நிகில் முருகன்தான் ஹீரோ!



பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் மென்மையான வேடங்களில் நடித்து வந்த சாருஹாசனை ‘தாதா 87’ படத்தில் வில்லனாகக் காண்பித்த பெருமை இயக்குநர் விஜய்.ஜி.க்கு உண்டு. கதைத் தேர்வு, கதை நாயகர்கள் என எல்லாவற்றிலும் வித்தியாசமாகத் தேர்வு செய்யும் இயக்குநர் விஜய்.ஜி., இந்த முறை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பப்ளிசிட்டி கலைஞர் நிகில் முருகனை ‘பவுடர்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இப்போது படப்பிடிப்பில் இருக்கும், மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்துக்கும் இவர்தான் இயக்குநர்.

‘பவுடர்’ என்ன மாதிரியான படம்?

இது நான்கு வகை கதைகளைக் கொண்ட படம். எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கும் காதல், கோபம், வறுமை, வருத்தம் என எல்லாம் சேர்ந்ததுதான் ‘பவுடர்’. உலகத்தில் பவுடர் பூசிய முகங்கள் நிறைய உள்ளன. சொல்லப்போனால் எல்லோருமே பவுடர் முகங்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இது முகத்தில் போடும் பவுடர் அல்ல. நம்முடைய கேரக்டரை வெளிப்படுத்தும் பவுடர். நம்முடைய சமூகத்தில் ஒருவருடைய அங்க அடையாளங்கள், நிறத்தை வைத்து மதிப்பீடு செய்கிறார்கள். ஒருவர் கருப்பா, பருமனா இருந்தால் அவரை ரவுடியாக பார்க்கும் போக்கு இருக்கிறது. வெள்ளையா, ஒல்லியா இருந்தால் ஹீரோ மாதிரி இருக்கிறார் என்கிறார்கள்.

இங்கு மனிதர்களை ஒரே நேர்கோட்டில் யாரும் பார்ப்பதில்லை. எல்லோருமே சமமானவர்கள்தான். குள்ளமா இருப்பதோ, உயரமா இருப்பதோ விஷயம் இல்ல. இங்கு எல்லோருமே சராசரி மனிதர்கள்தான் என்பதுதான் ‘பவுடர்’ படத்தோட டைட்டிலுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்.

புது ஹீரோ நிகில் முருகன் என்ன சொல்கிறார்?

‘தாதா 87’ படம் இரண்டு மூன்று கதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். அதேபோல் இதுல கிளைக் கதைகள் இருக்கிறது. நிகில் முருகன் இந்தப் படத்தில் வருவதற்கு அவருடைய வசீகரமான குரல் ஒரு காரணம். அடுத்து, அவருடைய புகழ் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். சினிமா என்பதே விளம்பரம். அதுல நிகில் முருகன் கை தேர்ந்தவர். படங்களுக்கு விளம்பரம் தேடித் தரும் யுக்தியாக இருக்கட்டும், தனிப்பட்ட நிகில் முருகனாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்தவர். நிகில் முருகனின் தாத்தா டி.எஸ்.சொக்கலிங்கம் ‘தினமணி’ நாளிதழின் முதல் ஆசிரியராவார்.

வித்தியாசத்தை விரும்பும் எனக்கு வித்தியாசங்களால் கவனிக்க வைக்கும் நிகில் கதைக்கு பொருத்தமாகத் தெரிந்தார். அப்படித்தான் அவர் ஹீரோவா உள்ளே வந்தார்.
சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கும் எல்லோருமே நடிகர்கள். யாராவது எனக்கு நடிக்கத் தெரியாதுன்னு சொன்னா அது சும்மா. எல்லோருக்குள்ளும் ஒரு நடிகர் இருப்பார். ஒரு இசையமைப்பாளர் டியூன் போடும்போது நடிகரை மனதில் வைத்துதான் டியூன் போடுவார். பாடலாசிரியர் நடிகரை மனதில் வைத்துதான் பாட்டெழுதுவார். டப்பிங் கலைஞரும் ஒருவிதத்துல நடிகர்தான். லிப் சிங் எப்படி இருக்கணும் என்பதை தனக்குத்தானே பேசிப் பார்த்து நடிப்பை வெளிப்படுத்துவார்.

இன்னொரு விஷயம் சொன்னால் நீங்க அதை ஏத்துக்குவீங்க. ‘டிக் டாக்’ செயலி மூலம் இந்த உலகமே வயசு வித்தியாசம் இல்லாம தாத்தா, பாட்டினு எல்லோருமே நடிச்சது உங்க ஞாபகத்துல இருக்கலாம். அது எல்லோருக்குள்ளும் இருக்கும் நடிப்பார்வமே தவிர வேறொன்றுமில்லை. ‘ஜனகணமன’ பாடத் தெரிஞ்சவங்க, ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடத் தெரிஞ்சவங்க எல்லோருமே இங்கு பாடகர்கள். உலகம் ஒரு நாடகமேடைனு பெரியவங்க சும்மா சொல்லல.

‘வேட்டையாடு விளையாடு’ படத்துல கமல் சார் கேரக்டர் பெயர் ராகவன். இதிலும் ராகவன் என்ற கேரக்டர்ல நிகில் வர்றார். தாடி, மீசைனு அவருடைய கெட்டப் வித்தியாசமா இருக்கும்.
போலீஸ் கேரக்டருக்கு ஏத்த மாதிரி ஃபிட்னஸ் வேணும்னு சொன்னேன். அதுக்கு டயட், ஜிம் என்று உடலைக் கட்டுக்கோப்பா கொண்டு வந்தார். ராகவன் கேரக்டர் போலீஸ் கேரக்டருக்கு என்று இருக்கும் இலக்கணத்தை மீறிய கேரக்டரா இருக்கும். ஃபர்ஸ்ட் லுக் வந்தபோது போலீஸ் கேரக்டருக்கு எதுக்கு தாடி என்று கேட்டார்கள்.

பஞ்சாப்ல தாடி இல்லாத போலீஸ் இல்ல. இந்தியாவுல பல மாநிலங்களில் போலீஸ் சீருடை மாறுபடுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கத்தி வைத்திருப்பது அவர்கள் கலாசாரம். அதே கத்தியை நம்முடைய மாநிலத்தில் வைத்திருந்தால் அது குற்றச் செயல். இந்தப் படம் வெளியானதும் ஒரு நடிகரா நிகில் ஏற்றுக்கொள்ளப்படுவார். இப்போது அவருக்கு சில வாய்ப்புகள் வந்திருப்பதே அவர் நடிகரா ஜெயிச்சுட்டார் என்றுதான் அர்த்தம்.

படத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க?

வித்யா பிரதீப் இரண்டாவது லீட் பண்ணுகிறார். வித்யா வரும் ஒவ்வொரு ஃப்ரேமும் இளம் ரசிகர்களைச் சுண்டி இழுக்கும். முக்கிய வேடத்துல சாந்தினி, அனித்ரா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கம்புலி, ஆதவன் வருகிறார்கள். இவர்களுடைய காமெடி பிரமாதமா ஒர்க் அவுட்டாகியிருக்கு. கதைக்கு திருப்புமுனை தரும் கேரக்டர்ல நான் வர்றேன்.

மியூசிக் யார் பண்றாங்க?மியூசிக் லியாண்டர் லீ மார்ட். சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் மியூசிக் டைரக்டரை பாராட்டாத விருந்தினர்களே இல்லை. பிரமாதமான பாடல்களை கொடுத்துள்ளார். பின்னணி இசை பேசப்படும். என்னுடன் ‘தாதா 87’ல் ஒர்க் பண்ணியவர் என்பதால் என்னுடைய ரசனை என்னன்னு அவருக்கு தெரியும்.  

ஒளிப்பதிவு ராஜபாண்டி. என்னுடைய படங்களில் தொடர்ச்சியா வேலை செய்துவருகிறார். அவருடைய ஒர்க்கில் எப்போதும் வித்தியாசம் இருக்கும். படம் வெளியானதும் இந்தப் படம் எப்படி எடுத்தார்கள் என்ற கேள்வி வரும். அந்த வியப்பை ஏற்படுத்தியதில் ராஜாவின் பங்கு இருக்கும். எடிட்டர் குணா. ‘ஜி மீடியா பிலிம் கார்ப்ப ரேஷன்’ ஜெய விஜய் தயாரித்திருக்கிறார். இணைத் தயாரிப்பு மோகன்ராஜ்.

இரண்டு சண்டைக் காட்சிகள். பாடல்களை நானே எழுதியுள்ளேன். ‘நோ சூடு, நோ சொரணை...’ பாடல் பல லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. இது ஒரு இரவில் நடக்கும் கதை. சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  

நடிப்புக்கு நோ சொல்லிவந்த மோகனை என்ன சொல்லி நடிக்க அழைத்து வந்தீர்கள்?

நல்ல கதை, திரைக்கதை கொடுத்தேன். அதுதான் ‘ஹரா’வா வந்து நின்றது. பெரிய இயக்குநர்கள் பலர் முயற்சித்தும் ஓகே சொல்லாமல் இருந்தார். நல்ல கதைக்காக வெயிட் பண்றார்னு தெரிஞ்சது. இரண்டு வருடங்களுக்கு மேல் மோகன் சாருடன் டிராவல் பண்ணினேன். ‘ஹரா’ படத்தோட திரைக்கதை அவருக்குப் பிடிக்கவே ஓகே சொன்னார்.

சமீபத்தில் ‘ஹரா’ சிங்கிள் ‘கயா முயா...’ வெளியிட்டோம். வெளியான ஒரே நாளில் பல லட்சம் மக்கள் பார்த்து வரவேற்பு கொடுத்தார்கள். பக்கா கமர்ஷியல் படமான அந்தப் படம் அடுத்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்.

எஸ்.ராஜா