பிச்சைக்காரர்கள்



- த.சக்திவேல்

நம் சமூகத்தில் ஆதரவற்றவர்களை (பிச்சைக்காரர்களை) கடக்கும்போது மூக்கை மூடி ஒதுங்கிச் செல்பவர்கள்தான் அதிகம். அழுக்கான உடை, பல மாதங்களாக வெட்டப்படாத முடி, தோற்றம், அணுகும்முறை போன்றவற்றை வைத்து மேலோட்டமாக அவர்களை மதிப்பிடுகிறோம். வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களைப் போலவும், குற்றவாளிகளைப் போலவும் பார்த்து பயப்படுகிறோம்.

தாங்கள் யார்? எங்கிருந்து வந்தோம்? இதற்கு முன் தங்களின் வாழ்க்கை எப்படியிருந்தது... போன்ற எந்த பின்னணியையும் அவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால், அவர்களிடம் நெருங்கிப் பழகி, அவர்களில் ஒருவனாகி, அவர்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை வந்தபிறகு, வெளி உலகிற்குத் தெரியாத தங்கள் வாழ்க்கையின் மறுபக்கத்தை ஒரு நண்பனைப் போல திறந்து காட்டுவார்கள்.

‘‘எந்த வேலையும் கிடைக்கல. வீட்ல எப்பவும் பிரச்னை. ஃப்ரண்ட்ஸ் கூட என்னை மதிக்கல. வீட்டை விட்டு வந்துட்டேன். பத்து வருஷங்களாச்சு. இதுவரைக்கும் யாரும் என்ன தேடி வர்ல. சொன்னா நம்ப மாட்டீங்க, ப்ளஸ் 2 வரைக்கும் படிச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி ஹாஸ்பிட்டல்ல கூட்டுற வேலை செஞ்சுட்டு இருந்தேன். தினமும் 100 ரூபா கிடைக்கும். அதை வெச்சுட்டு என்னால ஒண்ணும் செய்ய முடியல. ஆரம்பத்துல கையில காசு இல்லாதப்ப கையேந்த கஷ்டமா இருந்தது. இப்ப பழகிடுச்சு.

தினமும் 300 ரூபா கிடைக்குது. நைட்டானா பீச்ல தூங்கிப்பேன். இல்லன்னா பிளாட்பார்ம்ல. ஆனா, காலைல பீச்சுக்கு வந்துடுவேன். இங்கதான் காலைக் கடனை முடிப்பேன். கடல்ல குளிச்சிப்பேன். இப்படி அழுக்கோட, முடி வெட்டாம இருந்தாதான் பணம் கிடைக்குது. பீச்ல குடும்பத்தோட மக்களைப் பாக்கிறப்ப நமக்குனு யாருமில்லையேனு அப்பப்ப வேதனை எட்டிப்பார்க்கும்...’’ துயரங்களை மறந்து மனம் திறக்கிற அந்த மனிதருக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும்.

எட்டு முறை தொடர்ந்து அவரைச் சந்தித்த பிறகே பேச ஆரம்பித்தார். அப்பவும் தயங்கித் தயங்கித்தான் உரையாடினார். ஆனால், தான் எங்கிருக்கிறேன், பெயர் போன்ற விவரங்களை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்றார். இவரைப்போல் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள், விரட்டப்பட்டவர்கள்தான் அதிகமாக நகரில் ஆதரவற்றவர்களாக உலா வருகிறார்கள்.

உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதே இவர்களுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள், காதல், திருமணம், பொழுதுபோக்கு, பாலியல் தேவைகள்... என சகலமும் கானல் நீர்தான் அல்லது இந்த தேவைகளை அவர்கள் எப்படி பூர்த்தி செய்துகொள்கிறார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

கட்டணக் கழிப்பறையில் குளிக்கவும், காலைக்கடனைக் கழிக்கவுமே இருபது ரூபாய்க்கு மேலாவதால் மக்கள் நடமாட்ட மில்லாத வெட்டவெளியும், கடலும்தான் இவர்களுக்கு கைகொடுக்கின்றன. இதில் பலர் குளிப்பதையே மறந்துவிட்டனர். பெண்கள் பேருந்து நிலையங்களில் இருக்கும் இலவச கழிப்பறைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சென்னையில் வாழும் ஆதரவற்றவர்களில் கணிசமானவர்கள் கடற்கரை, கோயில் வாசல், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நடை பாதைகளில்தான் இரவில் தூங்குகிறார்கள். பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பிற்காக மக்கள் நடமாட்டம் மிகுந்த கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களை தஞ்சமடைகிறார்கள்.

என்றாலும் ரயில்தான் இவர்கள் உறங்குவதற்கான முக்கியமான இடம். தினமும் எங்காவது பிச்சை எடுத்துவிட்டு இரவில் பீச் ஸ்டேஷன் வந்துவிடுவார்கள். அங்கிருந்து அரக்கோணம் போகும் கடைசி ரயிலில் ஏறி படுக்கிறார்கள். ரயிலின் குலுங்கலும், சத்தமும்தான் அவர்களுக்கு தாலாட்டு. ‘‘சரியா நைட் 1.20க்கு பீச் ஸ்டேஷன்ல இருந்து இந்த ரயில் கிளம்பும். பக்கத்துல இருக்குற மில்லில் வேலை செய்றவங்களுக்காக இந்த ரயிலை விட்டாங்க. இப்ப மில் ஓடுறது இல்லை. கூட்டம் பெருசா இருக்காது.

ஒவ்வொரு பெட்டியிலயும் நிறைய பிச்சைக்காரங்க ஏறுவாங்க. தனியாப் போய் படுத்துப்பாங்க. யார்கிட்டயும் காசு கூட கேட்க மாட்டாங்க. சரியா 3.20க்கு அரக்கோணம் போயிடும். மறுபடியும் 4.00 மணிக்கு சென்னைக்குத் திரும்பி வரும். திரும்பும்போது மக்கள் நிறைய ஏறுவாங்க. அப்ப அவங்களால தூங்க முடியாதுன்னு நினைக்கிறேன். மழைக்காலங்கள்ல சென்னைல இருக்கிற நிறைய பிச்சைக்காரங்களை இந்த ரயில்ல நீங்க பார்க்கலாம்...’’ என்ற சுரேஷ் தினமும் அந்த ரயிலில்தான் பயணம் செய்கிறார்.

பீச் ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு முதல் ஐந்து ஆதரவற்றவர்கள் ஏறிக்கொள்கிறார்கள். அவர்களில் எல்லோரும் ஆண்கள். பெண்களைப் பார்க்கவே முடியவில்லை. மூலையில் இருக்கும் இருக்கைகளைத் தூங்குவதற்காக தேர்வு செய்கிறார்கள். ஏறியவுடனே படுத்துக் கொள்கிறார்கள். யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாருடனும் பேசுவதும் இல்லை. நாம் பேசச் சென்றாலும் பயந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.

விடாப்பிடியாக ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘தினமும் இந்த ரயில்லதான் தூங்குவேன். அதிகபட்சம் நாலு மணி நேரம். ஃபேன் காத்துல தூக்கம் நல்லா வரும். கொசுத் தொல்லை அதிகம் இருக்காது...’’ சொல்லிவிட்டு உறங்கப் போய்விட்டார். ‘‘சென்னையில் எந்தவித ஆதரவும் இல்லாமல் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற எந்த அரசு ஆவணங்களும் இவர்களுக்குக் கிடையாது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்குள் கூட வர மாட்டார்கள்.

இவையெல்லாம் சமூக கவனத்துக்கு வராத விஷயம். கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு, எங்கேயோ உறங்கி வாழும் இவர்களுடைய மனநிலையும், செயலும் என்னவாக இருக்கும்? வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருந்துயரம் அது...’’ என்று பேச ஆரம்பித்தார் புரசை கோ.தமிழேந்தி. ஆதரவற்றவர்களை அரவணைத்து, தலைமுடியை வெட்டி, ஷேவிங் செய்து, குளிக்க வைத்து... வீட்டுக்கே அழைத்து விருந்தளிக்கும் ஆச்சர்ய மனிதர்.

தனது மனைவி சென்னம்மாளுடன் இணைந்து இந்த அரும்பணியைச் செய்து வருகிறார். ஆதரவற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகவே ‘மாற்று அறக்கட்டளை’ என்ற அமைப்பை இவர்கள் நடத்தி வருகிறார்கள். ‘‘அன்றைய நாளைக் கடப்பதே ஆதரவற்றவர்களுக்குப் போராட்டமாக இருக்கிறது. தங்களை வந்து விசாரிக்க ஆள் இல்லாத துயருக்குள் அவர்களின் வாழ்க்கை சுழல்கிறது. அதனால்தான் அவர்களுக்கு குடும்ப உறவுகளின் மீதான மதிப்பீடோ உறுதித்தன்மையோ இல்லாமலேயே இருக்கிறது.

எல்லாவற்றையும் சந்தேகப் பார்வையோடுதான் பார்ப்பார்கள்...’’ என்று கவலையோடு பேசியவர் தன் வாழ்க்கையில் திருப்புமுனையாக நிகழ்ந்த சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார். ‘‘ஒருநாள் நண்பரைப் பார்க்க மயிலாப்பூர் சென்றிருந்தேன். அங்கிருந்த பஸ் ஸ்டாண்டில் நிறைய ஆதரவற்றவர்களைப் பார்த்தேன். பேச்சுக் கொடுத்தபோது ஒருவர் பிஹெச்.டி முடித்திருப்பது தெரிந்தது! இன்னொருவர் எஞ்சினியரிங் முடித்திருந்தார். அடுத்தவர் வழக்கறிஞர். கேட்டதுமே மனம் துடித்தது.

‘கை, கால் நல்லாதே இருக்கு... ஏதாவது வேலைக்குப் போகலாமே..?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம், அன்பு செலுத்த யாரும் இல்லாததால்தான் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது தெரிந்ததும் செயலில் இறங்கினோம். எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு அன்பு காட்டி வருகிறோம்.

இவர்களுக்கு தங்க இடம் தேவை. அப்போதுதான் மெல்ல மெல்ல அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும். லட்சக்கணக்கான நல்ல மனித வளம் யாருக்கும் பயன்படாமல் இப்படி வீணாகிறது...’’ வருத்தத்துடன் குறிப்பிட்டவர் இவர்களது வாழ்வில் ஒளி ஏற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். செவி சாய்க்கும் நிலையில் சென்னை மாநகர மக்கள் இருக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை...

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்


பொதுத் தகவல்கள்

* இந்தியாவில் ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
* பத்து வருடங்களுக்கு முன்பு 6 லடசத்து 30 ஆயிரமாக இருந்தவர்கள் இப்போது 5 லட்சமாக குறைந்திருக்கிறார்கள்.
* மற்றவர்களிடம் கையேந்துவதன் மூலமாக தினமும் முப்பது ரூபாயிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்கள்.
* மும்பையில் சிலர் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அதை வாடகைக்கு விட்டுவிட்டு சாலையிலே வாழ்கிறார்கள்.
* 1.50 லட்சம் பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
* 21% பேர் படிக்காதவர்கள். 18% பேர் பார்வையற்றவர்கள். 23% பேர் ஊனமுற்றவர்கள்.
* 3100 பேர் படித்த பட்டதாரிகள். 410 பேர் எஞ்சினியரிங் முடித்தவர்கள்.
* எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் இதில் இருக்கிறார்கள்.

ஆதரவற்ற பெண்கள்

* அதிகமான பெண்கள் திருமணமாகாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
* இந்தியா முழுவதும் இரண்டு லட்சம் பெண்கள் இப்படியிருக்கிறார்கள்.
* 80% பேர் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.
* 982 பேர் பட்டதாரிகள்.
* 20% பேருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
* 18% பேர் ஊனமுற்றவர்கள். 12% பேர் பார்வையற்றவர்கள்.
* 8%  பேர் கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து பிச்சை எடுக்கிறார்கள்.

ஆதரவற்ற குழந்தைகள்

* குழந்தைகள் கையேந்துவதன் மூலமாக மாதம் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர்.
* சில குழந்தைகள் கல்விக்காகவும் கையேந்துகின்றனர்.
* குழந்தைகளின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் குடும்ப வறுமை, பெற்றோர்களின் அக்கறையின்மை.
* சில கும்பல்கள் குழந்தைகளைக் கடத்தியும், விலைக்கு வாங்கியும் இந்த நிலைக்கு ஆளாக்குகின்றனர்.
* இந்த குழந்தைகள் பெரும்பாலும் பத்து வயதுக்குட்பட்டவர்கள்.
* இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் தெருவிலே பிறந்து, அங்கேயே வளர்ந்தவர்கள்.
* பீகார், உத்தரப்பிரதேசத்தில்தான் ஆதரவற்ற குழந்தைகள் அதிகம்.
* இவர்களில் 14% உடல் ஊனமுற்றவர்கள். 29% பள்ளிக்குச் செல்லாதவர்கள்.