தன் சினிமா பயணத்தில் அரை செஞ்சுரி அடிக்கிறார் அஜித். அதையும் அதிரடியாக அடித்திருப்பது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் ‘மங்காத்தா’வில் புலனாகிறது. படத்தின் டிரெய்லர்கள் தியேட்டர்களை அதிர வைத்தும் ‘அதென்ன அதிரடி..?’ என்று அப்பாவியாகக் கேட்பவர்களுக்காக இந்தச் செய்தி. படம் முழுக்க நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார் அவர்.
தங்கள் மைல்கல்லாக அமையும் படத்தில் இன்னும் அழகாக, இன்னும் நல்லவனாக ஹீரோக்கள் தோன்ற விரும்பும் க்ளிஷேவை உடைத்து... கெட்டவனாக, வெள்ளி முடியுடன் அஜித் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பது, ஹாலிவுட்டில் மட்டுமே நாம் பார்த்து வியந்திருக்கும் அதிசயம். அப்படி வெளிப்படையாக இருப்பதுவே அவரது அசாத்திய பலம். ‘மங்காத்தா’ பற்றி மனம் திறந்தார் அஜித்...
‘‘இந்த 50, 100 எல்லாம் வெறும் நம்பர்ஸ்தான். இருந்தாலும் 50வது படம் ஒரு மைல்ஸ்டோன்ங்கிறதை மறுக்கிறதுக்கில்லை. அதனாலயே அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசத்தைக் காட்ட நினைச்சேன். அது என் பயணத்தில ஒரு திருப்புமுனையைத் தரணும்னு ஆசைப்பட்டேன். அந்த மாற்றத்துக்கு எந்த முகமூடியும் தேவைப்படாம, நான் நானாக வரணும்னு நினைச்சேன்.
ஒரு உண்மையைச் சொல்லணும்னா, இப்படி நடிக்க நான் காத்திருந்தேன்னு சொல்லலாம். அதனாலதான் இது 50வது படமா அமையணும்னு விரும்பினேன்னும் சொல்லலாம். என்னால காலேஜ்ல போய் படிச்சு ஒரு பெண்ணைப் பார்த்து ‘ஐ லவ் யூ...’ சொல்லி இனிமே நடிக்க முடியாது. என் வயசுக்கேத்த வேடம் வேணும். அமிதாப் ஹீரோவானப்ப அவர் கூட தர்மேந்திரா, ஜிதேந்திரா, ராஜேஷ் கன்னான்னு ஏகப்பட்ட ஸ்டார்கள் இருந்தாங்க. ஆனா இன்னைக்கும் நடிகனா அமிதாப் மட்டுமே இருக்கார். ஏன்னா, தன் வயசுக்கேத்த வேடங்களை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கறார்.
அதனாலதான் என் நடுத்தர வயசுக்கேத்த ஒரு கேரக்டருக்காகக் காத்திருந்தேன். நான் எப்படி இருப்பேனோ, அப்படியே இருக்கிற ஒரு தோற்றம் ‘மங்காத்தா’வுல கிடைச்சது. வெங்கட்பிரபு இந்தக் கேரக்டருக்கு முதல்ல என்னை யோசிக்கவேயில்லை. சத்யராஜ், விவேக் ஓபராய்னு அவர் சாய்ஸ் வச்சிருந்தார். இது வேணும்னு நானே ஆசைப்பட்டுத்தான் இப்படி நடிச்சேன். இது என் நடிப்புக்கான மைல்ஸ்டோன்ங்கிறது எனக்குப் பெருமைதான்..!’’
‘‘இருந்தாலும் முழுக்க கெட்டவனா வர்றது சரியான தேர்வா..?’’

‘‘நல்லவன், கெட்டவன்னு தனித்தனியா யாருமே இல்லை. இந்தப்படத்தில, ‘இவன் சின்ன வயசில இப்படி இருந்தான். இவன் அம்மா இப்படி இருந்தாள்... அதனால இவன் இப்படி கெட்டவன் ஆனான்’ங்கிற பூசிமெழுகல் இல்லாம அப்பட்டமான மனிதனா வர்றேன். ‘அவன் அப்படித்தான்’ங்கிற நேர்மை இருந்தது அந்தக் கேரக்டர்ல. அதை ‘கெட்டவன்’னு சொல்றதைவிட ‘பேராசைக்காரன்’னு சொல்லலாம். இது எல்லா மனுஷங்களுக்குள்ளும் கொஞ்சமாவும், நிறையவும் இருக்கிற குணம்தான். அதை காம்ப்ரமைஸ் இல்லாம அப்படியே அப்பட்டமா சொல்லியிருக்கோம்.
ரசிகர்கள் புத்திசாலிகள். அவங்களுக்கு என்ன கொடுக்க நினைக்கிறோமோ அதைத் தெளிவுபடுத்திட்டோம்னா, அவங்க அதை ஏத்துப்பாங்க. அதை என்னோட ‘வரலாறு’ படத்திலேயே பார்த்திருக்கேன். அதனாலதான் என் கேரக்டரை மறைச்சு வைக்க விரும்பலை...’’
‘‘இந்தப்பட ஷூட்டிங்ல கேரவனுக்குள்ளேயே நீங்க போகலைன்னு பிரபு சொன்னார். சின்னப்பசங்க டீம்ல நீங்க எப்படி ஜெல்லானீங்க..?’’
‘‘பொருந்தாத இடத்தில பத்து நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது. இந்த டீம்ல கிட்டத்தட்ட 200 நாள் இருந்திருக் கேன்னா, எந்த அளவுக்கு இவங்களை நான் நேசிச்சிருப் பேன்னு புரிஞ்சிக்கலாம். நான் தேடிய என் கேரக்டர் கிடைச்ச பிறகு அங்கே இருக்கிறதைவிட எனக்கு வேறு என்ன வேலை..? ஆக்ஷனோட ஒரு போலீஸ் ஆபீஸர் கேரக்டருக்கு நாகார்ஜுனா டேட்ஸ் ஒத்து வராம போனப்ப, எனக்கு அர்ஜுன் சார்தான் ஞாபகத்துக்கு வந்தார். நான் சொன்னதுக்காகவே வெங்கட் பிரபு கேட்டதும் கதைகூட கேட்காம நடிக்க ஒத்துக்கிட்டார். அந்த ஒத்துழைப்புக்காகவே அவர் நடிக்க வந்தப்ப, எனக்கான போர்ஷன் இல்லாட்டியும் நான் ஷூட்டிங் போனேன். அவர் ஆக்ஷனும், என் பைக் ரேஸும் இணைஞ்ச கிளைமாக்ஸை ஒன்பது நாள் எடுத்தோம்...’’
‘‘50வது பட ரிலீஸ் நேரத்துல உங்க ரசிகர் மன்றங்களைக் கலைச்சிட்டீங்களே..?’’
‘‘மன்றங்கள்தான் வேண்டாம்னு சொன்னேன். ரசிகர்கள் வேண்டாம்னு சொல்லலை. என் ரசிகர்கள் எப்பவும் என்கூட இருக்காங்க. நான் சம்பளம் வாங்கற நடிகன். என் நடிப்பு முடிஞ்சதும் போய் என் குடும்பத்தைக் கவனிக்கிறேன். என் ரசிகர்களும் அவங்க வேலையை, அவங்க குடும்பத்தைப் பார்க்கணும். எனக்கு வர்ற பிரச்னைகள் அவர்களைப் பாதிக்கக்கூடாது. மன்றம் வச்சாதான், கொடி கட்டினாத்தான் ரசிகன்னு அடையாளம் இல்லை. நல்ல படம் தனக்கான விளம்பரத்தைத் தானே தேடிக்கும். அப்படி ஒரு படம்தான் ‘மங்காத்தா’. அதை ரசிக்கிற எல்லாருமே என் ரசிகர்கள்தான்...!’’
வேணுஜி