
பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்சில் கண்டக்டராக இருந்த காலத்திலிருந்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் 41 ஆண்டு கால நண்பர் ராஜபஹதூர். பெங்களூர் சாம்ராஜ்பேட்டையில் வசித்து வரும் அவரை சந்தித்தபோது, ‘‘இப்பதான் ரஜினியைப் பார்த்துட்டு வர்றேன்’’ என்று உற்சாகமாக ஆரம்பித்தார்.
‘‘ரஜினி எப்பவுமே தன்னோட உடல்நலத்தை பார்த்துக்கறதுல ரொம்ப அக்கறையா இருப்பார். அப்படிப்பட்டவருக்கு உடம்புக்கு முடியாம போனதைக் கேள்விப்பட்டு துடிச்சுப் போனேன். அவருக்கு எப்படி இந்த நிலைன்னு எனக்குப் புரியலை. பதற்றத்தோடதான் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குப் போனேன். பெரிய பெரிய பிரபலங்களே ரஜினியைப் பார்க்கறதுக்கு முடியாமப் போன அந்த நேரத்துல, நான் வந்திருக்கற தகவல் ரஜினிக்குப் போச்சு. உடனே ரஜினி என்னை பார்க்க விரும்புவதாகச் சொன்னதுல டாக்டர்களுக்குக்கூட ஆச்சரியம். அவர் ஆஸ்பத்திரியில இருந்தப்ப சில நாட்கள் கூடவே இருந்தேன். அந்தக் கஷ்டமான நேரத்துல நானும் கூட இருந்து தவிக்கறதைப் பார்த்துட்டு, அவர்தான் என்னை பெங்களூருவுக்குத் திரும்பிப் போகச் சொன்னார். அதுக்கப்புறம் சிங்கப்பூருக்கு அவர் சிகிச்சைக்குப் போயிட்டு திரும்பி வந்ததும் போய்ப் பார்க்க முடிஞ்சது. அவர் குடும்பத்தினர் தவிர வெளிநபர்களில் அவரை இப்போது போய் சந்திக்க முடிஞ்சது நான் மட்டும்தான். எங்க நட்பு அப்படிப்பட்டது’’ என்று பெருமை பொங்கச் சொல்கிறார் ராஜபஹதூர்.
‘‘தினமும் ஒரு தடவையாவது நாங்க போன்ல பேசிடுவோம். சின்ன வயசுல ரஜினி படிச்சது, வளர்ந்தது எல்லாமே பெங்களூரு கவி கங்காதேஸ்வரர் கோயிலைச் சுற்றி இருக்கற இடத்துலதான். சூப்பர்ஸ்டார் ஆன பிறகும் அடையாளம் தெரியாத கோலத்துல இந்தக் கோயில் பக்கத்துலதான் அவர் வலம் வருவார். அவர் பூரண குணமடையணும்னு அந்தக் கோயில் பிரசாதத்தோடதான் இந்தமுறை போய்ப் பார்த்தேன். ‘உடம்பு ரொம்ப மோசமா இருந்தப்ப ரெண்டு வாரம் கிட்டத்தட்ட நடக்கவே முடியாம கஷ்டப்பட்டேன். திரும்பவும் இயல்பா நடக்க முடியுமாங்கற கவலையும் வந்துச்சு’ன்னு ரஜினி என்கிட்ட சொன்னார். எனக்கேகூட ஆரம்பத்துல மருத்துவமனையில அவரைப் பார்க்கறப்ப பயமா இருந்துச்சு. ஆனா அதை அவர்கிட்ட சொல்லலை.
இப்போ பார்த்தபோது எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. அதே பழைய ஸ்டைலோட அவர் நடக்கறார். இயல்பா பேப்பர் படிக்கறார்; டி.வி பார்க்கறார்; ஜாலியா அரட்டை அடிக்கறார்; பேரக் குழந்தைகளோட விளையாடறார். இதுக்கு இடையில தினமும் டாக்டர்கள் ஒரு தடவை வந்து அவரை பரிசோதிச்சிடறாங்க.
சிங்கப்பூர்ல சிகிச்சை எடுத்து முடிஞ்சதும், ‘மூணு மாசம் கண்டிப்பா ஓய்வா இருக்கணும்’னு டாக்டர்கள் அவர்கிட்ட சொல்லியிருக்காங்க. அந்த ஓய்வுக்காலம் முடிஞ்சதும் கண்டிப்பா ‘ராணா’ படத்தில் நடிப்பார். அதுல எந்த சந்தேகமும் இல்லை. எனது நண்பரின் உடலில் மாற்றம் வந்தாலும், உள்ளத்திலும், நடிப்பிலும், ஸ்டைலிலும் எந்த மாற்றமும் ஏற்படாது. ராணா படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பைக் காட்டிலும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்துவார். பாசம் காட்டுவது, கொடுத்த வேலையை முடிப்பது உள்பட பல விஷயங்களில் ரஜினிக்கு இணையாக யாரையும் ஒப்பிட முடியாது. அவரோட மன உறுதியும், ரசிகர்களோட பிரார்த்தனையும்தான் அவரை திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவந்திருக்கு’’ என்று உணர்ச்சிவசப்பட்ட ராஜபஹதூர், இறுதியாக தன் எதிர்பார்ப்பைச் சொன்னார்...
‘‘ரஜினி எப்போது பெங்களூர் வந்தாலும் என் வீட்லதான் சாப்பிடுவார். நண்பர்களோட சேர்ந்து தர்மஸ்தலா, மந்திராலயா ராகவேந்திரர், குக்கே சுப்ரமணியா, கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணர்னு பல கோயில்களுக்கு போவோம். பழையபடி அவர் அப்படி வர்றதுக்குக் காத்திருக்கேன்!’’
ஏ.வீ.மதியழகன்
படங்கள்: வி.வெங்கடேசன்