அரண்மனை குடும்பம்-40



ஆவேசமாய் வெளிப்பட்ட கணேசன் வெளியே நின்று கொண்டிருந்த அவனது காரில் ஏறிக் கொண்டு காரையும் மிக வேகமாய் கிளப்பிக்கொண்டு போவதில் ஒரு கோபமும் ஆத்திரமும் தெரிந்தது.அதே வேகத்தில் ரத்தியும் தியாவும் கூட அறைக்குள் இருந்து வெளியேறி தங்கள் அறை நோக்கிச் செல்வது தெரிந்தது. ரத்தியின் விழிகளில் கண்ணீர்!
நிதானமாய் கைலாச ராஜாவும், அவர் மனைவி கஸ்தூரியும் வெளியில் வந்து ஹாலில் அமர்ந்தனர். அவர்கள் முகத்தில் வாட்டம்.பீட்டர் என்கிற அந்த தச்சு வேலைக்காரன் பார்ப்பது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே அறைக்குள் தலை குனிந்த நிலையில் பொருமிக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. அருகில் குலசேகர ராஜாவும் சுந்தரவல்லியும் நின்று கொண்டிருக்க, குலசேகர ராஜா மூர்த்தியை ஒரு பார்வை பார்க்க அவன் புரிந்தது போல மெல்ல விலகிச் சென்று அறைக் கதவைத் தாழிட்டு விட்டு வந்தான்.

இப்போது அவர்கள் நான்கு பேர் மட்டுமே அந்த அறைக்குள்... சுந்தரவல்லி விழிகளில் கூட கலக்கம்.“என்னங்க இவ... எப்பப் பார் நம்பள இப்படியே பயமுறுத்தறா. இன்னிக்கு எல்லாம் கெட்டு கணேசனும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசிட்டு கோபமா போயிட்டான். இனி என்னங்க பண்ணப் போறோம்?” சன்னமான விசும்பலுடன் கேட்டாள்.

“இனிமேதான் சுந்தரம் எல்லாமே இருக்கு...’’ என்று தெம்பாகப் பார்த்தார் குலசேகரர்.“என்ன சொல்றீங்க... வெளிப்படையா என் பொண்ணு கழுத்துல ஒரு தாலிய மட்டும் கட்டிடு. அதுதான் இவளுக்கு மருந்துன்னு சொல்லியும் காதுல வாங்கிக்காம, ‘இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தா இந்த வீட்ல நீங்க இனி ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது’ன்னு சொல்லி ஆவேசமா கத்திட்டு வெளிய போய்ட்டான் அந்த கணேசன்.

ஆனா, இனிதான் எல்லாம் இருக்குங்கிறீங்களே! எப்படிங்க..?”

சுந்தரவல்லி நடந்து முடிந்ததைச் சொல்லி கேட்ட கேள்வி முன் பதில் எதுவும் கூறாமல் தன்வசமிருந்த மாரப்ப வாத்தி தந்திருந்த அந்த வசிய மருந்து கொண்ட மரக்குப்பியைக் காட்டினார் குலசேகரர்.

“என்னங்க இது..?”
“வசியக் குளிகை...”
“அய்யோ... இதென்ன புதுசா..?”

“புதுசெல்லாம் இல்ல... கால காலமா இருக்கறதுதான் சுந்தரம்...”அவர் அப்படி சொல்லும் போது மஞ்சுளாவும் நிமிர்ந்து அந்த மரக்குப்பியைப் பார்த்தாள்.
“இதுல இருக்கற வசியக் குளிகையை நம்ம மஞ்சு எப்படியாவது தன் கையால கணேசனுக்கு சாப்பிடக் கொடுத்துடணும். அப்படி கொடுத்துட்டா எல்லா சிக்கலும் நம்ம வரைல தீர்ந்த மாதிரிதான் சுந்தரம்...”“ஏங்க... இதை எல்லாமா நீங்க நம்பறீங்க..?”
“அப்ப நீ நம்பலையா..?”

“கதைலதாங்க படிச்சிருக்கேன்... ஆனா, யாருக்கும் நடந்து பார்த்ததில்லை...”
“இப்ப பார்ப்பே..! கணேசன் வரைல பார்ப்பே..!”“எப்படிங்க அவ்வளவு உறுதியா சொல்றீங்க..? அதுலயும் கணேசன் எப்படிப் பட்டவன்னு உங்களுக்கு நல்லா தெரியும்...”
“தெரிஞ்சுதான் சொல்றேன் சுந்தரம். இல்லேன்னா இதுக்கு பல கோடி கொடுக்க நான் ஒத்துக்கிட்டிருப்பேனா?”“பல கோடியா..?”

‘‘ஆமாம்...’’ என்று ஆரம்பித்த குலசேகர ராஜா, வழுக்குப்பாறை பகுதியில் மாரப்ப வாத்தியையும் ஜல்லி, போதிமுத்துவையும் சந்தித்ததை எல்லாம் விவரமாக சொல்லத் தொடங்கினார்.
தன் அறைக்குள் சிந்தனையோடு வந்து அமர்ந்து விட்டிருந்த ரத்தி, தன் கைபேசியை எடுத்து கணேசனோடு தொடர்பு கொண்டாள்.
“ஜீ...”
“ம்... சொல்லு ரத்தி...”
“எங்க போய்ட்டீங்க..?”
“ஆபீஸ்லதான் இருக்கேன்...”
“எங்களையும் கூட்டிக்கிட்டு போயிருக்கலாம்ல?”

“சாரி... டென்ஷன்ல தோணல. ஏன், நான் வந்ததுக்கு பிறகு உன்கிட்ட வந்து ஏதாவது பேசினாங்களா?”
“இல்ல ஜீ... நானும் விலகி வந்துட்டேன். நான் சொன்னப்ப நீங்க பெருசா எடுத்துக்கல... இப்ப பார்த்தீங்களா..?”
“விடு... அதான் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு என் பதிலை சொல்லிட்டேன்ல?”

“இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்கு ஜீ... உங்கப்பா சும்மா கொஞ்சம் பெரிய மனசு பண்ணுடான்னு உங்ககிட்ட கெஞ்சினத பார்த்தீங்க தானே?”
“அவங்கள விடு... அவங்க அப்படிதான்! நீ வருத்தப்படாதே... எல்லாம் போகப் போக சரியாயிடும்...”
“ஜீ...”

“என்னடா..?”
“நாம தனியா போயிடலாம் ஜீ...”
“நீ இதைத்தான் சொல்வேன்னு எனக்கு நல்லா தெரியும். நிரந்தரமா போறத பத்தி அப்புறம் யோசிப்போம். தற்காலிகமா வேணும்னா நீ முன்ன ஆசைப்பட்ட மாதிரி நம்ம ஏற்காடு பங்களாவுக்கே போயிடலாம்...”
“அது போதும் ஜீ... அது போதும்...”

“ஆனா, அங்க போய்ட்டு நீ அந்த சாமியாரை பாக்கப் போறதெல்லாம் கூடாது...”“ஜீ... அவர் நல்லவர் ஜீ... நம்ம தியாவை நமக்கு மீட்டுக் கொடுத்தவர். அதோட அவர் எங்க நாகவம்சத்துல வந்தவர்...”“நீ அதை எல்லாம் மறக்கலயா ரத்தி..? நீ இப்ப அரண்மனைக் குடும்பத்து மருமக! எங்கம்மாவுக்குப் பிறகு நீதான் ரத்தி எல்லாம்...”

“இப்படி நீங்க சொல்றத கேட்க சந்தோஷமா இருக்கு ஜீ... இவ்வளவு தூரம் என்னை ஒரு ராணியா நினைக்கற நீங்க இந்த ராணிக்கு கொஞ்சம் அவ விருப்பப்படி நடக்கற சுதந்திரத்தை தரக் கூடாதா?”

“விடமாட்டியா... சரி உன் விருப்பப்படியே நடந்துக்க. ஆனா, முட்டாள்தனமா எது ஒண்ணு நடந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்...”

“இல்ல ஜீ... அவர் தெய்வீகமானவர்... நீங்க நினைக்கறமாதிரி தப்பான சாமியார் நிச்சயமா இல்லை...”“சரி ரத்தி... ஒரு ஒருமாசத்துக்கு தேவையான துணிமணியோட தயாராகு. நான் கொஞ்ச நேரத்துல வரேன். நாம் இன்னிக்கே கிளம்பிடலாம்...”கணேசன் சொல்லி முடிக்க ரத்திக்குள் ஒரு பெரும் நிம்மதி. முகத்திலும் உற்சாகக் களை... மளமளவென்று துணிமணிகளை எடுத்து சூட்கேசுக்குள் அடக்க ஆரம்பித்தாள்.

அப்போது அந்த அறைக்குள் நுழைந்திருந்தனர் கைலாச ராஜாவும், கஸ்தூரியும்... அவர்களைப் பார்க்கவும் ரத்தியிடம் ஒரு மரியாதை கலந்த தயக்கம்.
“என்னடி... துணியை எல்லாம் பெட்டில வெச்சுக்கிட்டிருக்கே... எங்க கிளம்பிட்டே?” கஸ்தூரி சற்று தாட்டியமாகவே கேட்டாள்.“மா ஜீ... அது வந்து நாங்க ஏற்காடு கெஸ்ட் ஹவுசுக்கு போய் கொஞ்ச நாள் அங்க இருக்கலாம்னு முடிவு செய்திருக்கோம்...” தயங்கித்  தயங்கி மென்று விழுங்கிப் பேசினாள் ரத்தி.

“ஓ... தனிக்குடித்தனம் போகப் போறேன்னு சொல்...”
“நை... நை... அப்படி எல்லாம் இல்ல...”
“என்ன அப்படி எல்லாம் இல்ல... என் தலையெழுத்து நான் உன்கிட்டல்லாம் வந்து நின்னு பேசும்படி பண்ணிட்டான் என் பிள்ளை. நடந்ததை எல்லாம் பார்த்தேதானே?”
“என்ன சொல்றீங்க மா ஜீ?”

“என்னத்த சொல்ல..? உன் கால்ல வேணா கூட சொல்லு... விழறேன். கணேசன் மஞ்சு கழுத்துல ஒரு தாலிய கட்டச் சொல்... இப்படியே விட்டா ஒரு நா இல்ல ஒரு நா அவ தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போயிடுவாடி... அப்புறம் அது இந்த குடும்பத்துக்கே பெரிய வடுவா மாறிடும்டி...”கஸ்தூரி எதற்காக வந்திருக்கிறாள் என்பது ரத்திக்கு புரிந்து விட்டது. தன் பங்குக்கு கைலாச ராஜாவும் வாயைத் திறந்தார்.“இதனால உனக்கு எந்த பாதிப்பும் வராதபடி நான் பாத்துக்கறேன். இப்பவே கூட எங்க சொத்துல ஒரு பங்கை நாங்க உன்பேர்ல எழுதிட்றோம். இந்த சொத்துக்கும் சுகத்துக்கும்தானே நீ என் மகனை கல்யாணம் செய்துக்கிட்டே?”அவர் கேட்ட கேள்வி ஒரு சுத்தியால் அவள் மண்டையில் ஓங்கி அடித்தாற்போல்
இருந்தது.

“மா ஜீ... நை... நீங்க இப்படி எல்லாம் பேசக் கூடாது... நான் உங்க பையன காதலிக்கவேயில்லை...  அவர்தான் என்னை காதலிச்சார். அப்ப என்ன நடந்ததுன்னுல்லாம் உங்களுக்குத் தெரியாது...”“வேண்டாம்... இப்ப அது தெரிஞ்சி என்னவாகப் போகுது? இவ்வளவு நாள் நாங்க எதாவது பேசியிருப்போமா? இப்ப ஏன் பேசறோம்னு உனக்கும் தெரியும்தானே?
மஞ்சு கணேசனுக்குன்னே பொறந்தவ.

ஆனா, அவனை இடைல பூந்து நீ கொண்டு போயிட்டே... நாங்களும் எங்க மகன் சந்தோஷம்தான் எங்க சந்தோஷம்னு விட்டுக் கொடுத்துட்டோம். ஆனா, அது மஞ்சு வரைல ஒரு மனவியாதியாகி அவளை நோயாளியாவே ஆக்கும்னு எதிர்பார்க்கலியே... இப்ப என்னடான்னா அது தற்கொலை வரைலல்ல போய் நிக்குது...”கஸ்தூரி இப்படி எல்லாம் பேசி ரத்தி பார்த்ததேயில்லை.

“இதோ பார்... கணேசன் வந்தா அவன்கிட்ட சொல்லி மஞ்சு கழுத்துல ஒரு தாலிய கட்டவை. நீ நினைச்சா முடியும். எங்களுக்கு அந்த பொண்ண கொன்ன பாவம் வந்து சேர வேண்டாம்...”
கைலாச ராஜா தன் பங்குக்கு பேசியதை அறைக்கு வெளியே பார்த்தபடியே கடந்து கொண்டிருந்தாள் மஞ்சு.அவளுக்குள் இப்போது ஒரு புது நம்பிக்கை. ஒரு புறம் கைலாச ராஜாவும், கஸ்தூரியும்... மறுபுறம் வசியக் குளிகை... ஒரே சமயத்தில் இரண்டு முயற்சிகள்... நிச்சயம் இதில் ஒன்று வென்று விடும் என்றும் அவளுக்குள் தோன்றியபோது உள்ளே ரத்தி மயங்கி விழுந்திருந்தாள்.

அதைத் தொடர்ந்து ஒரே பரபரப்பு... படபடப்பு! கணேசனும் போன வேகத்தில் திரும்பியிருந்தான். அவனைப் பார்க்கவும் எல்லோருமே கப்சிப்! கணேசன் ரத்தி முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தான்... மெல்ல கண் விழித்தாள். அப்படியே வாந்தியும் எடுக்கத் தொடங்கினாள். பதிலுக்கு கஸ்தூரியிடம் ஒரு பகீர் உணர்வு!

(தொடரும்)

கிரகண பூஜையை அசோகமித்திரன் பார்த்ததாக கனபாடிகள் சொன்ன மறுநொடி அதிர்ந்து கனபாடிகளைப் பார்த்தார் வைத்தியர் ஞானமணி தேசிகர்.
“என்ன பாக்கறேள்..?”

“இல்ல... கிரகண பூஜை பத்தி இவருக்கு எப்படித் தெரியும்? நீங்க சொன்னீங்களா?”
“நான் சொல்லல... அவரா கிரகண சமயத்துல வெளிய போனப்ப தற்செயலா பாத்திருக்கார்...”
“அய்யோ... அந்த சமயத்தில் வெளியில நடமாடினாரா?”“ஆமாம்... கிரகணத்தின் போது வீட்டுக்குள்ள அடங்கிஇருக்கறத அவர் மூட நம்பிக்கையா நினைக்கறார்.

சுருக்கமா சொன்னா, கண்ணால பாக்க முடியணும் - இல்ல கருத்தால பளிச்சின்னு உணர முடியணும்... அப்படி இல்லாத எல்லாமே மூடநம்பிக்கைங்கற இடதுசாரி சிந்தனையாளராத்தான் அவர் எனக்கு தெரியறார்...”“நீங்க நேர் எதிரானவராச்சே... எப்படி இவர் கூட உங்களால சகஜமா பழக முடியுது..?”“அடிப்படைல ஒரு நேர்மை அவர்கிட்ட இருக்கு. இலக்கிய உலகத்துல அவருக்கு ஒரு நல்ல பேரும் இருக்கு. பரஸ்பரம் பழக இது போறாதா தேசிகரே..?”“அது சரி... இங்க வந்து அவர் எதையாவது உணர்ந்தாரா?”

“நம்ம கோயில்ல கிரகண வேளைல நாகம் வந்து பூஜை செய்யும்கற விஷயம்தான் அவர் இங்க வரவே காரணம். ஆனா, அது நடக்கலை. பதிலுக்கு கிரகண பூஜையை பாக்கற வாய்ப்பு அவருக்கு கிடைச்சது. அதோட மண்ணாங்கட்டி சித்தரோட தரிசனமும் கிடைச்சிருக்கு. அவர் கூட பேசியிருக்கார். நம்ம நாடி ஜோசியர் சொன்ன மாதிரி, நாடிப்படி, உயிருக்கு கண்டம் வந்து அது நீங்கியும் போச்சு. இனி அவருக்கு என்ன நடக்கும்... அவர் எப்படி நடந்துப்பார்னு நாம பாத்துதான் தெரிஞ்சிக்கணும்...”கனபாடிகளின் விளக்கம் ஞானமணி தேசிகரை மௌனமாய் நெடுநேரம் சிந்திக்க வைத்தது.

“இன்னும் என்ன சிந்தனை?”
“ஆமா இவரோட நோக்கம்தான் என்ன?”“உங்கள இவரோட பாக்க வந்தப்பவே சொன்னேனே..? எவ்வளவோ ஜீவ ராசிகள் இருக்க பாம்புகளை மட்டும் ஏன் எல்லா தெய்வங்களும் தங்களோட வெச்சிண்டிருக்கு..? நாமளும் பயபக்தியோட அதை ஏன் வணங்கறோம்..? இதுதான் அவர் ஆராய்ச்சியோட அடிநாதம்...”“இவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?”“இருக்கற மாதிரி எனக்குத் தெரியல. அதே சமயம் கடுமையான ஒரு நாத்திகனாவும் என்னால இவர பார்க்க முடியல...”“ஜாதகத்துல கேது நீசமாகி, பூர்வ புண்யஸ்தானமும் பலவீனமா இருக்கணும்.

இப்படி ஒரு அமைப்பு இருந்தாதான் இவங்க இப்படி எல்லாம் நடந்துப்பாங்க...”“நாடிலதான் எல்லாம் இருக்குமே வைத்யரே...”“அப்படின்னா நம்ம நாடி ஜோதிடர் கற்பக விநாயகத்தைப் பார்த்து அவர்கிட்டதான் நீங்க கேக்கணும்...”“அவர் சொன்னபடியே எல்லாம் நடந்திருக்கு... அதனால இவரே அவரை சந்திக்க ஆசைப்படுவார்னுதான் நான் நம்பறேன்...”கனபாடிகள் சொல்லும்போது படுத்திருந்த நிலையில் இருந்து எழுந்திருந்தவராக அசோகமித்திரன் அந்த மருத்துவ மனையின் வெளியில் உள்ள மரத்தடிக்கு வந்து நின்றார்.
ஒரு பெரும் புங்கை மரத்தின் நிழலில் இப்போது அவர்கள் மூன்று பேரும் இருந்தனர்.

“வாங்கோ... இப்ப எப்படி இருக்கு..?” கேட்டார் கனபாடிகள்.“கொஞ்சம் சோர்வா இருக்கு. மற்றபடி பெருசா ஒண்ணுமில்ல...”“உங்களப் பத்திதான் பேசிண்டிருக்கோம்... நாம் நாளைக்கு சென்னை திரும்ப முடியாது. நாலு நாள் இங்க இருந்து நீங்க வைத்யம் பாத்துக்கணுமாம். வைத்யர் சொல்லிட்டார்...”“அப்படியா..?” என்கிற வியப்போடு அசோகமித்திரனும் வைத்யர் ஞானமணி தேசிகரைப் பார்த்தார்.“ஆமாங்க... விஷக்கடி வைத்யம் கொஞ்சம் பத்தியமானது. நுட்பமானதும் கூட. நாலு நாள் தினமும் வந்துட்டு போங்க... அப்புறம் நான் கொடுத்த மருந்தை சாப்பிட்றீங்களா?”

“சாப்பிட்றேன்... பெரிய மாற்றத்தையும் உணர்றேன். முன்ன சிறு நீர் கழிக்கைல ஒரு சூட்டை உணருவேன். இப்ப அப்படி இல்ல...”“நல்ல மாற்றம்... மருந்து நல்லா வேலை செய்யுதுன்னு அர்த்தம்...”“ஆமா... உங்களுக்கும் ரொம்ப நன்றி. இப்ப என் உயிரைவேற காப்பாத்தி இருக்கீங்க...”“உங்களுக்கு ஆயுசு கெட்டி. அதான் கண்டம் கடந்திருக்கீங்க. ஒரு மணி நேரம் தாமதமா வந்திருந்தாலும் உங்கள காப்பாத்தியிருக்க முடியாது. அப்படியே பொழச்சிருந்தாலும் காது கேட்காம போயிருக்கும். கெட்டதுலயும் ஒரு நல்லதும்பாங்களே... அது இதுதான்...”
வைத்யர் சொல்லிச் சிரித்தார்.

“இங்க நடக்கற எல்லாமே என் வரைல விசித்திரமான அனுபவங்கள்தான். நான் நினைச்ச மாதிரியோ, இல்ல இயல்பாவோ ஒரு விஷயம் கூட நடக்கல. ஒரு பக்கம் ஆச்சரியம், இன்னொரு பக்கம் குழப்பத்துல நான் இருக்கேன்...”“எங்க நாடி ஜோசியரை பாருங்க... உங்கள அக்கு வேற ஆணி வேறா பிரிச்சுப் போட்டுடுவாரு. குழம்பறது நல்லதுதான்... அப்பதான் துல்லியமா தெளியமுடியும்...”வைத்யர் பதிலுக்குள் ஊசியும் இருந்தது, உண்மையும் இருந்தது.

“சரி... அப்ப நான் இப்ப போய்ட்டு நாளைக்கு வரேன்...” என்ற அசோகமித்திரன், “அய்யா... இந்த நாலு நாளும் நான் உங்க வீட்லதான் தங்கணும். என்னால உங்களுக்கும் சிரமம்...” என்று கனபாடிகளைப் பார்த்தார்.“அப்படியெல்லாம் இல்ல... எனக்குள்ளேயும் இப்ப ஒரு சுவாரஸ்யம் உருவாகியிருக்கு. உங்க மூலம் பல புதிய விஷயங்களை நான் தெரிஞ்சிக்கப் போறேன்னு நினைக்கறேன். சுருக்கமா சொல்லப்போனா, இந்த நிமிஷத்துல இருந்து கழியப் போற நாலு நாட்களும் உங்க வாழ்க்கைல மட்டுமில்ல, என் வாழ்க்கைலயும் முக்கியமான நாட்கள்னு நான்
நம்பறேன்.

சர்ப்பங்கள் பற்றிய பல புதிய செய்திகளையும் நுட்பங்களையும் நாம் நிச்சயம் தெரிஞ்சிக்கப் போறோம்னும் நான் நம்பறேன்...” என்றார் கனபாடிகள்.அசோகமித்திரனிடம் அதற்கு எந்த மறுப்புமில்லை. அப்படியே யதார்த்தமாய் வெளியே தெருவைப் பார்த்தபோது அசோகமித்திரனையே பார்த்தபடி தெருவைக் கடந்து கொண்டிருந்தார், தென்னந்தோப்பில் அன்று அதிகாலையில் அசோகமித்திரன் சந்தித்த அந்த மண்ணாங்கட்டிச் சித்தர்!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி