காபி



- இள.சிவபாலன்

கதவைத் தட்டும் சத்தம் கேட்டு லலிதா புரண்டு படுத்தாள். அதிகாலையின் வெளிச்சம், மூடப்பட்டிருந்த சன்னல் கதவுகளுக்கிடையே கசிந்து கொண்டிருந்தது. மெலிதாக போர்வையை விலக்கிப் பார்த்தாள். கணவன் அந்த கட்டில் முழுக்க அலங்கோலமாக படுத்துக் கிடந்தான். அவனிடமிருந்து நன்றாக விலகி அவள் ஓரமாகப் படுத்திருந்தாள். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். யாரும் திறப்பது போல் இல்லை.

யாரும் எழுந்து விட்ட மாதிரியும் தெரியவில்லை. அவளுக்கு சுடச் சுட காபி குடிக்கவேண்டும் போலிருந்தது. இதே அவளது வீடாக இருந்தால் அப்பா காபி போட்டு கொண்டு வந்து அத்தனை வாஞ்சையுடன் அவளை எழுப்பியிருப்பார். திருமணம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. நேற்றிரவுதான் அவளது வீட்டில் இருந்து கிளம்பி கணவனோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். கிளம்பி வரும்போது அப்பாவும் அம்மாவும் அழுததை நினைத்துப் பார்த்தாள்.

தனது அப்பாவிடம்தன் கணவன் அத்தனை நன்றாகப் பேசவில்லை. அப்பாவே வலிந்து போய் பேசிய போதும் அவன் ஓரிரு வார்த்தைகளில்தான் பதில் சொன்னான். நிச்சயம் அப்பாவுக்கு அது நெருடலாக இருந்திருக்கும். ஆனாலும் அதை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டார். அப்பாவை அவளுக்குத் தெரியாதா என்ன? திரும்பவும் கதவு தட்டும் சத்தம். நினைவில் இருந்து மீண்டவளாய் எழுந்து, இரவின் சோம்பலை முறித்து அசதியுடன் கதவைத் திறந்தாள்.

ஒரு கிழவி நின்றிருந்தாள். திண்ணையின் சுவரை ஒரு கையில் பிடித்தபடி சற்று அண்ணாந்து கண்களை நன்றாக விரித்து அவளை யார் என அடையாளம் காண முயற்சித்தாள். “வாத்தியாருக்கு காபி கொடுத்தியா?” கிழவியின் முகத்தில் அவளை அடையாளம் கண்டுகொள்ளாத ஏமாற்றம் தெரிந்தது. லலிதாவிற்கு ஒன்றும் புரிபடவில்லை. வாத்தியாரா? அவள் கணவன் ஏதோ பாங்கில் வேலை பார்க்கிறான். மாமனார் அரிசி கடை வைத்திருப்பதாகத்தானே சொன்னார்கள்?

“எந்த வாத்தியார்?” கிழவி அவளுக்கு பதில் சொல்லவில்லை. அவள் பேசியது காதில் விழுந்த மாதிரியும் தெரியவில்லை “சக்கரை கொஞ்சம் கம்மியா போடு, வயசான மனுஷன்...” லலிதாவிற்கு கோபம் எட்டிப் பார்த்தது. ‘வாத்தியாரே இங்க இல்லனு சொல்றேன். கிழவி சக்கரை கம்மியா போடுங்குது...’  என நினைத்துக் கொண்டே திரும்பவும் “எந்த வாத்தியார்?” என்றாள்.

“என்னது தூங்குறாரா?” சொல்லிவிட்டு இரண்டு படி கீழே இறங்கி அந்த சிமெண்ட் திண்ணையில் ஆசுவாசமாக கிழவி அமர்ந்தாள். லலிதா ஆச்சர்யமாகப் பார்த்தாள். யாரிந்த கிழவி? காலையிலேயே வந்து நம் வீட்டில் யாருக்கோ காபி கொடுக்கச் சொல்கிறாள்? பக்கத்து வீடா? இல்லை, ஏதாவது கிறுக்கு பிடித்தவளா? அதற்குள் உள்ளிருந்து அவளது மாமியார் அழைத்தாள். “கிழவி காலையிலே வந்திருச்சா? இதுகூட ரோதனையா போச்சு.

நீ போய் எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துப் போய் கொடு...” என்றவள் சட்டென்று நிறுத்தி, “காபி போடத் தெரியும்ல?” என அதட்டினாள். “ம்... தெரியும் அத்த...” என்றாள் லலிதா பவ்யமாக. மாமியாரின் அந்த தோரணையான பேச்சு கொஞ்சம் கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. “யாரோ வாத்தியாருக்கு காபி கொடுத்தியானு அந்த பாட்டி கேட்டாங்க. யாரு இங்க வாத்தியார் அத்த?” “அது கிறுக்கு புடிச்ச கிழவி. நீ போய் காபி போடற வேலைய பாரு...” சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் விறுவிறுவென மாமியார் சென்று விட்டாள்.

லலிதா சமையலறைக்குச் சென்று எல்லாவற்றையும் நிதானமாக ஒரு முறை பார்த்தாள். எதுவும் ஒழுங்குடன் இல்லை. அவள் வீட்டுச் சமையலறை அத்தனை ஒழுங்குடன் இருக்கும். அம்மாவுக்கு எதுவும் கலைந்து கிடந்தால் பிடிக்காது. எல்லாமே அந்தந்த இடத்தில் இருக்க வேண்டும். லலிதா ஏதாவது சமைத்து விட்டு வந்தால் கூட, அம்மா நிதானமாக எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் எடுத்து வைப்பாள்.

“போற எடத்துல இப்படி எல்லாம் கலைச்சுப் போட்டு வேலை செய்தா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என லலிதாவைத் திட்ட வேறு செய்வாள். புகுந்த வீட்டுச் சமையலறை அவளுக்கு அந்நியமாகத் தெரிந்தது. சமையலறை மட்டுமல்ல... மனிதர்களும் அந்நியமாகக் காட்சியளித்தார்கள். யாரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.

புதிதாக வீட்டுக்கு வந்திருக்கும் பெண்ணுக்கு எவ்வளவு பதற்றம் இருக்கும்? எவ்வளவு புதிய இடம் நிமித்தமான சிக்கல்கள் இருக்கும்? அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. நேராகப் போய் காபி போடு என்றால் எப்படிப் போடுவது? எது எது எந்த இடத்தில் இருக்கிறது என்பதையாவது சொல்ல வேண்டாமா? நினைத்துக் கொண்டே பால் பாக்கெட்டை கட் செய்தாள்.

ஒரு வழியாக காபியைப் போட்டு எடுத்துக்கொண்டு போய் எல்லாருக்கும் கொடுத்தாள். மாமியார் கண்ணைத் திறக்காமலே “அங்க வச்சிட்டு போ...” என ஒரு மேஜையைக் காட்டினாள். கணவன், “இந்த காபி கொடுக்கவா காலங்காத்தாலயே எழுப்புற?” என பரிகாசமாகச் சொல்லிவிட்டு மூலையில் இருந்த மேஜையில் வைத்து விட்டுப் போகச் சொன்னான். மிச்சமிருந்த பாலில் தனக்கும் வெளியே உள்ள பாட்டிக்கும் ரெண்டு டம்ளரில் காபியைப் போட்டு எடுத்துக் கொண்டு திண்ணையில் போய் அமர்ந்து கொண்டாள்.

எந்த மறுப்பும் சொல்லாமல் காபியை வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்தபடியே கிழவி குடிக்க ஆரம்பித்தாள். லலிதா மெதுவாக அந்தக் கிழவியைப் பார்த்து “காபி நல்லாயிருக்கா பாட்டி?” என்றாள். கிழவி காதிலேயே வாங்காமல் மும்முரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். “பாட்டி, பாட்டி...” கிழவி மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். “என்ன ராஜா?” “காபி நல்லாயிருக்கா?” “காபித் தண்ணியா இது?” லலிதாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

கோபத்துடன் எழுந்தாள். “அப்பா நல்லாயிருக்காரா ராஜா?” கிழவி சன்னமாகக் கேட்டாள். லலிதா ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தாள். இந்தக் கிழவிக்கு நம் அப்பாவை எப்படித் தெரியும்? ஒருவேளை நம்மையே வேறு ஆளாக நினைக்கிறாளோ..? கேள்விகள் எழுந்தாலும் கிழவி அப்படிக் கேட்டது ஆறுதலாக இருந்தது. மீண்டும் கிழவியின் அருகில் அமர்ந்து கொண்டாள். கிழவி இதை எதிர்பார்த்தாள் போல. திரும்பி ஒரு கையால் அவளது கரங்களை இறுக்கமாகப் பிடித்தாள். இன்னொரு கையால் அவள் முகத்தைத் தடவினாள்.

“களையா இருக்கடி புள்ள...” லலிதாவுக்கு சந்தோஷமாக இருந்தது. அதற்குள் பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அம்மா வந்து லலிதாவைப் பார்த்தாள். “நீதான் புதுசா வந்த மருமகளா?” லலிதா தலையாட்டினாள். “கிறுக்கு புடிச்ச கிழவி கிட்ட அப்படி என்ன பேசிட்டு இருக்க?” “என்னாச்சு இந்த பாட்டிக்கு?” “புத்தி சுவாதீனம் இல்ல. இது புருஷன் செத்து ஆறு மாசம் ஆவுது.

அதுல இருந்தே இப்படித்தான் நினைவு தப்பி ஏதேதோ பேசிட்டு இருக்கு...” “வாத்தியார் வாத்தியாருனு சொல்றாங்களே யார் அது?” “உன் மாமியார் இருக்காங்களே... அவங்களோட மாமனார்தான் வாத்தியாரா இருந்தவரு. அந்த மனுஷன் போய் 12 வருஷங்களாச்சு. ஆனா, இந்தக் கிழவி இன்னமும் அந்தாள் உசுரோட இருக்கறதா நினைச்சு தினமும் ‘காபி கொடு, சாப்பாடு கொடு’னு உன் மாமியார் உயிர வாங்கிட்டு இருக்கு. புருஷன் போனதும் ‘வாத்தியார், வாத்தியார்’னு இங்க வந்து காலை நீட்டி உட்கார்ந்துடுது.

என்ன நோயோ...’’ அலுத்துக் கொண்டே பக்கத்து வீட்டு அம்மா நகர்ந்தாள். எந்த பிரக்ஞையும் இன்றி கிழவி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் ஒரு முடிவற்ற நிம்மதி தெரிந்தது. விடுபட்ட பறவை ஒன்றின் நிம்மதியை அது நினைவுபடுத்தியது. புற உலக சலனங்களற்று தேஜஸுடன் கிழவி காட்சியளித்தாள். ஏனோ கிழவியைப் பார்த்து லலிதாவுக்கு பொறாமை வந்தது. கையை நீட்டி காலி டம்ளரை வாங்கினாள்.

கிழவி லலிதா வைத் திரும்பிப் பார்த்தாள். “காபித் தண்ணி ருசியா இருந்துச்சு புள்ள... வாத்தியாருக்கும் ஒரு கிளாஸ் போட்டுக் கொடு. இம்புட்டு ருசியான காபித் தண்ணிய குடிச்சா மனுஷன் சந்தோசப்படுவார்...” கொஞ்ச நேரம் கிழவியைப் பார்த்தாள். அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்தன. ஒரு கணம் அவள் கண்கள் கலங்கின. அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு டம்ளர்களுடன் வீட்டுக்குள் வந்தாள். சமையலறையில் அதை கழுவி வைத்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள். கணவன் தூங்கிக் கொண்டிருந்தான். வைத்த காபி ஆறியிருந்தது.                      

பன்ச்!

பிரான்ஸின் நைஸ் ஏர்போர்ட்டில் குழந்தையை இடுப்பில் வைத்தபடி இங்கிலாந்துக்காரர் EZY2122 என்ற லண்டன் செல்லும் ஃபிளைட் ‘ஏன் லேட்?’ என சாதாரணமாகக் கேட்டார். உடனே கவுண்டரிலிருந்த ஈஸிஜெட் ஊழியர் ஆக்ரோஷமாக எழுந்து இங்கிலாந்துக்காரர் முகத்தில் ஓங்கி ஒரு பன்ச் விட்டார். பிறகென்ன... காவலர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது!

அபேஸ்!

நெதர்லாந்தில் ஓடும் வண்டியில் ஐபோனை நேக்காக திருடுவது சர்வசாதாரணமான விஷயம். புகார் மேல் புகார் குவிந்ததால் ஒருநாள் ஓடும் ரயிலில் 5 நபர்களை கைது செய்த போலீசார், அன்று திருடப்பட்ட அத்தனை ஐபோன்களையும் மீட்டனர். அதன் மதிப்பு 5 லட்சத்து 90 ஆயிரம் டாலர்கள்! இதேபோல அச்சு அசலாக முன்னர் நடந்த க்ரைம்களின் எண்ணிக்கை 17. அதையும் இதே ஆட்கள் திருடியதாக அறிவித்து போலீசார் கேசை முடித்துவிட்டனர்!

விண்வெளியில் யோகா!

ஷில்பா ஷெட்டியாய் வளைந்து யோகா செய்வது பூமியில் சாத்தியம். புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில்? விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஜேக் ஃபிஸ்ச்சர், பெக்கி வொய்ட்சன் ஆகியோர் போட்டி போட்டு செய்த பெட்டிங் யோகா போஸ்கள்தான் இன்று இணையத்தில் ஹாட் வைரல்!