேனேஜிங் டைரக்டர் மேல எனக்கு காதல். காதலைச் சொல்லும்போதுதான் அவருக்கு கல்யாணம் ஆனது தெரியவருது. அதிலும் அவர் கல்யாணம் செய்துகொண்டது என்னுடைய அக்கா அப்படிங்கிறதும் தெரிஞ்சுக்கிறேன். அதற்கு அப்புறம் என்ன ஆகுது அப்படிங்கிறதுதான் கதை. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிச்சிருக்கற இந்தப் படம், மாணவர்கள் மாணவர்களுக்காக உருவாக்கின படம்.
உங்க டயட் மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட் பத்தி சொல்லுங்க?
நல்லா ஒர்க்கவுட் செய்வேன். மாடலிங், சினிமாவுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் என்னை புரொஃபஷனல் மாடலா மாத்திக்க என்னெல்லாம் கடின உழைப்பை கொடுக்க முடியுமோ கொடுத்தேன்; கொடுக்கறேன். சினிமாவோ, சீரியலோ, ஷார்ட் ஃபிலிமோ... நடிப்பு அவ்வளவு சுலபம் கிடையாது. அதுக்கு எந்தளவு என்னுடைய டெடிகேஷனை கொடுக்க முடியுமோ கொடுத்தேன்; கொடுத்துக்கிட்டு இருக்கேன். டயட் கட்டுப்பாடு அதிகமாகவே ஃபாலோ செய்வேன். அதேமாதிரி முடிந்தவரை கார்போஹைட்ரேட் உணவுகள் தவிர்த்துட்டு இயற்கையான காய்கறிகள், பழங்கள் அதிகமா எடுத்துக்குவேன்.
சின்னத்திரை to வெள்ளித்திரை... இந்த அனுபவத்தால் உங்களுக்கு கிடைத்த பிளஸ் என்ன?
முக்கியமா என் முகம் எல்லாருக்கும் தெரியும். அதே சமயம் எனக்குன்னு தனியா அறிமுகம் தேவைப்படாது. ஆனா, நான் எப்பவுமே நடிப்பை சின்னத்திரை, வெள்ளித்திரை அப்படின்னு பிரிச்சுப் பார்த்ததே கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் நடிக்கணும் அப்படின்னு சொன்னா அது எந்த களமாக இருந்தாலும் நடிக்கிறதுக்கு நான் ரெடியா இருப்பேன்.
ஷாலினி நியூட்டன்
|