பிரம்மாவின் திருவிளையாடல்!



- மை.பாரதிராஜா

‘‘நிறைய புராணப்படங்கள் பார்த்திருப்போம். அதுல மகா விஷ்ணு, சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லும் படங்கள்தான் அதிகம். எனக்குத் தெரிஞ்சு பிரம்மாவின் திருவிளையாடல்களை சொன்ன படங்கள் தமிழ்ல வந்ததில்ல. விஷ்ணுவும், சிவனும் காத்தல், அழிவுத்தல் வேலைகளை செய்யறதால பயத்தோட அவங்களை ஃபாலோ செய்யறோம். ஆனா, நம்மை படைச்சதோட பிரம்மாவின் வேலை முடிஞ்சிட்டதால அவரை பிறகு நாம கண்டுக்கலைனு நினைக்கறேன். ஒருவகைல பிரம்மாவுக்கு கோயில் இல்லாததுக்குக் கூட இது காரணமா இருக்கலாம்.

ஆனா, விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் சமமா பிரம்மா கிட்டயும் நிறைய திருவிளையாடல்கள் இருக்கு...’’ எடிட்டிங் பணிகளுக்கு இடையே உற்சாகமாகப் பேசுகிறார் புருஷ் விஜயகுமார். நகுல், நீதுசந்திரா, ஆஷ்னா ஜாவேரி நடிக்கும் ‘பிரம்மா.காம்’ படத்தின் அறிமுக இயக்குநர் இவர்.

‘திருவிளையாடல்’ காலகட்டத்துக்கே அழைச்சிட்டு போயிடுவீங்க போலிருக்கே..?
இல்ல ப்ரோ. புராணப் படமா எதிர்பார்க்காதீங்க. இது கலர்ஃபுல்லான ஃபேன்டஸி காமெடி. அடுத்த சீன் என்னனு ஊகிக்க முடியாது. ஜாலியான ஒரு கன்டன்ட் வைச்சிருக்கேன். திடீர்னு உங்க முன்னாடி கடவுள் தோன்றினா என்ன நடக்கும்? ‘வரம் கேள்’னு சொல்லுவார். ‘என்ன வரம் நமக்கு தேவைனு கடவுளுக்கு தெரியாதா’னு நினைப்போம் இல்லையா?!

இந்தக் கேள்விக்கான விடையை ‘பிரம்மா.காம்’ல சொல்லியிருக்கோம். சின்னச் சின்ன விஷயத்துக்கும் எமோஷனல் ஆகற... பிரமிக்கற, கண்கலங்கற, அப்செட் ஆகற... ஒரு சாதாரண பையனோட வாழ்க்கைல நடக்கற விஷயங்கள்தான் கதை. என் ஹீரோவுக்கு பெரிய பாடிபில்டர் தேவைப்படலை. சாதாரண பையன் லுக் இருந்தா போதும்.

அதுக்கு நகுல் பொருத்தமா இருந்தார். அவர் வருஷத்துக்கு ஒரு படம் பண்ணினாலும் பேசப்படக் கூடிய படமாத்தான் பண்ணுவார். நகுலைத் தவிர பாக்யராஜ் சார், கௌசல்யா, சோனா, சித்தார்த் விபின், நீது சந்திரா, ஆஷ்னா ஜாவேரி, ஜெகன், மொட்டை ராஜேந்திரன்னு நிறைய பேர் இருக்காங்க. படம் தொடங்கறதுக்கு முன்னாடி ஒரு நல்ல டெக்னிகல் டீம் அமையணும்னு கவனமா இருந்தேன். அடுத்தடுத்து அதே டீமோட டிராவல் செய்யணும்னு ஆசைப்பட்டேன். எதிர்பார்த்த மாதிரியே நல்ல டீம் கிடைச்சிருக்கு.

‘தில்லுக்கு துட்டு’ கேமராமேன் தீபக்குமார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அவரை நகுல்தான் அறிமுகப்படுத்தினார். பிரமாதமான லைட்டிங் நாலேஜ் உள்ளவர். படத்துல கிராபிக்ஸ், மேஜிக் சீன்ஸ் நிறைய இருக்கு. அத்தனையும் அழகா விஷுவல் பண்ணியிருக்கார். ‘காஸ்மோரா’ சாபு ஜோசப் சாரோட எடிட்டிங் படத்துக்கு பெரிய பலம்.

நீது சந்திரா கம்பேக் போல..?
அவங்க தமிழ்ல தொடர்ந்து நடிக்க ஆர்வமா இருக்காங்க. இதுல நீது பாலிவுட் நடிகையாவே வர்றாங்க. மும்பைல இருந்த அவங்ககிட்ட கதை சொல்ல போன் பண்ணினேன். ‘நேர்ல வந்து கேட்கிறேன்’னு மறுநாளே சென்னை வந்துட்டாங்க. ஸாங் ஷூட் அப்ப சமிக்கி வேலைப்பாடுகள் அதிகம் வச்ச ஒரு சேலை அணிந்து ஆடினாங்க. பாட்டு முடிஞ்சதும்தான் தெரிஞ்சது ஷார்ப்பான அந்த சமிக்கிகள் பட்டு, அவங்க உடம்புல அங்கங்க கீறல்னு.

இந்த வலியோடதான் நீது ஆடினாங்க. படத்தோட கடைசி சீன் வரை நீது வர்றாங்க. ஆஷ்னா, இதுல மாடலிங் பொண்ணு. ஏற்கெனவே அவங்க மாடல். ஸோ, படத்துல கலக்கியிருக்காங்க. முதன்முதலில் அவங்கள கமிட் பண்ண போனப்ப ஃபீவர்ல படுத்திருந்தாங்க. காய்ச்சல் குணமாகற வரை ஆஷ்னாவுக்காக காத்திருந்தோம்.

என்ன சொல்றார் பாக்யராஜ்?
நான் சின்ன வயசுல இருந்து பிரமிக்கிறவர். அப்படிப்பட்டவர்கிட்ட நான் கதையை சொன்னதும், ரொம்ப இம்ப்ரஸ் ஆனார். டப்பிங் அப்ப ஒரு மணிநேரம் படத்தை பார்த்துட்டு, சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் சொன்னார். அவர்கிட்ட யாரோ ‘டைரக்டர் ரொம்ப பதட்டமா இருக்கார்’னு சொல்லியிருப்பாங்க போல... ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசினார். ‘டிரெய்லர் நல்லா கட் பண்ணுங்க. எந்த பயமும் வேணாம். படம் நல்லா வந்திருக்கு’னு தோள் தட்டி என்கரேஜ் பண்ணினார்.

சோனா, கௌசல்யா ரோல்கள் பேசப்படும். இன்னொரு விஷயம், படத்துல மொட்டை ராஜேந்திரன் பையன் கேரக்டர்ல நடிக்க நிறைய பேரை பார்த்தேன். யாருமே செட் ஆகலை. பணக்கார வீட்ல இருக்கற லூசு பையன் கேரக்டர் அது. அன்னிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இந்த படத்தோட தயாரிப்பாளர் கணேஷ் கார்த்திகேயன் சார் வந்திருந்தார். அவரை பார்த்ததும் முடிவு பண்ணிட்டேன், ராஜேந்திரன் பையன் கேரக்டருக்கு நூறு சதவிகிதம் பொருத்தமா இருப்பார்னு.

அமெரிக்காவில் பெரிய பிசினஸ் மேன் அவர். அவர்கிட்ட நடிக்க கேட்டதும், ‘அந்த கேரக்டரா’னு ஜர்க் ஆனார். பிடிவாதம் பிடிச்சு, அவரை நடிக்க வைச்சிருக்கேன். இப்ப டப்பிங், எடிட்டிங்ல பார்க்கிற எல்லாருமே ‘அந்த கேரக்டர்ல நடிச்சிருக்கறது யாரு’னு ஆச்சரியமா விசாரிக்கறாங்க.

தான், இசையமைக்கிற படத்துல எல்லாம் சித்தார்த் விபின் நடிக்க ஆரம்பிச்சிட்டாரா?
அப்படியில்ல. விபின் இதுல செகண்ட் ஹீரோ மாதிரி. புரொட்யூசருக்கு அடுத்து நான் கதை சொன்னது ஹீரோவுக்கு கூட இல்ல. சித்தார்த் விபினுக்குதான். முதல்ல நடிக்கதான் கேட்டிருந்தேன். ஒரு காபி ஷாப்ல அவருக்கு கதை சொன்னேன். அப்புறம் ஆறுமாசத்துக்குப் பிறகுதான் இந்தப் படத்தை தொடங்கினேன். நீங்களே மியூசிக் பண்ணிடுங்கனு சொல்லி, சிச்சுவேஷன்களை சொல்ல ஆரம்பிச்சேன். ஆறுமாசத்துக்கு முன்னாடி சொன்ன கதை, சீன்ஸ் எல்லாமே நினைவு வைச்சிருந்தார். ‘நீங்க வருவீங்கனு தெரியும். பாடல்கள் ரெடி பண்ணிட்டேன்’னு சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார்.

உங்கள பத்தி சொல்லுங்க..?
எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்குமான நெருக்கம் அதிகம். தாத்தா தேவநாத ஐயங்கார் மாடர்ன் தியேட்டர்ஸ் பி.ஆர்.சுந்தரம் சார்கிட்ட அசோஸியேட்டா இருந்தவர். ‘ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணி’ல கூட அவர் நடிச்சிருக்கார். எங்க அம்மா கஸ்தூரி, நாடக நடிகை. சங்கரதாஸ் சுவாமிகளோட கடைசி காலகட்ட நாடங்கள்ல நடிச்சிருக்காங்க. சினிமாவில் நடிக்க மாட்டேன்கிற கொள்கையோடு இருந்தாங்க.

எனக்கு அவங்களைப் பார்த்து தான் சினிமா ஆசை வந்தது. குழந்தை நட்சத்திரமா நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். அப்புறம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்திருக்கேன். பிறகு விகடன் டெலிவிஸ்டாஸ்ல அசோஸியேட் ஒர்க், ஷெட்யூல் டைரக்டர்னு என்னோட சிறகுகள் விரிஞ்சது. சன் டிவியோட ‘சூப்பர் குடும்பம்’ல எக்ஸிக்யூட்டிவ்வா ஒர்க் பண்ணியிருக்கேன். ‘பிரம்மா.காம்’ எனக்கான சிறந்த அடையாளமாக இருக்கும்னு நம்புறேன்.