தரமணி



குங்குமம் விமர்சனக்குழு

விடுதலையுணர்வு கொண்ட ஒரு பெண்ணும், கட்டுப்பெட்டி இளைஞனும் வாழ்க்கையில் இணைந்தார்களா... அவர்களின் தேவைகள்... தவறுகளை உணர்ந்தார்களா என்பதே ‘தரமணி’. ‘சமூகம் இப்படித்தான் இருக்கு’ என்று நொந்தபடி பதிவு செய்வது ஒரு வகை. ‘சமூகம் இப்படியும் இருக்கலாமே’ என்று காட்ட முற்படும் சினிமா இன்னொரு வகை. இவ்விரண்டையும் சேர்த்துப் பயணிக்கும் முயற்சிதான் கதை. ஆங்கிலோ - இந்திய குடும்பத்தில் மகனுடன் தனித்து வாழும் இளம்தாய் ஆண்ட்ரியா.

காதலில் வகையாக ஏமாற்றப் பட்டதுடன் சில குற்ற உணர்வுகளால் திரியும் இளைஞன் வசந்த் ரவி. ஐடி வேலைப் பின்புலத்துடன் அன்றாட வாழ்க்கையை கெத்தாக அணுகும் ஆண்ட்ரியாவுக்கும், அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்குக்கூட முற்படாத சாதாரண இளைஞனுக்கும் இடையிலான உறவும், சிக்கல்களும் அது ஏற்படுத்தும் விளைவுகளுமே முக்கியப்பகுதிகள்.

காதல் பற்றித்தான் இப்படமும் பேசுகிறது. ஆனால், நாம் பார்த்து சலித்துப்போன காதல் அல்ல. கதைக்களத்தின் வழியாக சமகால சமூக - அரசியல் சிக்கல்களையும் பக்குவமாக பகடி செய்தது கச்சிதம். ஐடி துறையின் இருள் சூழ்ந்த பக்கங்கள், காவல்துறையின் மறுபக்கங்கள் தொடங்கி பணமதிப்பு நீக்க நடவடிக்கை வரை கோபங்கள், நையாண்டி, நக்கல்கள், சிக்கல்கள், ஆதங்கங்களை திரைமொழியிலும், வாய்மொழியிலும் கதையின் போக்கை பாதிக்காது பதிவு செய்த விதம் புதிது.

ஆண்ட்ரியா, வசந்த் ரவி செய்தது எல்லாம் சரியா, தவறா என்றெல்லாம் நிறுவ முற்படாமல், கதாபாத்திரங்களின் போக்கிலேயே உளவியலுடன் திரைக்கதையை நகர்த்தியது நேர்மையானது. ஒரு பக்கம் டால்பின் காட்சிகளில் கவித்துவம்... மறுபக்கம் கெட்ட வார்த்தைகளை கடக்காமல் வாழ முடியாத யதார்த்தம்... இன்னொரு பக்கம் காதல்-காமத்தேடல் சார்ந்த குற்றங்களும், குற்ற உணர்வுகளும்... மற்றோர் பக்கம் குழந்தையின் கண்களுக்கு சமூகம் காட்டிடும் அவலங்களை எல்லாம் ‘தில்’லாக நம் முன் வைக்கிறார் ராம்.

தனக்குக் கிடைத்த அற்புத வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் ஆண்ட்ரியா. அவரது திரையுலக வாழ்க்கையில் இதுேவ முக்கிய படைப்பு. வசந்த் ரவி புதுமுகமா! நம்ப முடியவில்லை. உறுத்தாத வகையில் சிக்கல்மிக்க கதாபாத்திரத்தை கவனித்துக் கொண்டதே அவரது க்யூட், அழகு! அலைபாயும் இளம்பெண் அஞ்சலி, ரயில் நிலைய போலீஸ் அழகம்பெருமாள், குட்டிப்பையன் ஏட்ரியன் போன்றவரின் பங்களிப்பு, நடிப்பு எல்லாமே சிறப்பு.

யுவனின் பாடல்கள், மறைந்த நா.முத்துக்குமாரின் வரிகள் படத்திற்கு வலு. மொத்த கேன்வாஸையும் இடையூறு இன்றி அழகாக்குகிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. பெண்ணை மையமாகக் கொண்ட படைப்பு என்ற ரீதியில் பார்க்கத் தொடங்கிய பார்வையாளர்களுக்கு, ஒரு கட்டத்தில் ஆணின் பார்வை வழி நிறைவை நோக்கி நகர்ந்ததில் ஏமாற்றமே!

தியேட்டரில் பார்வையாளர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் ராமின் வாய்ஸ் ஓவர் முயற்சி வெற்றி பெற்றாலும் கூட, படம் முடிந்த பின்பு காட்சிகளைக் காட்டிலும் ராமின் குரல் ஏற்படுத்திய தாக்கத்தை அதிகமாக உணர முடிவது கொஞ்சம் பின்னடைவே! சம காலத்திய தமிழ் சினிமா ஒன்றை ரசனையுடன் அணுகும் வாய்ப்பை நிறைவாக வழங்குகிறது தரமணி.