வாழையிலை தொன்னை தயாரிப்பவர்கள் இவர்கள் மட்டும்தான்!



‘நெய்க்குத் தொன்னை ஆதாரமா... தொன்னைக்கு நெய் ஆதாரமா..?’ என்பது பழமொழி. தொன்னையில் நெய்யை எடுத்துச் சென்றால் அவ்வளவு ருசியாகவும், மணம் மாறாமலும் இருக்கும். அந்த நெய்யை உணவில் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டால் அந்த உணவின் ருசியே தனியாக இருக்கும்.அப்படிப்பட்ட தொன்னைகள் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் வாழைச்சருகில் தயாரிக்கப்பட்டுவருகின்றன.

இங்குள்ள நரபலி அம்மன் கோயில் தெருவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 100 குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாகத் தொன்னை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராஜபுரம் அக்ரஹாரத்தில் உள்ளவர்கள் கோயில்களில் பூஜைகளுக்கும், திதி கொடுக்கும்போதும் பல்வேறு பொருட்களை வைப்பதற்காக வாழைச் சருகால் தயாரிக்கப்பட்ட தொன்னையைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

தியாகராஜபுரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாழை இலைச் சருகு தொன்னைகள் பார்ப்பதற்குக் கிண்ணம் போல் அழகாகவும், உணவுப்பொருட்கள் கீழே விழாத வகையில் நன்றாக வெயிலில் உலர்த்தி இயற்கை முறையிலும்தயாரிக்கப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற வாழைச் சருகினாலான தொன்னை, கர்நாடகா, ஆந்திரா, திருப்பதி, பழனி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று காரணத்தால் 50 சதவீதம் பேர் மாற்றுத் தொழிலுக்கும், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு வேலைக்கும் சென்றுவிட்டனர். தொன்னை தயாரிக்கும் தொழிலைத் தவிர வேறு மாற்றுத்தொழில் தெரியாத முதியோர், பெண்கள் ஆகியோர் குடிசைத் தொழிலாக இப்போது தொன்னை தயாரிக்கும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

‘‘பரம்பரை பரம்பரையாக பல ஆண்டுகளாக தொன்னை தயாரித்துவருகிறோம். காயவைத்த வாழைச் சருகை வாங்கி வந்து தண்ணீரில் ஊறவைத்து பின்னர் தனித்தனி சருகாகப் பிரித்து பெரிய, சிறிய அளவுகளில் கத்தரித்து அதைக் கிண்ணம் வடிவத்தில் வைத்து தென்னங் குச்சியைக்கொண்டு தைக்கிறோம்.ஓர் இலைக்கு 2 தொன்னைகள் செய்யலாம். ஒரு நாளைக்கு ஒருவர் 2,000 தொன்னைகள் வரை தயார் செய்யலாம்.

தொன்னையை வெயிலில் உலர்த்தி நன்றாகக் காயவைத்தபின்னர் கோயில்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இங்கு தயாரிக்கும் தொன்னைகள் வெளிநாடு மற்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்திலேயே தியாகராஜபுரத்தில் மட்டும்தான் வாழைச் சருகினாலான தொன்னை தயாரிக்கப்படுகிறது...’’ என்கிறார் லதா.

‘‘தொன்னைக்குத் தேவைப்படும் வாழைஇலைச் சருகுகள், ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்திலேயே கிடைத்தன. இப்போது கடலுார் மாவட்டத்தில் மட்டும்தான் கிடைக்கிறது.
ஒரு கட்டு சருகை ரூ.180க்கு வாங்கி வந்து அதைப் பதப்படுத்தி நறுக்கி, இரண்டு வகையாகத் தயாரிப்போம். பின்னர் வெயிலில் உலர்த்தி நன்றாகக் காயவைத்து விற்பனைக்கும், கோயில்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். இப்போது 100 தொன்னைகள் ரூ.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள பெருவணிகர்கள் எங்களிடமிருந்து வாங்கி லாரியில் ஏற்றிச் சென்று மற்ற மாநில, மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். ஒரு மூட்டைக்கு 5,000 தொன்னைகள் என தினந்தோறும் 10 மூட்டையில் 50 ஆயிரம் தொன்னைகள் விற்பனை செய்யப்படுகின்றன...’’ என்கிறார் பக்கிரிசாமி.

‘‘100 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜபுரத்தைச் சேர்ந்த ராசு அய்யர் என்பவர், திதி கொடுப்பதற்காக தேவைப்படும் பல்வேறு பொருட்களை வைப்பதற்காக தொன்னையைப் பயன்படுத்தினார். பின்னர் தொன்னையில் பிரசாதங்களை வைத்து பக்தர்களுக்கு வழங்கினால் கெடுதல் இல்லை என்றும், மணம் மாறாமல், உணவுப்பொருள் கிடைக்கும் என்றும் தொன்னையைத் தயாரித்தார்.

அதன்பிறகு அவரது மகன் குஞ்சு அய்யர், தொன்னை தயாரிப்பில் ஈடுபட்டார். அவர்களின் வீட்டுக்குச் சென்று எங்களின் மூதாதையர்கள் தொன்னை தயாரிக்கும் தொழிலைக் கற்றுக் கொண்டனர். பின்னர் எங்கள் பகுதியில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் தொன்னை தயாரித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தைப் பெருக்கியுள்ளோம். இந்த தொன்னை 5 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது.

தொன்னையில் எந்தவிதமான உணவுப்பொருளை வைத்தாலும் அவை அவ்வளவு சீக்கிரத்தில் கெடாது. வாழைத் தொன்னையில் உணவிட்டு சாப்பிடுவது வயிற்றைக் குளுமைப்படுத்துவதோடு உடல் சூட்டையும் சமப்படுத்தும். கடந்த காலங்களில் குஜராத் மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தியாகராஜபுரத்தில் இருந்து மாதந்தோறும் ஒரு ரயில் வேகன் முழுவதும் தொன்னை அனுப்பப்பட்டுவந்தது...’’ என்கிறார் நடராஜன்.

சி.எஸ்.ஆறுமுகம்