பழத்தோலில் ஹேண்ட்பேக்!ஜோர்டானியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர் உமர். விதவிதமான உணவு வகைகளைச் சுவையாக சமைப்பதோடு மட்டுமல்லாமல், அதில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அசத்துபவர். சில மாதங்களுக்கு முன்பு கத்தரிக்காயின் தோலில் மாஸ்க் தயாரித்து இன்ஸ்டாகிராமில் வைரலானார். இப்படி காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல்களில் ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்து லைக்குகளை அள்ளுவது அவரது வாடிக்கை. சமீபத்தில் கூட ஆரஞ்சு பழத்தோலில் ஓர் அழகான ஹேண்ட்பேக்கை வடிவமைத்திருக்கிறார் உமர்.

நவீன தொழில்நுட்பம், டிசைனை வைத்துக்கொண்டு சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத ஆடம்பரமான பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இதற்காகத்தான் காய்கறி மற்றும் பழத்தோல்களைத் தேர்வு செய்கிறார். விலங்குகளின் தோலைப் பதனிட்டு பொருட்கள் செய்வது போல ஆரஞ்சு பழத்தோலையும் பல நாட்கள் பதனிட்டு இந்த ஹேண்ட்பேக்கைத் தயாரித்திருக்கிறார். அதனால் சில வருடங்களுக்கு ஆரஞ்சு பழத்தோல் ஹேண்ட்பேக் உறுதியாக இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார் உமர். அடுத்து பழத்தோல்களில் பர்னிச்சர் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் இந்த சமையல் கலைஞர்.

த.சக்திவேல்