புதுசு கண்ணா புதுசு!



இதுவரை புழக்கத்தில் இருந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் புதிய நாடாளுமன்றத்தை மத்திய அரசு கட்டியுள்ளது.பழைய நாடாளுமன்றக் கட்டடம் 1927ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டடத்தில் இக்காலத்துக்கு ஏற்ப போதுமான வசதிகள் இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

காரணம், சுதந்திரத்திற்கு முன் பாராளுமன்ற கட்டடம் கட்டப்பட்டபோது, பாதாள சாக்கடை,  குளிரூட்டும் வசதி, தீ பாதுகாப்பு, சிசிடிவி, ஆடியோ வீடியோ ஆகியவை  கவனத்தில் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். இப்போது மாறிவரும்  காலத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற வளாகத்தில் அவை சேர்க்கப்பட்டாலும்,  கட்டடத்தில் ஈரப்பதம் போன்ற பிரச்னைகளால் தீ விபத்து ஏற்படும் அபாயம்  அதிகரித்துள்ளது.

தவிர சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்  நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்ட போது, நில அதிர்வு மண்டலம் - 2ல் தில்லி  இருந்தது. ஆனால், இப்போது நான்காம் நிலையை தில்லி எட்டியுள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்ட முடிவு செய்த அரசு, அதற்கான பணிகளை 2020ம் ஆண்டு டிசம்பர் 10இல் தொடங்கியது.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் இப்போது புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மொத்த திட்டத்திற்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

ராஜ்பத்திற்கு அருகேயுள்ள பகுதியே சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவையும் இந்த சென்ட்ரல் விஸ்டாவின் கீழ் வருகின்றன. புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை கட்டடம் தேசிய பறவையான மயில் என்ற கருப்பொருளிலும்; மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற கருப்பொருளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பழைய மக்களவையில் அதிகபட்சமாக 552 பேர் மட்டுமே அமர முடியும். புதிய அவையில் 888 இருக்கைகள் உள்ளன. அதேபோல் பழைய மாநிலங்களவை கட்டடத்தில் 250 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும் நிலையில், புதிய அவையில் 384 பேர் அமர முடியும். நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின் போது 1272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.

 நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு மட்டுமே சுமார் ரூ.971 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, அதன் கட்டுமானப் பொறுப்பை டாடா நிறுவன குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
 புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு முக்கோண வடிவில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய கட்டடத்தினுள் அதிநவீன அரசியலமைப்பு மண்டபம் (State-of-the-art Constitutional Hall), நவீன ஆடியோ - விஷுவல் வசதிகளுடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அரங்குகள், எம்பிக்கள் ஓய்வெடுக்கும் அறைகள், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவகம், நூலகமும் இடம் பெற்றிருக்கின்றன. பாதுகாப்புத் தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக நவீன ஸ்மார்ட் கார்டு, உறுப்பினர்களின் முக அடையாளத்தைக்கொண்டு உள்ளே அனுமதிக்கும் தொழில்நுட்பம், 300 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

 மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரின் பயன்பாட்டுக்காக சுமார் 64 கழிவறைகள் தரைத்தளத்துக்குக் கீழே அமைக்கப்பட்டிருக்கின்றன. வெளிப்புறத்தைப் பொறுத்தவரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு விசாலமான பார்க்கிங் பகுதி, சுற்றிலும் பசுமையான புல்வெளிகள், புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகள், 900க்கும் மேற்பட்ட மின் விளக்குக் கம்பங்கள், பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை மணற்கல் தூண்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

 பிரதான ராஜபாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாதையின் இருபுறங்களிலுமுள்ள கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, அதில் 16 பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  பிரதமர், குடியரசுத் தலைவருக்கான சிறப்பு நுழைவாயில், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவருக்கான நுழைவாயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நுழைவாயில்கள், இரண்டு பொது நுழைவாயில்கள் என மொத்தம் ஆறு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் எனவும், பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வலுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஜான்சி