ஒரே நேரத்தில் அழகிப் போட்டியில் வென்ற அம்மாவும் மகளும்!
ஒரு வீட்டில் குடும்பத்தலைவி முதலில் எப்படி தன்னை கவனித்துக் கொள்கிறாரோ அதைப் பொறுத்துதான் வீட்டில் உள்ள மற்றவர்களும் ஆரோக்கியமாகவும் அக்கறையாகவும் தங்களைப் பார்த்துக் கொள்வர்.
 இதற்கு மிகப்பெரும் சான்றாக அருணாவும் அவரது மகள் கிருஷ்ணார்துளு சருயுவும் கெத்து காட்டுகிறார்கள்.ஆம். ஒரே குடும்பத்தில் அம்மா, மகள் இருவரும் கிளாம் ஆன் மிஸஸ் இந்தியா (பிளஸ் சைஸ்) மற்றும் கிளாம் ஆன் மிஸ் இந்தியா என இரண்டு பட்டங்களையும் வென்று திரும்பியுள்ளனர். ஒரே வீட்டில் இரண்டு அழகிப் பட்டங்கள்... வீட்டில் என்ன சொல்கிறார்கள்..? கேட்டவுடன் ஜாலியான சிரிப்புடன் தொடர்ந்தார் அருணா.  ‘‘நான் அருணா.கே. குழந்தைகளின் மூளை செயல்பாடு, மூளைக்கான பயிற்சிகள், மற்றும் கன்சல்டிங் கொடுக்கற ‘கிரேட் பிரெய்ன்ஸ்’ டிரெய்னிங் சென்டருக்கு டைரக்டர் மற்றும் உரிமையாளரா இருக்கேன். என் கணவர் வாசுதேவ் ராவ் ஒரு பிரைவேட் கம்பெனியிலே ஜிஎம். எனக்கு ஒரு பையன், மாயாங்க் மோகன். +1 படிச்சிட்டு இருக்கார். என் பொண்ணு கிருஷ்ணார்துளு மூன்றாம் ஆண்டு சட்டம் படிக்கிறாங்க. ஆக்சுவலி மிஸஸ் இந்தியா போட்டியிலே கலந்துக்கதான் நான் அப்ளை செய்திருந்தேன்.
இதற்கான ஆடிஷன், போட்டிகள் எல்லாம் சென்னையிலே நடந்துச்சு. அங்க நான் கலந்துக்க போனேன். என் பொண்ணும் துணைக்கு வந்திருந்தாங்க. அவங்களைப் பார்த்துட்டு ‘நீங்களும் போட்டிக்குப் பெயர் கொடுக்கலாம்... ஃபிட்டா இருக்கீங்க’ன்னு சொன்னாங்க. அப்படி ஆரம்பிச்சது...’’ என்னும் அருணாவும் அவரது மகளும் போட்டிக்காக தயாரானது பெரிய கதை.
‘‘தினம் தினம் ஆன்லைன், டயட், போட்டிக்கான மீட்டிங், ஜும்பா பயிற்சி, சாப்பாடு முறைகள், நேரங்கள்... இப்படி எல்லாமே எங்களுக்கு கொடுத்தாங்க. ரெண்டு பேரும் கலந்துக்கிட்டு தயாரானோம். என் கணவரும் மகனும் செம சப்போர்ட். போட்டி தாய்லாந்து நாட்டுல நடந்துச்சு. பல கட்ட போட்டிகள், நிறைய சோதனைகள்... எல்லாத்தையும் கடந்து எனக்கு மிஸஸ் இந்தியா (பிளஸ் சைஸ்) கிரீடமும், பட்டமும் கிடைச்சது. சில கேள்விகளுக்கு ரொம்பவே தைரியமா பதில் சொன்னேன். அதனால் ‘வுமன் ஆஃப் வாய்ஸ்’ என்னும் பட்டமும் கொடுத்தாங்க...’’ அம்மா அருணா.கே. முடிக்க, தொடர்ந்தார் மகள் கிருஷ்ணார்துளு சருயு.
‘‘அந்த டைம் எனக்கு எக்ஸாம் வேற! அம்மா என்னையும் சேர்த்துப் பார்த்துக்கிட்டாங்க. 50க்கும் மேலான போட்டியாளர்கள். எனக்கும் அம்மாவுக்கும் நிறைய சவாலான மொமெண்ட்ஸ் இருந்துச்சு. சின்ன வயதில் இருந்தே அம்மா எனக்கு மூளை சார்ந்து நிறைய டிரெயினிங் கொடுத்திருந்தாங்க. அதெல்லாம் ஸ்பெஷல் டேலண்ட்ல காண்பிச்சேன். குறிப்பா கண்களை மூடிக்கிட்டு கலர்களை கண்டுபிடிக்கற திறனைப் பார்த்துட்டு அத்தனை பேரும் சர்ப்ரைஸ் ஆகிட்டாங்க.
அம்மாவுடைய குழந்தைகளுக்கான பயிற்சிகள்ல இதுவும் ஒண்ணு...’’ என்னும் கிருஷ்ணார்துளு, கிளாம் ஆன் மிஸ் இந்தியா ரன்னர் பட்டத்துடன் மிஸ் பெஸ்ட் அறிமுகம், மற்றும் மிஸ் பெஸ்ட் டேலண்ட் உள்ளிட்ட பட்டங்களையும் வென்றிருக்கிறார். ‘‘குடும்பம் முக்கியம்தான். அதைவிட ஒவ்வொரு பொண்ணுக்கும் ஆரோக்கியம் முக்கியம். சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும். நாம நல்லா இருந்தா நம்ம குடும்பம், தானா ஆரோக்கியமா இருக்கும்.
மிச்சமாகுதேனு சாப்பிடுறதுல ஆரம்பிக்கிறதுதான் அத்தனை பிரச்னைகளும். ஒல்லியோ பருமனோ... விஷயம் அது இல்ல. வயதுக்கு மீறின தோற்றத்துலே நாம தெரியாம இருந்தாலே போதும். அதுக்கு ஆரோக்கிய உணவும் சரியான தூக்கமும் அவசியம். நம்ம தின வாழ்க்கையை சுமையா நினைக்கவும் கூடாது; அப்படி இருக்கவும் கூடாது. பிடிச்சதை செய்யுங்க... ஆரோக்கியமா செய்யுங்க. அதற்கு குடும்பங்களும் உதவணும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் அருணா.கே.
ஷாலினி நியூட்டன்
|