Pan India படங்களின் தமிழ் டயலாக் ரைட்டர் இவர்தான்!
கே.ஜி.எஃப், சாஹோ, இரட்சன், ஷியாம் சிங்கா ராய், ஆதிபுருஷ்
சினிமா உலகில் கீழப்பழுவூர் கணேசன் - ராஜம் மகன் அசோக்கை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சினிமாக்காரர்கள் சுருக்கமாக கே.ஜி.ஆர்.அசோக் என்று அழைக்கிறார்கள்.
இவருக்கு இயக்குநர், டப்பிங் டைரக்டர், டயலாக் ரைட்டர், நடிகர், பாடலாசிரியர்... என்று பல முகங்கள் உண்டு.
 இந்திய சினிமாவைப் புரட்டிப்போட்ட ‘கே.ஜி.எஃப்’ படத்தை தமிழாக்கம் செய்தவர். பிரபாஸின் ‘சாஹோ’, நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’ படங்களுக்கும் இவர்தான் வசனம். விரைவில் வெளிவரவுள்ள பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’, சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’, சமீபத்தில் வெளியான நாகார்ஜுனாவின் ‘இரட்சன்’ படங்களுக்கும் இவருடைய பேனா முனைதான் அழகு சேர்த்தது. குக்கூ டப்பிங் நெஸ்ட் ஸ்டூடியோவில் சிரஞ்சீவியின் குரல் உச்சரிப்பை சரிபார்த்துக் கொண்டிருந்தவரை சந்தித்தோம்.  எப்போது சினிமாவுக்கு எழுத ஆரம்பித்தீர்கள்?
சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர். சினிமா ஆர்வத்தால் வந்து சேர்ந்த இடம் ஆழ்வார்பேட்டை. கமல் சாரிடம் ‘ஹேராம்’, ‘ஆளவந்தான்’, ‘விருமாண்டி’ வரை உதவியாளராக ஒர்க் பண்ணினேன். கமல் சாரிடமிருந்து வெளியே வந்த பிறகு ‘ஆயுள்ரேகை’ என்ற டிஜிட்டல் மூவியை பரீட்சார்த்த முறையில் இயக்கி தயாரித்தேன். அதே சமயத்தில் கமல் சார் ‘மும்பை எக்ஸ்பிரஸை’ டிஜிட்டலில் எடுத்தார். என்னுடைய படம் வணிக ரீதியாக சரியாகப் போகவில்லை. பெரிய நஷ்டத்தை சந்தித்தேன்.
 வாழ்வாதாரத்துக்காக லியோ விஷன் சினிமா கம்பெனியில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகச் சேர்ந்தேன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’, ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘அண்டாவ காணோம்’ போன்ற படங்களில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராக வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் எதற்காக வந்தோம் என்ற சிந்தனை அதிகமானது. அதே சமயத்தில் என்னுடைய பொருளாதாரத் தேவையும் நார்மல் நிலைக்கு வந்தது. அந்த சமயத்தில் வந்த வாய்ப்புதான் ‘கே.ஜி.எஃப்.’. அந்தப் படத்துக்குப் பிறகு ‘கே.ஜி.எஃப்’ ரைட்டர் என்ற அடையாளம் கிடைத்தது.
‘கே.ஜி.எஃப்’, ‘காட்ஃபாதர்’, ‘ஆதிபுருஷ்’ போன்ற பெரிய படங்களுக்கு வசனம் எழுதும்போது முதன்மையாகத் தோன்றும் விஷயங்கள் என்னவாக இருக்கும்?
டப்பிங் படம் என்பது ஓர் இயக்குநரின் மொழி மாற்றம். அதில் வசனம் மட்டுமே முக்கியமாக இருக்காது. என்ன மாதிரி குரல் இருக்கணும், பாடி அமைப்பு எப்படி இருக்கணும், டப்பிங் கலைஞர் எப்படி பேசணும், பேசுவது திரையில் இருக்கும் உருவத்துடன் சரியாக பொருந்திப் போகணும், திரை பிம்பத்துக்கு தகுந்த குரல் இருக்கணும், சரியான உச்சரிப்பு... என்று பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெறுமனே ஒரு ரைட்டராக வசனம் எழுதுவதாக இருந்தால் எழுதி முடித்துவிடலாம். ஒரிஜினல் டைரக்டர் என்ன ஃபீல் பண்ணி எடுத்தாரோ அதை அனலைஸ் பண்ணி யார் யாருக்கு எந்த மாதிரி குரல் கொடுக்கணும், உச்சரிப்பு எப்படி இருக்கணும் என்று ஜட்ஜ் பண்ணத் தெரிந்திருக்கணும். அப்போதுதான் ஒரிஜினல் ஃபீல் கிடைக்கும்.
இரண்டாவது,பார்வை... மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் என்ன சேர்க்கணுமோ அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன்னா, மூல மொழிக்கும் நம்முடைய மொழிக்கும் கலாசாரம், வார்த்தைகள் என பல மாற்றங்கள் இருக்கும். அதை கவனித்து தமிழ் ஆடியன்ஸுக்கு ஏத்தமாதிரி மாத்தி அமைக்க தெரிஞ்சிருக்கணும்.
வசனம் எழுதுவதற்கு முன் நீங்கள் பணியாற்றும் படக்குழுவைச் சேர்ந்த நடிகர், இயக்குநரிடம் விவாதிக்கும் வழக்கம் உண்டா?
இல்லை. ஒரிஜினல் வெர்ஷன் முடிந்ததும் படத்தை என்னிடம் கொடுத்துவிடுவார்கள். என்னுடைய டேபிளுக்கு வந்தபிறகு படத்தைப் பார்த்துவிட்டு வசனம் எழுத ஆரம்பித்துவிடுவேன். சில இயக்குநர்கள் படத்தைப் பற்றிய அபிப்பிராயம் கேட்பார்கள். சில இடங்களில் ஊர் பேர் மாத்த வேண்டிய சூழ்நிலை இருந்தால் அதை முன்கூட்டியே அவர்களிடத்தில் விளக்கம் கேட்டு அதற்குத் தகுந்த மாதிரி முடிவு செய்வேன்.
மத்தபடி எனக்கான சுதந்திரம் முழுமையாக இருக்கும்.எந்த நடிகருடைய படத்துக்கு வசனம் எழுதுவது சவாலாக நினைக்கத் தோன்றும்?
உண்மையைச் சொல்வதாக இருந்தால் என்னுடைய வேலை படம் பார்த்து எழுதுவது. பார்க்காமல் எழுதுவதுதான் சவால். இதுவரை எதையும் சவாலாகப் பார்த்ததில்லை. டப்பிங் படம் என்பது ஒரு பில்டிங் மாதிரி. அதற்கு எந்த வர்ணம் பூசினால் பொருத்தமாக இருக்கும் என்பதுதான் என்னுடைய வேலை. சுவாரஸ்யத்துக்காக பில்டிங் வாசலை அலங்கரிக்கும் விதமாக தோரணம் கட்டுவது, வாழை மரம் வைப்பது மாதிரியான சின்னச் சின்ன நகாசு வேலைகள் என்னுடையதாக இருக்கும்.
பஞ்ச் டயலாக் எப்படி இடம் பெறுகிறது என்று கேட்டால், நம்மையும் அறியாமல் அதுவாக வந்து விழும். பெரிய நடிகர்களுக்கு ஒருவித அழுத்தம் காரணமாக, தானாகவே பஞ்ச் டயலாக் வரும். பஞ்ச் என்பது பவர்ஃபுல்லான விஷயம். ‘கே.ஜி.எஃப்’ல ‘நிழல்கள்’ ரவி சார் டயலாக் எல்லாம் அந்த ரகமே.ஒலி, ஒளி இரண்டும் முக்கியம். ரேடியோவுல ஒலிச்சித்திரம் கேட்டு ரசித்தோம். ஆனா, ‘பேசும் படம்’ மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆடியோ மிக முக்கியம்.
இயக்குநர் என்ன தேவை என்பதை சொல்லிவிடுவார். அதை செய்து முடிக்குமளவுக்கு இயக்குநருக்கான அறிவு வசனம் எழுதுபவருக்கும் இருக்கணும். பெரிய இயக்குநர் படம் என்று வரும்போது அவர்களே விஷயம் வைத்திருப்பார்கள்.
நான்கு பாயிண்ட் இருந்தால் நம்மால் எட்டு பாயிண்ட் வைக்க முடியும். வாய்ப்பு இருந்தால் அங்கு பன்ச் போட்டுவிடுவோம். அதுதான் ஆடியன்ஸை மகிழ்விக்கும். டப்பிங் படம் என்று தெரியாமல் இருப்பதுதான் வெற்றி. என்னுடைய டார்கெட் படம் கிடையாது. மக்கள் அதை தமிழ்ப் படமாக பார்க்கிறார்கள் என்பதில்தான் என்னுடைய வெற்றி அடங்கி இருக்கிறது.
நேரடிப் படம் என்ற உணர்வு வருவதற்கு என்ன முயற்சிகள் இருக்கிறதோ அதை அனைத்தையும் யூஸ் பண்ணுவேன். லிப் மேட்ச் பண்ணி கன்டன்ட் கொண்டுவருவது பெரிய சவால். டப்பிங் படம் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்குள் மிகப் பெரிய வேலைப்பாடுகள் இருக்கிறது. டப்பிங் ரைட்டர் என்பவர் இரு மொழியையும் இணைக்கும் ஒரு பாலம்.
எந்த ஜானர் படங்களுக்கு ஆர்வத்துடன் எழுதப் பிடிக்கும்?
டப்பிங்ல எனக்கு எல்லா ஜானரும் பிடிக்கும். ஓர் இயக்குநரா என்னுடைய ரசனை வேறு. நான் எல்லா ஜானரையும் ரசிப்பவன். எந்த மொழி கொடுத்தாலும் நான் பண்ணுவேன். படம் ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
‘ஆதி புருஷ்’ வேலைகள் எந்தளவில் இருக்கிறது?
இந்த மாத இறுதியில் டப்பிங் ஆரம்பிக்கப் போகிறோம். பான் இந்தியா படமாக வெளிவரவுள்ளது. டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் இன்னும் கைக்கு வரவில்லை என்பதால் படத்தைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.பான் இந்தியா படங்களில் வேலை செய்யும்போது அந்த இயக்குநர்களுடன் எந்தளவுக்கு இணைந்து வேலை செய்ய முடிகிறது?
இந்த வேலையை இவரிடம் கொடுத்தால் சரியாக இருக்கும் என்ற இடத்தில் நான் முன்னிலையில் இருக்கிறேன். அந்த நம்பிக்கைக்கு நியாயம் செய்யும் விதத்தில் என்னுடைய வேலை இருக்கும்.
இப்போது டப்பிங் படங்களுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?
டப்பிங் படம் என்பது மிகவும் லாபகரமானது. 100 கோடியில் எடுக்கப்படும் ஒரு தெலுங்குப் படத்தை தமிழில் டப் பண்ணும்போது 25 லட்சம் செலவாகும். வாங்கிய விலைக்கு மேல் பல மடங்கு ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் என்று லாபம் பார்க்க முடியும். அதனால்தான் இன்று எல்லோரும் பான் இந்தியா கான்சப்ட்டுக்குள் வருகிறார்கள். குறைந்த முதலீடு. அதிக லாபம்.
பான் இந்தியா கான்சப்ட் பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளது.
டப்பிங் கலைஞர்கள் பெரிய உழைப்பு தருகிறார்கள். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவர்கள் வேற்று மொழியை தமிழ் மொழியாக மாற்றுகிறார்கள். அந்த விஷயத்தில் நம்ம ஆட்கள் கில்லி. லிப் மூவ்மெண்ட்டை அப்படியே பிடித்துப் பேசுவார்கள். வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்ஸ் பங்களிப்பு முக்கியமானது. டப்பிங் கடினமான பணி. ஒரு படத்தில் கால்வாசிப் பங்கு டப்பிங்கில் இருக்கிறது. உங்கள் வேலைக்கு பாராட்டு எப்படி இருக்கும்?
என்னுடைய ஒர்க் எல்லாருக்கும் பிடிக்கும். யஷ், நாகார்ஜுனா எல்லாரும் அன்போடு பேசுவார்கள். அசோக்கிடம் கொடுத்தால் நல்லா பண்ணுவார் என்ற பேர் இருக்குன்னு நினைக்கிறேன்.
மீண்டும் படம் இயக்கும் ஐடியா இருக்கிறதா?விரைவில் அதற்கான வேலைகளை ஆரம்பிக்கப் போகிறேன். வாழ்க்கையில் பல கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன். எங்கு ஆரம்பித்தேனோ அங்கே போகணும். அதுக்குதான் நான் சென்னைக்கு வந்தேன்.
நடிப்பதை நிறுத்திட்டீங்களா?
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ நாகராஜ் கேரக்டர், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் வரும் மளிகைக்கடைக்காரர் கேரக்டரும் பெரிய ரீச். மீம்ஸ் உலகில் இன்னும் பிரபலம். என்னமோ தெரியல மக்கள் என்னை அடையாளம் கண்டு ‘நாகராஜ் அண்ணே’ என்று அழைப்பார்கள். திரைக்குப் பின்னால் எவ்வளவு வேலைகள் செய்தாலும் தெரியாதவர்களை திரைக்கு முன்னால் சில நிமிடங்கள் வந்தாலும் உலகம் போற்றுகிறது.
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|