கும்ப லக்னம் சனியும் சந்திரன் சேர்க்கையும் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் - 104
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
தியாகத்திற்கு உறைவிடமான சனியும், சர்வ கலாபிதனான சந்திரனும் சேர்ந்தால் வசீகரமான புரட்சித் தலைவராக உருவெடுப்பார்கள். ஆயிரம் யாகத்தைவிட ஒரு தியாகம் பெரிது என்பதில் திடநம்பிக்கை உள்ளவர்கள். சந்திரன் தேய்ந்து, வளர்ந்து, மறைந்து என்று பல நிலைகளை உடையது. ஒரு காரியத்தை முடிக்க சாம, தண்ட, பேதம் என அனைத்து யுக்திகளையும் கையாளுவார்கள்.
எதிரியென்றால் அவர் எதிரிதான். மீண்டும் உங்கள் நட்புப் பட்டியலில் இடம்பெற முடியாது. நாலு நிமிஷத்தில் பேசுபவரின் நாடி பிடித்துப் பார்ப்பதில் இவர்கள் சூரர்கள். அதீத அதிகாரத்திலுள்ளவர்களை வலுவிழக்கச் செய்வார்கள். மனது சரியில்லை எனில் உடம்பும் சரியில்லாமல் போகும். மேலே சொன்னவை பொதுவான பலன்கள். ஆனால், ஒவ்வொரு ராசிகளிலும் லக்னாதி பதியான சனியும் சந்திரனும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?
கும்ப லக்னத்திலேயே அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும் சந்திரனும் இருந்தால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்களால் ஆறுதல் பெறுவார்கள். பழமையான விஷயங்களையும், பரம்பரையாக வந்த தகவல்களையும் சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். எந்தவொரு பிரச்னையையும் மிக எளிதாக அணுகுவார்கள். நான்கு வயதிலேயே பத்து வயதுக்குரிய முதிர்ச்சி தெரியும். எவ்வளவு கடினமான சூழல்கள் வந்தாலும் மிக எளிதாக சமநிலையான மனப்பாங்கோடு திகழ்வார்கள். அதிகம் கேள்வி கேட்பவர்களாக இருப்பார்கள்.
இரண்டாம் இடமான மீனத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்திருந்தால், ‘சின்ன வயசுலயே இவ்வளவு பொறுப்பா’ என்று மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு நடந்து கொள்வார்கள். அதிக நேரம் தனிமை. நிறைய படிப்பு என்று வாழ்க்கை நகரும். மெரைன் இன்ஜினியரிங், ஐடி, மருத்துவத்தில் இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்ற துறையில் படித்தால் நிச்சயம் ஏற்றம் உண்டு.
சிறிய வயதிலேயே ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். கல்லூரி முடியும் வரை படிப்பு என்கிற விஷயத்தில் எந்த தொந்தரவும் இருக்காது. பெற்றோருக்கு அறிவுரை கூறும் அளவிற்கு வளருவார்கள். மூன்றாம் இடமான மேஷத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்திருந்தால் ஒரு குழந்தைக்குப் பிறகு இன்னொரு கருச்சிதைவு ஏற்பட்டு மூன்றாம் குழந்தை தங்கும். இவர்கள் அதிகம் சைக்கிள் ஓட்டாமல் இருப்பது நல்லது.
ஆண்களாக இருப்பின் விதைப்பைகளில் பிரச்னை ஏற்படும் வாய்ப்புண்டு. நண்பர்களிடம் மிகுந்த அந்தரங்கமான விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. காதில் ஏதேனும் பிரச்னை வந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். தான், பார்க்காமல் எந்தவொரு விஷயமும் முடிவு செய்யப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். நான்காம் இடமான ரிஷபத்தில் சனியும் சந்திரனும் இருந்தால் வீடு விஷயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
எந்த ஊரில் இருக்கிறீர்களோ, அந்த ஊரின் வடக்கு, வடகிழக்கு திசையிலேயே வீட்டை வாங்கிப் போடுங்கள். பள்ளி, கோயில், வங்கி அதிகாரிகள் குடியிருப்பு, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு போன்ற இடங்களுக்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. தரைத் தளத்தை மட்டும் தவிர்க்கப் பாருங்கள். இவர்களில் சிலர் 16 வயதிலிருந்தே வீடு பற்றி திட்டமிட்டு செயல்படுத்துவார்கள்.
நீங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே குன்று அல்லது மலை தெரிந்தால் நல்லது. நீங்கள் வாங்கும் இடம் மணல் பூமியாக இருப்பது நல்லது. தாயார் உடல்நிலை எப்போதும் படுத்தியபடி இருக்கும். பைரவரை வணங்கச் சொல்லுங்கள். ஐந்தாமிடமான மிதுனத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்திருந்தால் நாட்டுப்பற்றையும், மொழி, இனப்பற்றையும் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பார்கள். இவர்களின் வாரிசுகள் நீதித் துறையிலும் சாதிப்பவர்களாக இருப்பார்கள்.
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தில் 5ம் வீட்டில் ராகு, கேது, செவ்வாய் இல்லாமல் இருப்பது நல்லது. சென்டிமென்ட்டாக பூர்வீகச் சொத்துகளை விற்காமல் வைத்திருப்பார்கள். குழந்தை பிறந்த உடன் உங்கள் அந்தஸ்தும், வருமானமும் படிப்படியாக உயரும். ஒற்றுமை உணர்வையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் குழந்தைக்கு விதைப்பீர்கள்.
ஆறாம் இடமான கடகத்தில் சனியும் சந்திரனும் இருந்தால் பொதுக் காரியங்கள், அனாதை ஆசிரமங்கள், ஏழைகளுக்கு உங்கள் பணம் சென்றால் நல்லது. இப்படி நல்லவிதமாக செலவு செய்வதே பரிகாரமாகவும் மாறிவிடும். சனி பொதுவாக ஆறில் மறைவது நல்லது. திடீர் பணவரவு, வழக்கில் வெற்றி, அந்நிய மதத்தினரால் லாபமெல்லாம் இருக்கும்.
அலுவலகத்தில் எல்லா விஷயங்களிலும் எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. பலர் சிறுவயதில் தன்னுடைய ஆசிரியரையே தலைமை ஆசிரியரிடம் புகார் கூறும் சூழ்நிலை வரும். தங்கம் வாங்கும்போதும் அதை விற்கும் போதும் கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லையெனில் நஷ்டத்தைத்தான் சந்திப்பார்கள். மூத்த அதிகாரியாக இருந்தாலும் மேலதிகாரியாகவே இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுதல் முக்கியம்.
ஏழாம் இடமான சிம்மத்தில் சனியும் சந்திரனும் இருந்தால் தாமதத் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் வந்த சொந்தங்கள் இவர்களால் பயனடைவார்கள். இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால் ஒரேவயதுள்ள அல்லது தன்னைவிட மூத்த பெண் மனைவியாக அமையும் வாய்ப்பு உண்டு. வார்த்தைகளால் ஏற்படும் மன வருத்தங்களால் மனைவி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரியக்கூடும்.
எட்டாமிடமான கன்னியில் சனியும் சந்திரனும் இடம்பெற்றிருந்தாலும், சனி இப்படி எட்டில் மறைவதும் நல்லதேயாகும். இது நீண்ட ஆயுளைத் தரும். பாதயாத்திரை செல்லும் பக்த கோடி களுக்கு கைங்கரியம் செய்வார்கள். வாகனத்தில் செல்லும்போது தேவையற்று விளையாட்டாகவும், பெருமைக்காகவும் வேகமாகச் செல்லக்கூடாது. விஷ ஜந்துக்களிடம் கவனம் தேவை.
வளர்ப்பு பிராணிகளை வளர்க்கக் கூடாது. கடனை வாங்கி மற்றொரு கடனை அடைக்கக் கூடாது. கையிருப்பைக் கொண்டுதான் கடனைத் தீர்க்க வேண்டும். ஒன்பதாம் இடமான துலா ராசியில் சனியும் சந்திரனும் இருந்தால் திடீரென்று தந்தையார் உயர்ந்த பதவியில் அமர்வார். இங்கு சனி உச்சமாக இருப்பதால் பெரும் நீதிமானாக விளங்குவார்கள். வாழ்வின் அடிப்படை தேவைக்கெல்லாம் எப்போதும் பிரச்னை இருக்காது.
நாட்டு நிர்வாகம் உண்டு. ஆனால், வீட்டு நிர்வாகம் தெரியாது. குடும்பத்திலுள்ள உள்நிர்வாகங்களில் ஈடுபாடு காட்ட மாட்டார்கள். அரசாங்க விஷயங்களை கையாளும்போது சரியான ஆலோசகரை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனியும் சந்திரனும் இடம்பெற்றிருந்தால் எங்குபோய் வேலைக்குச் சேர்ந்தாலும் சேர்ந்த உடனேயே அலுவலகத்தில் சீர்திருத்தங்களைத் தொடங்கி விடுவீர்கள். ஆணவமில்லாத அதிகாரம் உங்களிடம் எப்போதும் இருக்கும்.
சந்திரனுடைய கலா தத்துவமும், கற்பனையும், சனியின் கடின உழைப்பும், அசட்டுத் தைரியமும் ஒருசேர சங்கமிக்கும். இரு சக்கர வாகனம் சர்வீஸ் சென்டர், லாட்ஜ், ஹோட்டல், ஃபைனான்ஸ், பீங்கான் பொருட்கள் தயாரித்தல், மசாலா தூள், வாசனை திரவியம், சுரங்கப்பணி, நகைக்கடை வைத்தல் என்று குறிப்பிட்ட துறைகளில் கால் பதிக்க நல்ல நிலைக்கு வந்து விடலாம்.
பதினோராம் இடமான தனுசு ராசியில் சனியும் சந்திரனும் சேர்க்கை பெற்றிருந்தால் மூத்த சகோதர, சகோதரிகள் ஓரளவிற்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மார்க்கெட், ஏஜென்சி எடுத்தல், வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்வார்கள். அலுவலக அரசியல் விவகாரங்களில் அளவுக்கு அதிகமான தலையீட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனியும் சந்திரனும் அமர்ந்தால் முக்கியமாக தாமதத் திருமணத்தை அளிக்கும். இருமுறை திருமணமாகும் வாய்ப்பும் உண்டு. நிச்சயதார்த்தத்தோடு நின்று போனவர்களை வாழ்க்கைத் துணைவராகக் கொள்வது நல்லது. சொந்த ஊர், குல தெய்வ வழிபாடு போன்றவற்றிலெல்லாம் மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள். லக்னாதிபதியே உங்களுக்கு விரயாதிபதியாக வருவதால் மனசுக்கு பிடித்தவர்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள்.
சனி சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள் முடிவெடுத்த பிறகு சரியா? தவறா? என்று யோசிப்பார்கள். தன் விஷயத்தில் தடுமாற்றமும் பிறர் விஷயத்தில் தெளிவும் இருக்கும். எனவே, பலசமயம் சொந்த வாழ்க்கை குழப்பமும், முரண்பாடும் உள்ளதாக இருக்கும். மேலும், இவ்விரு கிரகங்கள் பகையோ, நீசமோ அடையும். எதிர்மறை பலன்கள் கிடைக்கும். அது நேர்மறையாக மாற வேண்டுமெனில் தஞ்சாவூர் மாமணிக்கோயிலில் அருளும் நீலமேகப்பெருமாளைத் தரிசித்து வாருங்கள். அமர்ந்த கோலத்தில் நீலமேகப் பெருமாள் அருள் பொங்கக் காட்சியளிக்கிறார்.
தேவி பூதேவி சமேதராக அழகு பொலியத் தோன்றும் இவரது காலடியில் தஞ்சகன் சரணடைந்திருக்கிறான். நீலமேகப் பெருமாள் தஞ்சை நகரில் மணிமுத்தாறு நதிக்கரையிலும், மணிக்குன்றப் பெருமாள்களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள், நிவாசபுரம் செவப்ப நாயக்கன் குளம் அருகிலும் கோயில் கொண்டிருந்தார்கள் என்றும், பிற்கால நாயக்க மன்னர்களால் இந்த மூன்று பெருமாள்களும் இப்போதைய இடங்களில் மறு நிர்மாணம் செய்யப்பட்டதாகவும் சரித்திரம் கூறுகிறது.
வெளிப் பிராகாரத்தை வலம் வந்தால், தலமரத்தை தரிசிக்கலாம். அதன் கீழே நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றன. அடுத்து செங்கமலவல்லித் தாயார் தனியே சேவை சாதிக்கிறார். தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரைப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
(கிரகங்கள் சுழலும்)
ஓவியம்: மணியம் செல்வன்
|