COFFEE TABLEகாலன்குழி

கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி எனும் ஓவியர் சமீபத்தில் #KaalanKuzhi என்னும் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறார். 45 வயதான ஜெய்சன், கொச்சியின் பிரபல சாலைகளில் உள்ள குழிகளில் எமன் படத்தை வரைந்து அதை புகைப்படம் எடுத்து முகநூல்களில் பகிர்ந்து வருகிறார்.

எத்தனையோ பேர் இந்தச் சாலைகளின் பள்ளங்களில் விழுந்து மிகப்பெரும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாலும், தன்னுடைய நெருங்கிய வட்டத்திலேயே இப்படியான மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருப்பதாலும் தன்னால் முடிந்த அளவு விழிப்புணர்வு செய்ய வேண்டி இப்படியான ஓவியப் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த ஓவியத்தால், வேகமாக வருவோர் சற்று நிதானித்து அங்கே ஒரு குழி இருப்பதை கவனித்து செல்ல வாய்ப்பிருக்கும். இதனால் மிகச் சில விபத்துகள் தடுக்கப்பட்டால் கூட அது தனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்கிறார் ஜெய்சன் ஆண்டனி.   

டிகாப்ரியோ மரம்

‘டைட்டானிக்’ பட ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ பெயரை ஒரு மரத்திற்கு அதிகாரபூர்வமாக சூட்டியுள்ளனர் லண்டனைச் சேர்ந்த ராயல் தாவரவியல் பூங்கா விஞ்ஞானிகள். கேமரூனிலுள்ள எபோ காட்டில் அழிவின் விளம்பில் இருக்கும் அந்த அரிய வகை மரத்திற்கு ‘உவரியோப்சிஸ் டிகாப்ரியோ’ எனப் பெயரிட்டுள்ளனர். எபோ காட்டில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தது அந்நாட்டு அரசு.

இதை தாவரவியல் விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் கடுமையாக எதிர்த்தனர். ‘‘அந்தக் காட்டிலிருக்கும் அழியும் ஆபத்திலுள்ள விலங்குகளையும், தாவர இனங்களையும் சுட்டிக்காட்டி சர்வதேச நிபுணர்கள் பலரும் அந்நாட்டு அரசுக்குக் கடிதம் எழுதினோம். இந்நிலையில் இதை எதிர்த்து நடிகர் டிகாப்ரியோ தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரசாரம் மேற்கொண்டார். அதன்பிறகு, அரசு மரம் வெட்ட அனுமதிக்கும் திட்டத்தை கைவிட்டது. இதனாலயே அவர் பெயரை முன்மொழிந்தோம்...’’ என்கின்றனர் ராயல் தாவரவியல் பூங்கா விஞ்ஞானிகள்.   

போக்கிரிக் கோள்கள்

வான்வெளியில் நம் பூமியைப் போன்றே எடையும் அளவும் கொண்ட பல்லாயிரம் கோள்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவை எதுவும் எந்த ஒரு சூரியனையும் மையமாகக் கொண்டு சுற்றாமல் தன் போக்குக்கும் இஷ்டத்துக்கும் சென்றுகொண்டிருப்பதால் இவற்றை கோள்களின் பட்டியலில் வைக்காமல் போக்கிரிக் கோள்கள் என்று செல்லமாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பொதுவாக, இந்த போக்கிரிக் கோள்கள் ஏதேனும் ஒன்றிரண்டுதான் கண்ணில்படும். ஆனால், கடந்த வாரம் ஐரோப்பிய தெற்கு வட்டப்பாதை என்ற வானியல் ஆய்வுதளத்தில் விண்ணின் ஒரு பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, எழுபது போக்கிரிக் கோள்கள் நம் பால்வெளியில் உல்லாசமாய் பயணித்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இவை ஒவ்வொன்றுமே நமது வியாழன் கோள் அளவுக்கு எடையிலும் அளவிலும் பெரியவை.

தெளிவான பெரிய வான்நோக்கிகள், இரவிலும் வானைத் தெளிவாகப் பார்க்க உதவும் புறஊதாக்கதிர் வான்நோக்கிகள் ஆகியவை கொண்டு இவற்றின் சஞ்சாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். நமது வானின் இயல்பைப் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவக்கூடும் என்கிறார்கள் பிரான்சின் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் டி போர்டெ என்ற வானியல் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

குங்குமம் டீம்