‘தங்கம்’ தொடரில் நடிக்கிற ஜோதியிடம் பேசும்போது கையில் தமிழ் டிக்ஷனரி இருப்பது பாதுகாப்பு! அரை மணி நேரம் பேசினாலே, தாய்மொழி மறந்து போகிறது நமக்கு!
‘‘மதர்டங் தெலுங்கு. நடிக்க ஆரம்பிச்சது ராடன் டி.விக்காக ஒரு தெலுங்கு சீரியல்ல. அஞ்சே நாள்தான் வேலை. ரொம்ப ஈஸியா இருந்துச்சு. நடிப்புன்னா இவ்ளோ ஈஸியானு எனக்கு இன்ட்ரஸ்ட் அதிகமாயிருச்சு. அடுத்து தமிழ்ல கேட்டாங்க. சன் டி.வில ‘சொர்க்கம்’ சீரியல்... தமிழ் பேசி நடிக்கணும்னு வந்தப்பதான், அது எவ்ளோ பெரிய ரிஸ்க்னு தெரிஞ்சது. எப்டியோ சமாளிச்சிட்டேன்.
‘தங்கம்’ல வெயிட்டான கேரக்டர். எப்படா ஷூட்டிங் வரும்னு எதிர்பார்க்க வைக்கிற அளவுக்கு சூப்பரான யூனிட் அது. ‘தங்கம்’ நடிக்க ஆரம்பிச்சதும்தான் ஓரளவுக்கு தமிழ் கத்துக்கிட்டேன். ரம்யா கிருஷ்ணன் மேடம், விஜயகுமார் சாரெல்லாம் நடிக்க மட்டுமில்லாம, தமிழ்ல பேசவும் கத்துக் கொடுப்பாங்க. எந்தத் தமிழுக்குப் பயந்தேனோ, இப்ப அதே தமிழ்ல நல்லா பேசக் கத்துக்கிட்டேன்.
‘தங்கம்’ல கமிட் ஆன புதுசு... அப்ப எனக்கு தமிழ் அவ்ளோ நல்லா வராது. ‘ஆயக்குடி’ங்கிற வார்த்தையை வேற மாதிரி சொல்லிட்டேன். மொத்த யூனிட்டும் விழுந்து விழுந்து சிரிக்க, அப்புறம்தான் நான் சொன்னதோட அர்த்தம் தெரிஞ்சது. இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது...’’ & விடாமல் சிரிக்கிற ஜோதி, ‘வில்லு’, ‘வல்லக்கோட்டை’ படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார்.
‘‘ஹீரோயினா நடிக்கக் கேட்கறாங்க. கிளாமர்னா எனக்கு அலர்ஜி. எங்க போயிடப் போகுது சினிமா? இப்பத்தானே வந்திருக்கேன். இதைவிட்டுப் போறதுக்குள்ள என் ஆசைப்படி ஒரே ஒரு படமாவது பண்ணிடுவேன்...’’ & சவாலாகச் சொல்கிறவரின் தங்கச்சி ஸ்ரீஷாவும் சீரியல் நடிகை!
‘‘எனக்கப்புறம் நடிக்க வந்து, என்னையவிட நல்லா தமிழ் கத்துக்கிட்டா. ரெண்டு பேரும் வீட்ல இருந்தா, ஏதாவது சண்டையை ஆரம்பிச்சு வச்சுட்டு, பல்லியைத் தூக்கி என் மேல போட்டுட்டு, எஸ்கேப் ஆயிடுவா!’’
அடக்கடவுளே... அது பல்லி இல்லம்மா... பழி!
நான் ஓஹோதான்!
‘நாதஸ்வரம்’ தொடரில் நடிக்கிற ரோகிணிக்கு கோயம்புத்தூர். அங்கேயே எம்.எஸ்சி. ஐடி படிக்கிறார்.
‘‘கோயம்புத்தூர்ல லோக்கல் சேனல்ல காம்பியரிங் பண்ணிட்டிருந்தேன். ‘நாதஸ்வரம்’ ஆடிஷன்ல செலக்ட்டாகி, நடிகையாயிட்டேன். ஒரே சீரியல்ல ஓஹோனு பிரபலமாயிட்டேன். தேங்க்ஸ் டூ திருமுருகன் சார்...’’ என்கிறவர், சீரியலில் தன்னைக் கடத்தும் காட்சியில் வாங்கிய செமத்தியான அடியை காலத்துக்கும் மறக்க மாட்டார் போல!
‘‘அம்மா&அப்பாகிட்டகூட அடி வாங்கினதில்லை. என்னைக் கடத்திட்டுப் போறப்ப நான் தப்பிச்சு ஓடி, மாட்டற அந்த சீன்ல, யதார்த்தமா இருக்கணும்னு என்னை அடிக்கிற மாதிரி ஷாட். க்ளோசப்ல வச்சதால நிஜமாவே செம அடி... ஒரு வாரத்துக்கு வலி தாங்கலை. சீன் முடிஞ்சதும் உடம்பு சரியில்லாமப் படுத்துட்டேன். ஆனா, குவிஞ்ச பாராட்டு இருக்கே... இன்னும் நாலு அடி வாங்கிருக்கலாமோனு நினைக்க வச்சிருச்சு’’ என்று சிரிக்கிறார்.
நான் வில்லிதான்!
‘‘அம்மா ஆசைப்பட்டாங்க... அதான் நடிக்க வந்தேன்...’’ என்கிற வழக்கமான டயலாக்குடன் பேசுகிறார் ஷாலினி. சன் டி.வியில் ‘மகள்’ தொடரின் வில்லி.
‘‘எனக்கு ஹீரோயின் ஆசையெல்லாம் இல்லை. எடுத்ததுமே வில்லி கேரக்டர் கொடுத்ததுல டபுள் சந்தோஷம். சீரியல்ல மட்டுமில்லீங்க... சினிமாலயும் நான் வில்லிதான்’’ என்கிற ஷாலினி, ‘காஞ்சனா’, ‘காந்திக்கணக்கு’ படங்களிலும் மிரட்டியிருக்கிறார். ‘‘நடிகை சரண்யாதாங்க எனக்கு ரோல் மாடல். குணச்சித்திர கேரக்டர்ல நடிக்க இன்னிக்கு அவங்களை மிஞ்ச ஆளே இல்லை. அவங்களை மாதிரி பேர் வாங்கணும். அந்த லட்சிய வெறியோடதான் உழைக்க ஆரம்பிச்சிருக்கேன்’’ என்கிறார் கண்களை உருட்டி.
கவலைப்படாதீங்க... ஆடி முடிஞ்சு, ஆவணி வந்தா டாப்பா வருவீங்க!
ஆர்.வைதேகி
படங்கள்: ஜெகன்