பொதுவாக எம்மனசு தங்கம்
குங்குமம் விமர்சனக்குழு
ஊரின் நலனுக்காக உழைக்கும் உதயநிதியை ஊரை விட்டு விரட்ட நினைக்கிறார் பெரிய தலைக்கட்டு பார்த்திபன். இந்த சதியை உதயநிதி முறியடிப்பதே ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. எல்லாப் புகழும் தனக்கே கிடைக்க வேண்டும் என விரும்புகிறவர் பார்த்திபன். பக்கத்து ஊர் திருவிழாவில் தன் மகளுக்கு காது குத்தி மொட்டையடிக்க முடியாத கோபத்தை மனத்தில் வஞ்சகமாக நிறுத்தி, அந்த ஊரையே காலி செய்ய நினைக்கிறார்.
அதற்கான வழிகளில் பார்த்திபன் தீவிரமாக முற்படும்போதெல்லாம் வழி மறிக்கிறார் உதயநிதி. தன் ஊருக்குத் தேவையான அத்தனைத் தேவைகளையும் நிறைவேற்றப் பாடுபடுகிறார். அவரையும் ஊரை விட்டு துரத்த முடிவெடுக்கிறார் பார்த்திபன். அவரின் சதித்திட்டங்களில் இருந்து தப்புகிற உதயநிதி, பார்த்திபனின் மகளையே(!) காதலிக்கிறார். மகளை பிரிக்கப் பார்க்கிறார்.
உதயநிதி தன் காதலையும், ஊர் மக்களையும் பார்த்திபனிடமிருந்து காப்பாற்றினாரா என்பதே மீதிக் கதை. எல்லா ஹீரோக்களும் சம்பிராதயமாக நடிக்கும் ‘கிராமத்து காதல் கதை’யில் இது உதயநிதியின் கோட்டா! அளவெடுத்தது மாதிரி அற்புதமாகப் பொருந்துகிறார். சூரியோடு பார்ட்னராக சேர்ந்து கொண்டு அவர் படம் மொத்தமும் உலா வரும்போது சிரிப்பு மேளா. என்ன நடந்தாலும் பார்த்திபனின் கொட்டத்தை முறியடிக்க அதிரடியாக சலம்புவதாகட்டும், வெளிநாட்டுக்கு போனாலும் ஊருக்கு வந்து விட்ட இடத்தை பிடிப்பதிலாகட்டும், பக்காவாக ஆட்டம்பாட்டத்தில் சிறப்பதிலாகட்டும்... உதயநிதி வெளுத்துக்கட்டுகிறார்.
நிவேதா பெத்துராஜ் அழகு முகம்! நல்ல உயரத்தில், பாவாடை தாவணி, பட்டுப்புடவை என அனைத்திலும் அழகும் பொலிவும் ததும்ப... ஆஹா! பொண்ணு கொஞ்சம் நடிப்பையும் சேர்த்து கற்றுக் கொண்டால் இன்னும் பக்கா! உதயநிதியின் சேட்டை கலாட்டடாக்களுக்கு சரியான பக்கவாத்தியமாக சூரி. இரண்டு பேரும் சேர்ந்து புறப்பட்டாலே காமெடிக்கு கண்டிப்பாக உத்தரவாதம். சீனுக்குச் சீன் சிரிக்க வைத்தால் போதும் என இறங்கி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தளபதி பிரபு.
கண்களால் உருட்டி விரட்டி மிரட்டாமல் வார்த்தை சுழற்றியே வில்லத்தனம் காட்டுகிறார் பார்த்திபன். உதயநிதி -பார்த்திபன் வரும்போதெல்லாம் அந்த வார்த்தை சாடல்கள் ரசிக்கிற வகை. நக்கலும், நையாண்டியுமாக காமெடியன்களையே கலவரப்படுத்தும் விதமாக கலகலப்பை கொண்டு வருகிறார்கள். பார்த்திபனின் கைத்தடி மயில்சாமியும் கூடுதல் கலகல. ஊர்த்தலைவர் சுந்தர் மனதில் பதிகிறார்.
படத்தின் எல்லா இக்கட்டான சூழ்நிலைகளையும், ஒரு சிரிப்பு பன்ச் அடித்து முடித்து வைப்பதில் தளபதிபிரபு தேறுகிறார். டி.இமானின் இசை ரொம்பவும் இதம் - பதம். ‘என்னான்னு சொல்வேன்’, ‘சிங்கக்குட்டி நீதானே’, ‘அம்மணி நீ’ பாடல்கள் யுகபாரதியின் வரிகளில் மெலடியில் மின்னுகிறது. பாலசுப்ரமணியெமின் கேமிரா வகையாக தோள் ெகாடுக்கிற பங்களிப்பு. கிராமமும், திரைக்கதையின் காமெடி ட்ரீட்மெண்ட்டும் ‘பொதுவாக எம்மனது தங்க’த்தை ஓ.கே. ஓ.கே சொல்ல வைக்கிறது.
|