மறைந்த பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரை தன் பிசினஸ் பார்ட்னராக மாற்றிய விராட் கோலி!



உங்களுக்குப் பிடித்த பாடகர்... மகிழ்ச்சி முதல் துக்கம் வரை உங்களது அனைத்து உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் வடிகாலாக அமைந்த பாடகர்... குழந்தைப் பருவம் முதல் இன்றைய உங்கள் நிலை வரை உங்களை விட்டு விலகாமல் உங்களுடனேயே பயணப்படும் பாடகர்... நீங்கள் காதலிக்கும்போதும் காதலியையே திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும்போதும் உங்கள் கரங்களைப் பற்றியபடியே பயணப்படுவதுபோல் தன் வசீகர குரலால் உங்கள் மனதுடன் / இதயத்துடன் டிராவல் செய்யும் பாடகர்...
அப்படிப்பட்டவருக்கு என்ன கைமாறு செய்வீர்கள்..?

உங்கள் பதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதற்கு முன் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த விராட் கோலி செய்திருக்கும் காரியத்தை முதலில் தெரிந்து

கொள்ளுங்கள்.விராட் கோலிக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், விராட் கோலியோ பழம்பெரும் பாடகர் கிஷோர் குமாரின் தீவிர ரசிகர்.
பள்ளியில் அவர் படித்த காலத்திலும் சரி... கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டபோதும் சரி... இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாகி சர்வதேச அளவில் விளையாடத் தொடங்கியபோதும் சரி... இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கத் தொடங்கும்போதும் சரி... அனுஷ்கா சர்மாவை மணந்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும்போதும் சரி...

விராட் கோலியின் உயிராக டிராவல் செய்பவர் சர்வநிச்சயமாக இந்திப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமார்தான். இது ஊகம் அல்ல. அவரே கூறிய ரகசியம்தான்.
‘ஆட்களே இல்லாத தீவில் ஒரே ஒரு நபரை மட்டும் உடன் வைத்துக்கொண்டு வாழ்வதென்றால் யாரை துணைக்கு வைத்துக்கொள்வீர்கள்?’ என்று விராட் கோலியிடம் முன்பு ஒரு முறை கேட்கப்பட்டது. அதற்கு அவர் யோசிக்காமல் சட்டென்று அளித்த பதில் கிஷோர்குமார்.அந்த அளவுக்கு கிஷோர் குமாரின் பாடல்கள் மீது மிகுந்த பற்று கொண்டவர் விராட் கோலி. அதனாலேயே இப்போது கிஷோர் குமாருடன் இணைந்து தனது வர்த்தகப் பயணத்தை கோலி விரிவுபடுத்துகிறார்!

வெயிட்... வெயிட்... வெயிட்... கிஷோர் குமார்தான் இறந்துவிட்டாரே... அவருடன் விராட் கோலி எப்படி கைகோர்க்க முடியும் என்றுதானே சட்டையைப் பிடித்து கேட்கிறீர்கள்?!
ஆம். கிஷோர்குமார் இறந்துவிட்டார். ஆனால், அவர் பாடிய பாடல்கள் இப்பொழுதும் ஒலித்துக் கொண்டுதானே இருக்கின்றன..? பாடல்கள் மட்டுமா... கிஷோர்குமார் வாழ்ந்த, புழங்கிய அவரது வீடு இப்பொழுதும் இருக்கிறதுதானே!அதைத்தான் தனது தொழிலுக்கு பார்ட்னராக இணைத்துக் கொண்டிருக்கிறார் விராட் கோலி!

புரியவில்லையா..? கிஷோர்குமார் வாழ்ந்த வீட்டை தன்னுடன் சேர்த்துக்கொண்டு தொழில் செய்யப் போகிறார் விராட் கோலி!

யெஸ். மும்பையின் ஜூஹு பகுதியிலுள்ள கிஷோர் குமார் வாழ்ந்த வீட்டை 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ள விராட் கோலி, அதை ஒரு ஹோட்டலாக மாற்றி வருகிறார். அங்கு வருபவர்களுக்கு இன்னிசையுடன் உணவு பரிமாற வேண்டுமென்பது விராட் கோலியின் திட்டம்; கனவு. விராட் கோலி ஹோட்டல் திறப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஏற்கெனவே ‘ஒன் 8 கம்யூன்’ (One8 Commune) என்ற பெயரில் கொல்கத்தா, தில்லி, புனே ஆகிய நகரங்களில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார் விராட் கோலி. சூப்பர் ஃபுட் சாலட், கொந்தோராஜ் சிக்கன் (Gondhoraj Chicken), டிம்சம்ஸ் (Dimsums), சீஸ் கேக் டிஸர்ட், ஃபிஷ் கேபிரஜி (Fish Kabiraji) உள்ளிட்ட உணவு வகைகளை தன் ஹோட்டலின் ஸ்பெஷல் அயிட்டங்களாக படைத்து வருகிறார்.

ஆக, ஏற்கெனவே மூன்று நகரங்களில் தன் ஹோட்டல் பிசினஸை சிறப்பாக நடத்தி வரும் விராட் கோலி, இப்போது மும்பை ஜூஹு பகுதியில் உள்ள கிஷோர் குமாரின் வீட்டில் தனது ஹோட்டலின் 4வது கிளையைத் திறக்கப் போகிறார். இந்த ஹோட்டலுக்கான பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் இதன் உள்புற அமைப்புகளை வீடியோ எடுத்து அதை தனது ரசிகர்களுக்காக யூடியூபில் பகிர்ந்துள்ளார்.

கிஷோர் குமாரைப்பற்றியும், தான் திறக்கவுள்ள புதிய ஹோட்டலைப்பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருக்கும் விராட் கோலி, “நான் சந்திக்க விரும்பிய நபர் யார் என்று என்னிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு நான் கிஷோர்குமார் என்று பதில் அளித்திருந்தேன். அவரது இசைக்கு நான் ரசிகன்.

எனக்கு அதிக ஈடுபாடு தோன்றினால் மட்டுமே நான் ஒரு விஷயத்தைச் செய்வேன். அந்த வகையில் எனக்கு அதிக ஈடுபாடு உள்ளதால் ஹோட்டல் தொழிலில் இறங்கினேன். இப்போது எனக்குப் பிடித்த இசைக்கலைஞர் வாழ்ந்த இல்லத்தை என் தொழிலுடன் இணைத்துக் கொண்டிருக்கிறேன்...’’ நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

எல்லாம் சரி... இதற்கு விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா என்ன சொல்கிறார்..?

‘‘என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..? என் முயற்சிக்கு அவர் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று நினைக்கிறீர்களா? நெவர். அனுஷும் கிஷோர் குமாரின் ரசிகைதான். எந்தளவுக்கு கிஷோரை நான் நேசிக்கிறேன், காதலிக்கிறேன், வழிபடுகிறேன் என்பதை என்னை விட அனுஷ் நன்றாக அறிவார். வலது கண்ணின் அவசியத்தை இடது கண்ணால் உணர முடியாதா என்ன..? எல்லாவகையிலும் எல்லாவற்றிலும் எனக்குப் பக்கபலமாக நிற்கும் அனுஷ், இதிலும் என்னுடன் கரம் கோர்க்கிறார்...’’ நெஞ்சை நிமிர்த்தி அழுத்தமாகச் சொல்கிறார்.

கிரிக்கெட்டில் எதையும் வித்தியாசமாகச் செய்து சாதனைகள் படைக்கும் விராட் கோலி, ஹோட்டல் பிசினஸையும் வித்தியாசமாகச் செய்கிறார். ஸோ, இதிலும் அவர் சாதனை படைப்பார் என்று உறுதியாக நம்பலாம்!

என்.ஆனந்தி