வேலையில்லா பட்டதாரி 2



குங்குமம் விமர்சனக்குழு

கட்டுமானத் தொழிலில் கெட்டிக்காரராய் இருக்கும் தனுஷ், போட்டியாளர் கஜோல் ஆதிக்கத்திலிருந்து மீண்டு சாதித்தாரா என்பதே ‘விஐபி2’. தான் உண்டு தன் வேலையுண்டு என ஒரு கட்டுமான நிறுவனத்தில் என்ஜீனியராக வேலை செய்கிறார் தனுஷ். அவருக்கு ஒரு சிறப்பு விருது கிடைக்கப் போக, எல்லோர் பார்வையும் அவர் மீது விழுகிறது. அவரின் திறமையைக் கண்ட பெரும் தொழிலதிபர் கஜோல், அவரை தன் நிறுவனத்தில் வளைத்துப் போட்டுக் கொள்ள துடிக்கிறார்.

இந்த அழைப்பை நிராகரிக்கிறார் தனுஷ். கோபம் வருகிறது கஜோலுக்கு. தனுஷுக்கு வேலை போனது முதற்கொண்டு, அனைத்து இடைஞ்சல்களும் அணி வகுக்கின்றன. தனுஷ் தன் அடையாளத்தை மீட்டெடுப்பதே படம். ‘விஐபி’யின் முதல்பாக சாயலிலேயே ஆரம்பிக்கிறது. செளந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதையின் பலத்தில் நிமிர்ந்து நிற்கிறது. தனுஷ் தன் இயல்பான நடிப்பில் தோள் கொடுக்கிறார். யதார்த்தமான அவரது குடும்பத்தின் அன்புப் பிடியில் இருப்பது முதல் பாகத்தின் அழகான பின் இணைப்பு.

காதலி மனைவியான பின் வருகிற காட்சிகள் எல்லாமே செம கியூட். அமலாபாலோடு செல்லமாக கொஞ்சும்போதும், அவ்வவ்போது மனைவியை வாரும்போதும் அசத்துகிறார். கஜோலிடம் ஏற்படும் கடுமையான போட்டியில், அவரை கீழிறக்கும்போது கேரக்டருக்கு வலிமை சேர்க்கிறார் தனுஷ். அமலாபாலின் கவர்ச்சியை அடக்கி வாசித்திருக்கிறார்கள். நடிப்பின் அளவு கூடியிருக்கிறது. மாமா சமுத்திரக்கனியை அவரின் உடல்நலத்திற்காக மிரட்டும்போதும், தனுஷ் குடித்துவிட்டு வரும்போது கோபித்துக் கொள்வதிலும்... நன்றாக முன்னேறியிருக்கிறார் அமலா.

கஜோலின் ஆரம்ப அறிமுகமும், அதிகார தோரணையும் பிசினஸ் செருக்கும் அவரின் பாவனையில் அருமையாக பளிச்சிடுகிறது. ஆனால், தமிழ் முகத்தின் சாயல் என்னவோ வரமாட்டேன் என்கிறது. தனுஷுக்கு அவர் சவால் விடும் ஒவ்வொரு தருணமும், முகத்தில் அலைந்தோடும் அலட்சியம் வசீகரிக்கிறது. அவ்வப்போது வந்து ‘வருகைப்பதிவு’ செய்கிற சரண்யா பொன்வண்ணனும், ஆல்ைடம் பையனுக்கு சப்போர்ட் பண்ணுகிற சமுத்திரக்கனியும் கலகலக்க வைக்கிறார்கள். ரசனை வசனங்களில் தனுஷ் தேறுகிறார். வழக்கம்போல் நீண்ட மூச்சுவிடாத வசனமும் இடம் பெறுகிறது. இறுதிக்கட்ட காட்சிகள் ஆக்‌ஷன் அதிரடி இல்லாமல் நெகிழ்வூட்டுகிற அமைப்பு.

மொத்தப் படத்தையும் தனுஷ் தன் தோளில் சுமப்பது கண்கூடு. ரசனையாக இருந்தாலும் தனுஷ் கஜோலுக்கு சவால்விட்டு திரும்புவது தமிழ்ச் சினிமாவில் பார்த்துப் பார்த்து பழகிய அத்தியாயங்கள் ஆயிற்றே! ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ருசிக்கவில்லை. ஆனால், பின்னணி இசையில் செம ஸ்ேகார் செய்கிறார். சமீர் தாகீரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு பாந்தம். முதல்பாகத்தைப் போன்ற பீலிங்கை தவிர்த்திருக்கலாம். கஜோலும், தனுஷும் முரண்படுகிற காட்சிகள் அதிகம். கஜோலின் ரேஞ்சுக்கு தனுஷை அடக்கப் பார்ப்பது நம்பும்படியாக இல்ைல. முன்பகுதி கலகலப்பிலும், பின்பகுதி பரபரப்பிலும் கவர்கிறது ‘விஐபி2’.