குட்டி ஸ்டோரி...கேரிகேச்சர் ஐடியா இவருடையதுதான்! மாஸ்டர் சீக்ரெட்ஸ்



குஷியில் இருக்கிறார் ‘மாஸ்டர்’ விஜய். அனிருத்தின் இசையில், அவரின் மாஸ் ஹிட் வாய்ஸில் பாடியிருக்கும் ‘குட்டி ஸ்டோரி...’ பாடல், யூ டியூப்பில் 13 மில்லியன் வியூஸ், பத்து லட்சம் லைக்ஸை அள்ளியிருக்கிறது. ‘பிரமாதமான கேரிகேச்சர். குட்டிக் குட்டி கார்ட்டூன்ஸ், அனிமேஷன்ஸ். செம ஃபன் விஷுவல்...’ என ஹேப்பி யாகியிருக்கிறார் விஜய். இன்னொரு பக்கம்  அனிருத், ‘‘என் இசைப்பயணத்தில் இந்த சிங்கிள், மோஸ்ட் கிரியேட்டிவ் மேக்கிங். தி பெஸ்ட் ஒர்க்...’’ என ஆச்சரியமாகிறார்.

கோலிவுட்டில் பாராட்டுகளைக் குவித்திருக்கும் இந்தப் பாடலின் விஷுவல் ஐடியாவுக்கு சொந்தக்காரர் ‘மாஸ்டர்’ படத்தின் அசோசியேட்டான லோகி என கை நீட்டுகிறது யூனிட்.‘‘பிப்ரவரி - 14ல ‘மாஸ்ட’ரோட சிங்கிள் லிரிக் வீடியோ வெளியிடலாம்னு முடிவானதும், இயக்குநரான லோகேஷ் அண்ணாகிட்ட இந்த ஐடியாவைச்  சொன்னேன்.

பொதுவா சிங்கிள்ஸ்னா லிரிக் வீடியோவாதான் இருக்கும். ஸோ, வித்தியாசமா, கிரியேட்டிவ்வா படத்தோட வரிகளுக்கு தகுந்தா மாதிரி கேரிகேச்சர், அனிமேஷன்ஸ் பயன்படுத்தலாம்னு சொன்னதும், லோகேஷ் அண்ணா ஹேப்பியாகிட்டார். இன்னொரு பக்கம், ‘சிங்கிள் ரிலீஸ் பண்ண ரெண்டு வாரம் கூட டைம் இல்லையே... முடியுமா’னு இழுத்தார்.

யூனிட்ல பேசினோம். விஜய் சாரே கேரிகேச்சர்ல ஆடப்போறார்... பாடப்போறார்னு சொன்னதும் தயாரிப்பு தரப்பும் ஹேப்பி. கோ புரொட்யூசர் ஜெகதீஷ் சார், உடனே என்னை அனிருத், சோனி மியூசிக் டீம்கிட்ட அழைச்சுட்டுப் போனார்.

அவங்களுக்கும் கான்செப்ட் பிடிச்சிருந்தது.எல்லாருமே சொன்ன வார்த்தை, ‘இன்னும் பத்து நாட்கள்தானே இருக்கு..? 2டியில் அனிமேஷனுக்கு டைம் எடுக்குமே...’ என்பதுதான்...’’ சின்னதாக கண்சிமிட்டிவிட்டு லோகி தொடர்ந்தார்:

‘‘கோவைல இருக்கற ரியல் ஒர்க் ஸ்டூடியோதான் ‘மாநகரம்’ படத்துக்கு சிஜி பண்ணினாங்க. அவங்க ‘கோச்சடையான்’ மாதிரி ‘ரண தீரன்’னு ஒரு அனிமேஷன் ஷார்ட் ஃபிலிம் பண்ணினவங்க. ஸோ, ரியல் ஒர்க் சிவா அண்ணன்கிட்ட ஐடியாவை சொன்னோம். ‘கேரிகேச்சரா கொண்டு வந்துடலாம். ஆனா, 2டியில் பண்ணினா டைம் எடுக்கும். நாம 3டியில் ட்ரை பண்ணிட்டு அதை 2டியா கன்வர்ட் பண்ணலாம்...’னு நம்பிக்கை அளித்து வேலையை ஆரம்பிச்சிட்டார்.

பாடல் வரிகளை எழுதினது அருண்ராஜா காமராஜ் சார். அவரோட வரிகளைக் கேட்ட இன்ஸ்பிரேஷன்லதான் எனக்கு இப்படி ஒரு ஐடியா வந்துச்சு.
இந்த வீடியோ மேக்கிங்கின் ஒவ்வொரு ஸ்டெப்பையும் விஜய் சார், ‘what happened? எப்படி வந்திருக்கு?’னு கேட்டு அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்தார். எங்களையும் உற்சாகப்படுத்தினார்.

லோகேஷ் அண்ணாவும் என்கரேஜ் பண்ணிட்டே இருந்தாங்க. நாங்க திட்டமிட்டதை விட ரெண்டு நாட்களுக்கு முன்னாடியே வீடியோ ரெடியாகிடுச்சு. பார்த்த எல்லாரும் ஹேப்பி.அதேமாதிரி யூ டியூப்ல பாடல் வெளியான அடுத்த நொடில இருந்தே ரெஸ்பான்ஸ் வர ஆரம்பிச்சுடுச்சு.

விஜய் சார் பாடினாலே அது ஹிட்டுதான். ஜஸ்ட் நாங்க செஞ்சது அந்த டியூனுக்கு, அவர் குரலுக்கு, அந்த வரிகளுக்கு ஒரு ஃப்ளேவர் தூவினதுதான். ‘ப்ரோ... இது என் கேரியர்ல பெஸ்ட் சிங்கிள்’னு அனிருத் கட்டிப் பிடிச்சார். விஜய் சார் எப்பவும் மறக்க முடியாத ஸ்மைலை சிந்தினார்.

எல்லா கிரெடிட்டும் எங்க டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அண்ணாவுக்குதான் போய்ச் சேரணும். அவர் மட்டும் என்கரேஜ் பண்ணி பக்கபலமா இல்லைனா இது சாத்தியமாகி இருக்காது...’’ நெகிழும் லோகி, மெக்கானிகல் என்ஜினியரிங் முடித்தவர்.‘‘ஸ்கூல் படிக்கும் போதே சினிமா ஆர்வம் வந்துடுச்சு. அப்பவே ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்கியிருக்கேன்.

மெக்கானிகல் என்ஜினி யரிங் படிக்கிறப்ப குறும்படங்கள் இயக்கறதுல தீவிரமானேன். ‘மாநகரம்’ டைம்ல லோகேஷ் அண்ணாவை அப்ரோச் பண்ணினேன். ‘கைதி’யில் அசோசியேட் ஆனேன். இப்ப, ‘மாஸ்டர்’. லோகேஷ் அண்ணா கூட ஒர்க் பண்றது யூனிவர்சிட்டில படிக்கிற மாதிரி. தன் உதவியாளர்களை கூடப் பிறந்தவங்களாதான் ட்ரீட் பண்றார்...’’ நிறைவுடன் சொல்கிறார் லோகி.

மை.பாரதிராஜா