விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 40

ஆதியின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் ஆலமரமாக படர்ந்தன. ‘‘நம்ப முடியலையா... இல்ல நம்ப மறுக்கறையா..?’’ அவனை நெருங்கி கிருஷ்ணன் கேட்டான். ‘‘ரெண்டும்...’’ தனக்கே கேட்காத குரலில் ஆதி முணுமுணுத்தான். ‘‘ஷாக்கிங்காதான் இருக்கும். ஆனா, வேற வழியில்லை ஆதி... சொல்லித்தான் ஆகணும். ஒரு முடிவுக்கு வந்துதான் தீரணும். மகாபாரதத்துலயே இதுக்கான ஆதாரங்கள் இருக்கு...’’ ‘‘மனப்பாடமா உன்னால சொல்ல முடியுமா..?’’ ஆச்சர்யத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஐஸ்வர்யா வினவினாள்.

‘‘ம்... இதெல்லாம் தெரிஞ்சுக்காமயா இந்த அட்வன்சர்ல இறங்கியிருக்கேன்... சாரி, இறங்கியிருக்கோம்...’’ தோளை குலுக்கிய கிருஷ்ணன் மற்ற இருவரையும் மாறி மாறி பார்த்தபடி தொடர்ந்தான். ‘‘சீனர், யவனர் மாதிரி இந்தியரல்லாத இனத்தவர்களும் குருஷேத்திர போர்ல கலந்துகிட்டாங்க. தங்க படைப்பிரிவுகளை கொடுத்து உதவியிருக்காங்கனு மகாபாரதம் சொல்லுது. CINAS fought in the Contingent of Bhagadatra of prajotisa. Magabharata 5:18:584:5:18:321...’’ சொல்லிக் கொண்டே வந்த கிருஷ்ணனை ஆதியின் வெடிச் சிரிப்பு தடுத்து நிறுத்தியது.

‘‘சாரி... சாரி... சிரிச்சிருக்கக் கூடாது... பட்...’’ வாயைப் பொத்தி அடக்கிய ஆதி நிமிர்ந்தான். ‘‘மகாபாரதத்தை கவனமா படிக்கலைனா நம்மை அது ஏமாத்திடும். அதுக்கு சாம்பிள்தான் நீ சொன்னது க்ருஷ்...’’ மறுத்து பேச முற்பட்ட கிருஷ்ணனின் கைகளைப் பிடித்து ஐஸ்வர்யா தடுத்தாள். ‘‘எது க்ருஷ்ஷை ஏமாத்தினதுனு கொஞ்சம் புரியும்படியா சொல்லு ஆதி...’’ ‘‘க்ருஷ் சொன்னது உண்மைதான். ஆனா, அது முழுக்க நிஜம் இல்ல.

அஃப்கோர்ஸ், மகாபாரத காலத்துல அரசர்களுக்கும் இந்தியாவுக்கு வெளில இருந்த மன்னர்களுக்கும் அரசியல் உறவுகள் இருந்துச்சு. பாபிலோனியா, அரேபியா, ஆப்பிரிக்க நாடுகளோட ஏற்றுமதி, இறக்குமதி வேத காலத்துல நடந்திருக்கு. எகிப்தை சேர்ந்த பெரிபுளஸ் இதைப்பத்தி, ‘வாணிகப் பொருளாகவும் 17வது அரச குலத்து ஆட்சியில் திறைப் பொருளாகவும் தந்தம் பெறப்பட்டதா’ தன்னோட ‘Scoff’s Periplus’ நூல்ல பக்கம் 61ல பதிவு செய்திருக்கார்...’’

‘‘...’’ ‘‘அப்ப எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இடைல நடைபெற்ற வாணிகத்துல பெரிய பொருள் சேமிப்பு இடமா சோமாலிலேண்டை சேர்ந்த புன்ட் (punt) விளங்கியிருக்கு...’’ ‘‘...’’ ‘‘18வது அரசகுலமான தேபன் (Theban) ஆட்சி நடத்தினப்ப சிறந்த கப்பற்படைகள் புன்ட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கு.

‘அவை திரும்பி வரும்போது நறுமணப்பொருள் செய்யப் பயன்படும் பிசின், கருங்காலி மரம், தந்தம், பொன், லவங்கம், மனம் கமழும் புகைதரும் பொருட்கள், கண் மை, வாலில்லா குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள்... உள்ளிட்ட பொருட்களோடு வந்தன...’னு ஆரம்பிச்சு ஏராளமான தகவல்களை, ஆதாரங்களை Breasted தொகுத்த ‘Ancient Records of Egypt’ ஆவணங்களில் இருந்து மேற்கோள் காட்ட முடியும்...’’ ‘‘...’’ ‘‘இரு க்ருஷ்... முடிச்சுடறேன். தருமர் பெற்ற திறைப்பொருட்கள்ல சீனாலேந்து வந்த பட்டையும் ஒண்ணுனு மகாபாரதம் ‘சீன கமுத்பவன் அவுர்னம்’னு (மகாபாரதம்: 2:51.1843) குறிப்பிடுது.

இதையெல்லாம் நான் மட்டுமில்ல... எங்க Intelligent Design அமைப்பைச் சேர்ந்தவங்களும் மகாபாரதம் படிச்சவங்களும் மறுக்க மாட்டாங்க...’’ ‘‘...’’ ‘‘ஆனா, அர்ஜுனனோட வில் வெளிநாட்டு ஆயுதமா இருக்கலாம்னு சந்தேகப்படற பார்த்தியா... அது மட்டும் நிஜமே இல்ல...’’ ‘‘வணிகம் நடந்தது... திறைப்பொருட்கள் வந்தது... இதையெல்லாம் விடு ஆதி... குருஷேத்திர போர்ல சீனர்களும், யவனர்களும், இந்தியரல்லாத மத்த நாட்டைச் சேர்ந்தவங்களும் கலந்துகிட்டாங்களா இல்லையா..?’’ கிருஷ்ணன் அழுத்தமாக கேட்டான்.

‘‘கலந்துகிட்டாங்க!’’ ஆமோதித்த ஆதி தலையை உதறினான். ‘‘பட், விஜயனோட வில் வெளிநாட்டு ஆயுதம் இல்ல...’’ ‘‘அதே மாதிரி அது சரஸ்வதி நதிக்கும் சொந்தமானதில்ல...’’ கிருஷ்ணன் இடை வெட்டினான். ‘‘இருங்க... இருங்க...’’ ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் புகுந்தாள். ‘‘அர்ஜுனனோட வில் வெளிநாட்டு ஆயுதமா இல்ல சரஸ்வதி நதிக்கு சொந்தமானு நாம ஆர்க்யூ பண்ண வேண்டாம். எதுவா வேணா இருந்துட்டுப் போகட்டும்...’’

‘‘நமக்குத் தேவை அந்த வில்லுதான்னு சொல்றியா ஐஸ்...’’ பற்களை கடித்தபடி ஆதி இருவரையும் முறைத்தான். ‘‘கூல் ஆதி... கூல்... எப்படியும் நமக்குள்ள ஒரு சண்டை இருக்கு. ஆனா, அது இங்க வேண்டாம். திரிசங்கு சொர்க்கத்தை விட மோசமான நிலைல இப்ப நாம இருக்கோம். சொல்லப் போனா எங்க இருக்கோம்னே தெரியலை... உலூபி அம்மாவோட ராஜ்ஜியத்துல கார்க்கோடகரோட வயித்துக்குள்ள... ஆனா, அங்கேந்து வெளில வந்து... மை காட்... தலை சுத்துது... முதல்ல வெளில போவோம்... விஜயனோட வில்லை எடுப்போம்... ஓகே... ஒகே... நாங்க எடுக்கறோம்... அப்ப நீ வந்து அதை தடுத்து நிறுத்து...’’ ஐஸ்வர்யா சொல்வது சரியென்றே ஆதிக்கு தோன்றியது.

மவுனமானான். ஆனால், கிருஷ்ணனை பார்க்காமல் தலையை திருப்பிக் கொண்டான். கிருஷ்ணனும் அவனுடன் பேச முற்படவில்லை. மூவருக்கும் அமைதி தேவைப்பட்டது. மூவரின் மனமும் கொந்தளித்தபடி பொங்கியது. எக்கு தப்பாக மாட்டிக் கொண்டோமோ... எப்படி வெளியேறுவது என அங்கிருந்தவர்களின் உள்ளம் அலைபாய்ந்தது.

அதற்கு ஏற்பவே அடுத்தடுத்து காட்சிகளும் அரங்கேறின. அவர்களை இயல்புக்கு கொண்டு வந்தவர் கார்க்கோடகர்தான். பாம்பு உருவத்தில் இருந்தபடியே தன் வாலால் மூவரையும் அணைத்தார். ‘‘அதிக நேரம் இல்ல... உடனே இங்கேந்து வெளியேறணும்...’’ ‘‘கருடன்..?’’ சுற்றும்முற்றும் பார்த்தபடியே கிருஷ்ணன் கேட்டான். ‘‘தப்பிச்சுட்டோம்.

திரும்ப அது சரஸ்வதியோட வர்றதுக்குள்ள நாம கிளம்பியாகணும்...’’ ‘‘எங்க?’’ ஐஸ்வர்யாவின் உதடு பயத்தில் துடித்தது. ‘‘தாராகிட்ட!’’ ஆதி தன் முஷ்டியை முறுக்கினான். ஐஸ்வர்யாவும் கிருஷ்ணனும் சிரித்தார்கள். அந்தப் புன்னகை அதிக நேரம் நீடிக்கவில்லை. காரணம், மூவரையும் சுமந்தபடி வளைந்து நெளிந்து நகர்ந்த கார்க்கோடகரின் உடலில் காணப்பட்ட எழுத்துகள். அதை ஐஸ்வர்யாதான் மற்ற இருவருக்கும் சுட்டிக் காட்டினாள். தெளிவாக எழுதப்பட்ட அந்த 7 எழுத்தையும் அதிர்ச்சியோடு படித்தார்கள். ‘KVQJUFS’!

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்